தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்குத் தடை: உயர்நீதிமன்றம் அறிவுரை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802252.jpg

குரு பூசை, அரசியல், சாதி த் தலைவர்களின் வருகைக்கு த் தடை: உயர்நீதிமன்றம்  அறிவுரை
சென்னை: "குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டான் செவ்வாயல் கிராமத்தில், ஒண்டி வீரன் நினைவகத்துக்கு, தமிழ் புலிகள் இயக்கத்தினர், வாகனங்களில் செல்வதை தடுக்கக் கூடாது என, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். சிவகிரி தாலுகாவில், நெற்கட்டும்சேவல் கிராமத்தில், மாமன்னார் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும், பூலித்தேவன் நினைவு அறக்கட்டளை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடியில், தியாகி இமானுவேல் சேகரனின் நினைவகத்துக்கு வருபவர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, விஜயா என்பவர், மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: ஜாதி வர்ணம் பூசப்படாத ஒரே தலைவர், மகாத்மா காந்தி தான். மற்ற தலைவர்களை எல்லாம், எப்படியோ ஒரு வழியில், ஜாதி மற்றும் மத அடிப்படையில், அடையாளம் காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம், ஜாதி தலைவர்களாக சுருக்கப்பட்டு விட்டனர். இதை, அந்த தலைவர்கள் உயிருடன் இருக்கும் போது, நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை, தங்கள் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு ஆற்றிய பங்கை நினைவுகூரும் வகையில், கொண்டாட்டங்களை நடத்துவதாகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருவதாகவும், வாடகை வாகனங்களில் வருவதற்கு, போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் தென் பகுதிகளைப் பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பதற்றம் கொண்டது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால், பதற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும், புதிய தலைவர்கள், கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர், "குரு பூஜை' என்கிறனர். இந்த விழாக்களை, அந்தந்த ஜாதியில் உள்ளவர்கள், தங்கள் பலத்தைக் காட்டும் விதத்தில் செயல்படுகினறனர். விடுதலைப் போராட்ட வீரர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்களை கவுரவிக்க வேண்டும் என்பதில், சந்தேகமில்லை. உண்மையில் பார்த்தால், அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக அவர்களை கவுரவிக்கவில்லை; ஜாதி அடிப்படையில் கவுரவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், பூலித்தேவன், ஒண்டிவீரன், வ.உ.சி., தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கன், கட்டபொம்மன், ராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தியாகி இமானுவேல் சேகரனார், சிவகங்கை மாவட்டத்தில், வேலு நாச்சியார், மருது பாண்டியன், திருச்சி மாவட்டத்தில், முத்தரையர் ஆகியோருக்கு, விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தலைவர்களின் பிறந்த நாள் அல்லது இறந்த நாளை, கொண்டாடுகின்றனர். ஜாதி தலைவர்களாக, இவர்களை சித்தரிக்கின்றனர். இது, அந்த தலைவர்களுக்கு செய்யும் மரியாதை அல்ல. அவர்களை அவதூறு செய்வதாகும். விழாக்கள், கொண்டாட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம், பதற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலையை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை போலீசாரால் தான் எடுக்க முடியும். விழாக்கள், கொண்டாட்டங்களை, ஜாதி தலைவர்கள் தான் நடத்துகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக, நினைவகங்கள் முன், அரசியல் தலைவர்களும் வரிசையில் நிற்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வரும் போது, தேவையின்றி அந்த விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, இது போன்ற கொண்டாட்டங்களின் போது, அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்லாமல் இருப்பதே, சமூகத்துக்கு அவர்கள் செய்யும் பெரிய சேவை. இதைத் தான், இந்த கோர்ட் எதிர்பார்க்கிறது.

