உரத்த சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரத்த சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஜூன், 2013

உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு? க. இராமையா

உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு?  
க. இராமையா
தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய பிரச்னை, கச்சத்தீவு பற்றியது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களை காவு வாங்கியும், பசியடங்கா காலனின் கொடுமைக்கு காரணமான கச்சத்தீவின் பிரச்னைக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவை தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், ராமேஸ்வரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம், 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர், அங்கு அந்தோணியர் தேவாலயத்தை அமைத்தார். இன்றும், அத்தீவில் இருக்கும் ஒரே கட்டடம் அதுதான்.இந்தியாவின் தென்கோடி ராமேஸ்வரமும், அதை ஒட்டிய கடல் பகுதிகளும், சிறு தீவுகளும், இந்தியா சுதந்திரம் பெற்ற, 1947ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேரடி நிர்வாகப் பகுதியாக இல்லாமல், சேதுபதி மன்னர்கள் ஆண்டு வந்த, ராமநாதபுரம் சமஸ்தானத்திடமே இருந்தன.சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவிலிருந்த மற்ற சமஸ்தானங்களைப் போல், ராமநாதபுரம் சமஸ்தானம், சட்ட பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதுவரை கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னர்களின் பரம்பரை சொத்து என்பதை நிரூபிக்க, ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை இன்றும், மதுரையிலுள்ள ஆவண காப்பகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மன்னருக்கும், அன்றைய இந்திய (மத்திய) அரசின் உள்துறை செயலருக்கும் இடையே, 1913ல் குத்தகைப் பத்திரம் ஒன்று கையெழுத்தாகியது. அந்தப் பத்திரத்தின் இறுதியில், சமஸ்தானத்தில் சங்கு கிடைக்கும் பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில், கச்சத்தீவின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதன் மூலம், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சொத்தாக, கச்சத்தீவு இருந்தது என்பதும், அதை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்துள்ளது என்பதும், தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1921 அக்., 21ம் தேதி, இலங்கைத் தலைநகராகிய கொழும்பில், மீன் பிடி எல்லையை வகுக்க மாநாடு ஒன்று நடந்தது. இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட, ஹார்ஸ்பர்க் என்ற அதிகாரி, கச்சத்தீவுக்கு அப்பால், 3.45 மைல் (3 கடல் மைல்) வரை, மேற்கே உள்ள கடல் பகுதியும் உள்ளடங்கும் வகையில், இலங்கையின் எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்.
இந்திய அரசுக் குழுவினர், கச்சத்தீவு தனக்கு சொந்தம் என்று, ராமநாதபுரம் மன்னர் கூறுவதை வெளியிட்டு, வரைபடத்தையும் காட்டினர்.நெருக்கடியைத் தவிர்க்க, இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை, கச்சத்தீவுக்கு மேற்கே, 3.45 மைல் தொலைவிலேயே தற்காலிகமாக வரையறுத்துக் கொள்ளலாம் என, உடன்பாடு செய்து, இந்திய குழு அறிக்கை ஒன்றை, இந்திய அரசுக்கு அனுப்பியது.பழைய ஆவண விவரங்களையும், பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, பிரிட்டிஷார் ஒரு போதும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்பதும், அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டனர் என்பதும், தெளிவாகத் தெரிகிறது.

கடந்த, 1956க்கு பின், இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல் மைல்களிலிருந்து (ஒரு கடல் மைல் என்பது, 1.15 மைல் அல்லது 1.863 கி.மீ.,) 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்புகளை, இலங்கை அரசும் வெளியிட, பிரச்னை வலுவடைந்தது.கடந்த, 1973ல், அன்றைய பிரதமர் இந்திரா, இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974ல், இலங்கை பிரதமர், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்தார்.அண்டை நாடுகளுடன் சமாதான சகவாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு வகையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவு கைமாறக் காரணமாக இருந்தது. 1974ல், இரு நாடுகளும் செய்து கொண்ட
ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின், ஐந்தாவது ஷரத்து, இந்திய தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் வழி வகுத்திருந்தது.முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற முறையில், கச்சத்தீவை மீட்க வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும், 2013ல், அதேபோல் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இந்த வழக்கின் சாராம்சம், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என்பது தான். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை மீட்டெடுக்கவும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில், 1960 மார்ச், 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு விடை சொல்கிறது.

