அச்சுறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அச்சுறுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூன், 2013

கச்சத்தீவு அருகே போர்க்கப்பல்: இந்திய இறையாண்மைக்கு விடப்படும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு வைகோ கடிதம்

கச்சத்தீவு அருகே போர்க்கப்பல்: இந்திய இறையாண்மைக்கு விடப்படும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு வைகோ கடிதம்

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பது, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது:
தமிழக மீனவர்களின் உரிமை நலன்களைப் பறிக்கும் வகையில், 1974-ஆம் ஆண்டு இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.
இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகச் சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைப் போர்க் கப்பல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் (பிரதமர்) மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி மடல்

எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரி க் கருநாடக முதல்வருக்கு த் தமிழ்ச் சங்கம் கடிதம்

எல்லைப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டருக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தலைவர் கோ.தாமோதரன் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழ்ச்சங்கத்தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகமாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தை சேர்ந்த ஆலம்பாடி, ஜம்புருட்டி, மாருகொட்டாய், பாலாறு எல்லைகிராமங்களை சேர்ந்த 600 தமிழ் குடும்பங்களை,அப்பகுதியில் வெளியேறுமாறு வன அதிகாரிகள் சிலர் மிரட்டியுள்ளனர். அப்பகுதியில் இருந்து காலி செய்யாவிட்டால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழர்களை வன அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, அங்குள்ள நிலையை நேரில் அறிந்துவர தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினரும், கன்னடர்-தமிழர் நல்லிணக்கசமூகநல அறக்கட்டளையின் தலைவருமான ராமசந்திரன் தலைமையில் குழு ஒன்று கொள்ளேகால் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்குள்ள தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறைகளாக வாழ்ந்துவருவதாகவும், அம்மக்களுக்கு கர்நாடக அரசும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பட்டாநிலங்களை வழங்கியுள்ளது. மேலும் அக்கிராமங்களில் சாலைகள், கோயில், பள்ளிக்கூடம், அங்கன்வாடி வசதிகள், சூரியஒளி மின்விளக்குகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதி தமிழர்கள் விதிகளுக்கு முரணாக வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாக கூறி வன அதிகாரிகள் பொய்வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதில் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்துள்ளது.
இதை பொருள்படுத்தாத துணைவனபாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடந்தவாரம் இப்பகுதி மக்களை மிரட்டி, இங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அக்கிராமங்களில் எடுத்த புகைப்படங்களை இணைத்து, தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், வனத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், காவல்துறை டிஜிபி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தமிழர்களை தாக்கி, அச்சுறுத்திய வன அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதி மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.