குரு பூஜை கொண்டாட்டங்களால், பொதுமக்களுக்கு தான் இடையூறு, இழப்பு ஏற்படுகிறது. எனவே, குரு பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றி, அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், ஜாதி தலைவர்கள் செல்வதற்கும், தடை விதிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்ய, அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதி தலைவர்கள் விரும்பினால், நினைவிடங்களுக்கு செல்லாமல், மரியாதை செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பது என, உதவிகளை செய்யலாம். தங்கள் தொண்டர்களையும், இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். அதன் மூலம், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை, கவுரவம் செய்யலாம். மறைந்த தலைவர்களுக்கு கவுரவம் செய்ய முயற்சிப்பதன் மூலம், இருக்கிற சாதாரண மனிதர்களை தொந்தரவு, துன்புறுத்தல் செய்யக் கூடாது. இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கச்சத்தீவு பற்றிப் பேச வெளியுறவு த்துறை தடை

கச்சத்தீவு பற்றிப் பேச  வெளியுறவு த்துறை தடை
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_791009.jpg
கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ளது. "நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
தடைவிதிப்பு:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதையடுத்து, அந்த தீவு அருகில், நம் மீனவர்கள் மீன் பிடிக்கவோ, அந்தத் தீவில் வலைகளை உலர்த்தவோ கூடாது என, இலங்கை கடற்படை தடை விதித்து வருகிறது. அந்தப் பகுதிக்குச் செல்லும், நம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.நீண்ட நெடுங்காலமாக, கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்தக் கூட, இலங்கை அரசிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. "கச்சத்தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே, அந்தத் தீவை, மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எனினும், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.கச்சத்தீவு விவகாரம் குறித்து, பார்லிமென்ட்டில், சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க., எம்.பி.,யான இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., லிங்கம் ஆகிய இருவரும், சபாநாயகரிடம், நோட்டீஸ் அளித்துள்ளனர்.நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று, கேட்டு இருந்தும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான், கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் பேசுவதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்தம் :

எம்.பி.,க்கள் சார்பில், இதுபோன்ற கோரிக்கைகளுக்காக, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம், சபாநாயகர் அலுவலகம் கருத்துக் கேட்பது வழக்கம்.அது போல், கச்சத்தீவு நோட்டீஸ் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்து, கடந்த, 5ம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின், இணைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர்ஷ் வர்தன் சிரிங்லா என்பவர், பார்லிமென்ட் செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான, கடல் எல்லைகள் எவை என்பது குறித்து, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களில், இரு நாடுகளும் கையெழுத்தும் இட்டுள்ளன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
முடிந்து போனது:

தன் கடல் எல்லைப் பரப்பில், எதையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. இருதரப்பும், ஒப்புக் கொண்ட படியே, எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு செய்ததில், கச்சத்தீவு, இலங்கை கடல் பரப்புக்குள் அமையும் படி ஆனது.எனவே, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி; இந்த விஷயம், முடிந்துபோன ஒன்று; அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது.இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு; நெருக்கமான நட்பு கொண்ட அண்டை நாடாக, இலங்கை இருக்கும் போது, கச்சத்தீவு குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவது, ஏற்புடையது அல்ல. அவ்வாறு, விவாதம் செய்தால், இருநாடுகளின் நட்புறவில், மிகப்பெரிய தர்மசங்கடத்தை, ஏற்படுத்தும். எனவே, எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்க கூடாது. தவிர, இந்த தகவல்கள் எல்லாமே, வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலின் படியே தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இளங்கோவன் எம்.பி.,யிடம் கேட்ட போது, ""ஏற்கனவே நடைபெற்ற, அலுவல் ஆய்வுக்குழுவில், டி.ஆர்.பாலு இப்பிரச்னை குறித்து எழுப்பினார். இன்னொரு முறை, நானும் எழுப்பினேன். எனவே, இந்த பிரச்னையை விட மாட்டோம். இன்னும், நாட்கள் உள்ளன. எப்படியும், பார்லிமென்ட்டில், இந்த பிரச்னையை கிளப்புவோம்,'' என்றார்.
மற்றொரு எம்.பி.,யான லிங்கம், ""நானும் இப்பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென்று, மறுபடியும் வலியுறுத்துவேன்,'' என்றார்.