இந்தியா, 1947ல் சுதந்திர அடைந்த போது, மேற்கு வங்க மாநிலம் இந்தியாவுடன் இருக்க, கிழக்கு வங்க மாநிலம், கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. பின், இந்த கிழக்கு பாகிஸ்தான், வங்க தேசமாக தனி நாடானது."பேர்பாரி' என்ற நிலப்பரப்பு சம்பந்தமாக, இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே ஆரம்பம் முதல், சர்ச்சை இருந்து வந்தது. பேர்பாரி என்ற நிலப்பகுதி, மேற்கு வங்கத்தின் நிர்வாகத்தில் தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதும், கிழக்கு பாகிஸ்தானாக மாறிய, கிழக்கு வங்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று, பாகிஸ்தான் பிடிவாதமாக வாதாடியது.அரசமரத்து நாட்டாமை பாணியில், உனக்கு பாதி எனக்கு பாதி என்று முடிவானது.இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசின் சார்பில், இந்திய நிலப்பரப்பு பகுதிகள் ஏதும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை; சர்ச்சைக்குள்ளாயிருந்த எல்லைப்பகுதி தான் வரையறுக்கப்பட்டன என்று, வாதிடப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை ஆராய்ந்த நீதிமன்றம், அந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தமே என்று முடிவு செய்தது.இப்படி ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க, அரசுக்கு உரிமை உள்ளதா என்று ஆராய்ந்த போது, இவ்வாறு விட்டுக் கொடுப்பதற்கு தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும், அவ்விதம் செய்யாத பட்சத்தில், இந்தியாவின் நிலப்பகுதிகளை வேறு நாட்டோடு ஒப்பந்தம் செய்து, அதை விட்டுக் கொடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஒரு அதிமுக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, பேர்பாரி நிலப்பரப்பு முழுவதும், இந்தியாவுடன் இணைந்தது.

உச்ச நீதிமன்ற, எட்டு நீதிபதிகள் கூடி வழங்கிய இந்த தீர்ப்பு வந்த, 14 ஆண்டுகள் கழித்து, கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கை அரசோடு போடப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது போலவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் பின்னேற்பு செய்யப்பட வேண்டும் என்று, கச்சத்தீவு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும் இன்று வரை செய்யப்படவில்லை. எந்த திருத்தமும் செய்யப்படாத நிலையில், இந்தியா - இலங்கையோடு, 1974ல் செய்து கொண்ட ஒப்பந்தமும், அதன்பின் தொடர்ச்சியாக, 1976ல் செய்து கொண்ட ஒப்பந்தமும் சட்டபூர்வமானதல்ல. கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்களுக்கு உண்டான மீன் பிடித்தல், வலை உலர்த்தல் ஆகிய உரிமைகளை வழங்காத இலங்கையுடன், இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?

இப்போது, மத்திய அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ். இனப்படுகொலை நடத்தி, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ஒரு அரக்கனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய அரசு, கச்சத்தீவு பிரச்னை முடிந்து போன விவகாரம் என்று, இலங்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில், பதில் சத்தியபிரமாணம் தாக்கல் செய்யுமா, உச்ச நீதிமன்ற எட்டு நீதிபதிகளின் அமைப்பான, அரசியல் அமர்வு வழங்கிய அதிமுக்கிய தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமா அல்லது உதாசீனம் செய்யுமா?
இ-மெயில்:karuramiah70@yahoo.in

க. இராமையா சமூக ஆர்வலர்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பெண்களை த் தொடரும் பேய்கள்

பெண்களை த் தொடரும் பேய்கள்

அந்த முகமும், பெயரும் வெளியிடப்படாத, டில்லி மருத்துவ மாணவி தன்னை பலி கொடுத்து, கொளுத்தி போட்ட தீ, இந்திய மக்கள் மனதில் பற்றி எரிகிறது."குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள், சோறு தண்ணீர் இல்லாமல் தனியறையில் அடைத்துவைத்து கொல்லுங்கள்; அரபு நாடுகளைப் போல பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்துக்கொல்லுங்கள், நடுரோட்டில் நரபலி கொடுங்கள்' என்று எண்திசைகளிலிருந்தும் குரல் வருகிறது.
இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே :

டில்லியில் எழுந்தது சாதாரண குரல் அல்ல; கலாசார சீரழிவிற்கு எதிரான குரல். அரசின் கையாலாகாத்தனத்தை கண்டிக்கும் குரல், சட்டம் - ஒழுங்கு செயல்படாமையை சுட்டிக்காட்டும் குரல், செயல்படாத அரசு இயந்திரத்திற்கு குட்டுவைக்கும் குரல், போலீசின் பொறுப்பில்லாத்தனத்தை தட்டிவைக்கும் குரல், ஒட்டிக்கொள்ள ஒரு பதவிக்காக, அதுவும் சம்பாதிப்பதற்காக அலையும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை எச்சரிக்கும் குரல். இன்னும் சுருக்கமாக சொல்வதானால், மக்களின் இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே அந்தக்குரல். தூக்கில் போட்டால் கூட உடனே இறந்துவிடக்கூடும், கொஞ்சம் கொஞ்சமாக, தான் செய்த தவறை நினைத்து வருந்தவேண்டும்; அதே நேரம் தண்டனையும் அடைய வேண்டும். அதற்கேற்ப, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல, "வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்' என்றும் எடுத்துக்கொடுக்கின்றனர்.

திரும்ப, திரும்ப பேச வைத்து:

குற்றவாளிகளில் ஐந்து பேர் மேஜர், ஒருவர் மட்டுமே மைனர். "மைனர் சட்டத்தை திருத்துங்கள், பதினைந்து வயதானாலே, "மேஜர்' என்று அறிவியுங்கள். அந்த சட்டத்தையும் உடனே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியையும் விட்டுவிடாமல் தண்டியுங்கள்' என்று குமுறுகின்றனர். எந்த காரணத்தை சொல்லியும், குற்றவாளிகளை தப்பவிட்டுவிடக்கூடாது என்பதில் மக்கள், அதிலும் இளைஞர்கள் உறுதியாக இருக்கின்றனர்.எந்தவித தூண்டுதலும் இல்லாமல், யாருடைய தலைமையும் இல்லாமல், மக்கள் ஒருமித்த கருத்துடன், ஒன்று திரண்டு நின்று போராடி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டனர்; திரும்ப, திரும்ப பேச வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
ஒரு கைபார்த்துவிடலாம். :

இந்த விஷயம் உலகை உலுக்கியது பெரிதல்ல... உலுக்க வேண்டியவர்களை உலுக்கி எடுக்காமல் போய் விடுமோ என்ற கவலை எழுந்தபோது, மவுனம் காக்காமல், "விரைந்து நடவடிக்கை' என்று சொல்லியிருக்கிறார் பிரதமர்; ஆனாலும், இது போதாது என்கின்றனர் பொதுமக்கள். காரணம், அந்தளவிற்கு நடந்த சம்பவம் அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது கோபம் நாட்டின் மீதும், நாட்டின் சட்டத்தின் மீதும் இப்போது திரும்பியிருக்கிறது. சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்கு கசையடிதான் தண்டனை. அதனால், குற்றவாளிகள் அதற்கு பயந்தே செத்துப்போவர். இந்தியாவிலோ மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகூட, சிரித்துக்கொண்டே கோர்ட்டைவிட்டு வெளியே வருகிறான். காரணம், கருணைமனு வரை ஒரு கைபார்த்துவிடலாம். அதற்குள், எங்காவது ஓட்டை ஏற்படுத்தி தப்பிவிடலாம் என்கின்ற தைரியம்.
ஊழலில் கரைந்து போகாத காவல்துறை:

மக்களை மதிக்காத சட்டமும், சட்டத்தை மதிக்காத மக்களும் இருப்பது நல்லதல்லவே. இன்றைய தேதிக்கு, நடைமுறையில் உள்ள பாலியல் சட்டங்கள் எதுவும், பெண்களுக்கானதாக இல்லை. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் போலீசாருக்கு தண்டம் கட்டமுடியாமல், சட்டரீதியாக பாலியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், 436 பேர் என்றால், தண்டிக்கப்பட்டவர்கள் ஒரே ஒருவர்தான். மற்றவர்கள், தற்போது சுதந்திரமாய் வெளியே திரிகின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சட்டம் இயற்றும் பார்லிமென்டில் இடம் பெற்றுள்ள, மாண்புமிகு எம்.பி.,க்களில் பலரே, குற்றவழக்கு பின்னணி உடையவர்கள்தான் என்றும், அதிலும் சிலர், பாலியல் குற்ற தொடர்பு உடையவர்களே என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. ஊழலில் கரைந்து போகாத காவல்துறையினரையும், சந்தர்ப்பவாதத்தில் சறுக்கிவிழாத அரசியல்வாதியையும், கண்ணிற்கு எட்டிய தொலைவு வரை காணோம் என்பதால், பெண்ணைப்பெற்றவர்கள் தம் பெண் வீடு திரும்பும்வரை, வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டுதான் இருக்க நேரிடுகிறது. இப்படி நாட்டின் சட்டத்தின் மீது குற்றம் சுமத்தும் முன், இந்த விஷயத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத, ஆனால், எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களையும், இங்கே நாம் ஆராயவேண்டியுள்ளது.அதுதான் மது போதை...
டில்லி சம்பவத்தில் மட்டுமல்ல, அதற்கு நிகராக, தூத்துக்குடியிலும், வேலூரிலும், பின்னர் பெங்களூருவிலும், மீண்டும் டில்லியிலும் இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துகொண்டுதான் இருந்தது. இதில், ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மது அருந்திவிட்டே இந்த பாலியல் கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர்.மது தந்த போதை, மாதுவை தேடி தேடி நாசம் செய்யத்தூண்டி உள்ளது. இவர்கள் கண்ணில் பட்ட பெண், சிறுமி என்பது கூட தெரியாத அளவிற்கு காமம் கண்ணை மறைத்துள்ளது; காமத்திற்கு மதுவே துணை நின்றுள்ளது. மது என்பது எத்தனை சமாதானம் சொன்னாலும், செய்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அரக்கன் என்பதில், இரண்டாவது கருத்தே இருக்க முடியாது.இன்னும் கொஞ்ச நாளில், தெரிந்தே குடிப்பவர்கள், தெரியாமல் குடிப்பவர்கள் என்ற இரண்டே இனம்தான் இருக்கப்போகிறது. அந்தளவிற்கு ரேஷன் கடைகள், பள்ளிக்கூடங்களை விட முக்கியத்துவம் தந்து மதுக்கடை திறக்கப்படுகிறது. மது விற்பனை சாதனையாக கணக்கிடப்படுகிறது.
மதுக்கடைகள் மூடப்படும் ?