- தினமலர் தில்லிச் செய்தியாளர் -

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப் பெருந்தொடரியில் தடை

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப்  பெருந்தொடரியில் தடை
துபாய்: வேட்டி அணிந்து சென்ற இந்தியருக்கு மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு
அபுதாபி, ஆக. 4-

வேட்டி அணிந்து சென்ற இந்தியரை மெட்ரோ ரெயிலில் பயணிக்க விடாமல் துபாய் போலீசார் தடுத்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வசிக்கும் 67 வயது முதியவர் தனது மகளுடன் அங்குள்ள எடிசலட் மெட்ரோ ரெயில் நிலையம் சென்றார்.

பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்.

இதைப்போன்ற உடைகளுடன் ரெயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், அந்த முதியவரின் மகளையும் வெளியே விரட்ட தொடங்கினார்.

வேட்டி எங்களின் பாரம்பரிய உடை. இதே உடையுடன் எனது தந்தை பலமுறை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளார் என்று அவரது மகள் மதுமிதா விளக்கிக் கூறியும் காதில் வாங்க மறுத்த அந்த போலீஸ்காரர் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து துபாய் மெட்ரோ ரெயில்வே இயக்குனர் ரமதான் அப்துல்லா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கு எவ்வகை ஆடை கட்டுப்பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. உடலை மறைக்கும் மரியாதையான ஆடையுடன் யார் வேண்டுமானாலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யலாம்.

தற்போது நடந்துள்ள சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலீஸ்காரர் வேட்டியுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியது அவரது தனிப்பட்ட மனநிலையைதான் காட்டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

புதன், 27 மார்ச், 2013

சிங்கள மட்டை வீரர்களுக்குத் தடை!



http://img.dinamalar.com/data/gallery/gallerye_234920569_675919.jpg



சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால், இலங்கை கால்பந்து வீரர்கள், சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்த முடியாது எனவும், அறிவிக்கப்பட்டது. "இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் போட்டியில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, பிரதமர் மன்மோகனுக்கு, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சென்னையில், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, மே, 26ம் தேதி வரை, ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல்., அணிகளில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை நடத்திய இன படுகொலையால், தமிழக மக்கள், பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். போர் குற்ற ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டும் வருகின்றன. இலங்கையின், காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு, இவை சாட்சிகளாக உள்ளன. இலங்கையின், அத்துமீறல்களைக் கண்டித்து,
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_19090.jpeg
Description: http://img.dinamalar.com/imageresizer1.php?img=/gallery/gallerye_011803890_675919.jpg&width=136&height=76
ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள், தமிழகத்தில் நடந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில், இலங்கைக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றுள்ளது. இந்த, நெருக்கடியான சூழலில், இலங்கை வீரர்களை கொண்ட, ஐ.பி.எல்., அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னையில் நடப்பது, போராட்டங்களை தீவிரப்படுத்தும். எனவே, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல்., அணிகளை அனுமதிக்க வேண்டாம் என, ஐ.பி.எல்., அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை வீரர்கள் கொண்ட அணியை சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கடிதத்தில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின், இந்த அதிரடி அறிவிப்பு, நாடு முழுவதும், நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறுகையில், ""பிரதமர் வெளிநாடு சென்றுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம், பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்,'' என்றார். ஆனாலும், அடுத்த சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில், பரபரப்பான திருப்பம் ஏற்பட்டது. நெருக்கடியான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐ.பி.எல்., நிர்வாக குழு, நேற்று மாலை கூடி, ஆலோசித்தது. கூட்டம் முடிந்ததும், ஐ.பி.எல்., தலைவர், ராஜிவ் சுக்லா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மன்மோகனுக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் குறித்து, நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்ளூர் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்துக்கு மதிப்பளித்தும், இலங்கை வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், எந்த அணி சார்பிலும், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள். மாநில அரசு, சில விஷயங்களை தெரிவிக்கும்போது, அதற்கு மதிப்பளித்து, அந்த மாநில அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். அந்த அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து, ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.