"பாலியல் குற்றம்புரிந்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அரசு பெண் வழக்கறிஞர்களே வாதிடுவர், இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரிப்பார், அதை எஸ்.பி., மேற்பார்வையிடுவார், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசே அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ளும்' என்று, தமிழக முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நிறைய சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் சொல்லியது சரி, இதற்கும் மேலாக ஒரே ஒரு வார்த்தை, மதுக்கடைகள் மூடப்படும் என்று, சொல்லுங்கள். சொல்லியபடி செயல்படுத்திப்பாருங்கள். பாலியல் குற்றம் மட்டுமில்ல, எந்த குற்றமும் தமிழகத்தில் நடக்காது. இப்போதோ, சர்வசாதாரணமாக பிறன்மனை நோக்கலும், ஓடிப்போதலும், கற்பழிப்பும், அதிலும் குழந்தைகள் மீதான வன்முறையும் வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணமாக சந்தேகமே இல்லாமல், சினிமாவையும், தொலைக் காட்சியையும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வீட்டின் வரவேற்பறையில் அரைகுறை உடையுடன் போடும் குத்தாட்டங்களை குடும்பத்துடன் ரசிக்குமளவு, மனதை கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கி வைத்திருக்கிறோம். ஆபாசத்தை நவீன முறையில் கொடுத்து, பார்ப்பவர்களின் மனதை கெடுத்துவருகின்றனர் என்பதில், எந்தவித சந்தேகமுமில்லை. இதை தருவதற்கும், தடுப்பதற்கும், ஏற்பதற்கும், விலக்குவதற்கும் சட்டமேதுமில்லை. அப்படி ஒரு சட்டம் வேண்டும் என்றாலே, ஜனநாயக காவலர்கள் வேல்கம்பு எடுத்து தேடிவருவர்.
குறைந்தபட்சமாக இது போன்ற நிகழ்ச்சிகளை கொடுப்பதிலும், பார்ப்பதிலும் என்ன பலன் என்று, அவரவர் மனசாட்சியை பேசவிட்டு கேட்டுச் சொல்லுங்கள். மூன்றாவதாக வளர்ப்பு: ஆணோ, பெண்ணோ பார்க்கவேண்டியதும், பராமரிக்கவேண்டியதும் பெற்றோர் கையில் உள்ளது. முன்பு போல பெண் தின்னும் வல்லூறுகள், கலைந்த தலை, முகத்தில் பரு, வடு விழுந்த கன்னம், கடூர குரல், கொடூர முகம் என்று, தனி அடையாளம் கொண்டு வருவதில்லை; நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நவநாகரிகவேடம் அணிந்து அலைகின்றன. இதில் மாணவியிடம் சில்மிஷம் செய்து அடிபடும் ஆசிரியர்களையும், பெண் போலீசுடன் உல்லாசம் என்று பிடிபடும் போலீஸ் அதிகாரிகளையும் பற்றி அறியும் போது, உதாரணமாக இருக்கவேண்டியவர்களே, இப்படியா என்ற வேதனையே மிஞ்சுகிறது.
இந்த விஷயத்தில், எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நம்நாட்டைவிட, கட்டுப்பாடு நிறைந்த அரபு நாடுகளின் சட்டங்கள் மேல்தானோ என, நினைக்கத் தோன்றுகிறது. அங்குள்ள பெண்கள் மகிழ்ச்சியாக, குடும்பம், குழந்தை என்று இருக்கின்றனர்; இவை எல்லாவற்றையும் விட, நிம்மதியாக இருக்கின்றனர். இங்கே கருவறை முதல் கல்லறை வரை பெண் சந்திக்கும் பிரச்னையை பார்த்தால், அதுவும் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் வயதில், வாழ்க்கையே திசைமாறிப் போகுமளவு பிரச்னை என்றால், மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் அல்ல, மாபாவம்தான் செய்திருக்கவேண்டும்.
உயிரினும் மேலானது மானம்;

அந்த மானத்தையும் இழந்து, உயிரையும் கொடுத்த டில்லி மாணவியின் கடைசி நேர கதறல், எனக்கு நேர்ந்த கொடுமை, இனி எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது என்பதுதான். ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கு பிறகும் இந்த கொடுமைகள் தொடர்கின்றன என்றால், பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு பயமில்லையா அல்லது இது குறித்து படிப்பினை இல்லையா...?
email: murugaraj2006@gmail.com முருகராஜ் பத்திரிகையாளர்/சிந்தனையாளர்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கையூட்டாகும் நல்கைத்தொகை

உரத்த சிந்தனை : இலஞ்சமாகும் மானியம் எசு.ஆர்.சேகர்
மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு சிறந்த திட்டமாக தெரியும். அரசின் பல்வேறு திட்டத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள், மானியங்கள், மக்களை சென்றடைவதில்லை. இடையில் ஏற்படும் ஒழுகல், சிந்தல், சிதறல், உதிரல் போன்றவை, ராஜிவ் சொன்னது போல, ஒரு ரூபாய்க்கு, 17 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றது உண்மையே.இக்குறையை சரி செய்யத்தான், மக்களுக்கு, மானியங்களை பணமாக, அதுவும் வங்கி மூலமாக, நேரடியாக அவர்கள் கணக்கிலேயே செலுத்தி விட, அரசு முடிவு செய்துள்ளது; இது தவறா?

குஜராத்துக்கு வரும், 13 மற்றும் 17ம் தேதி தேர்தல். இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல், 51 மாவட்டங்களில், நான்கு மாவட்டம் குஜராத்தில் இருக்கின்றன.வாக்காளர் என்றால், காங்கிரசின் ஓட்டு கொட்டும் ஒரு ஏ.டி.எம்., காசு என்னும் கார்டை, வாயில், "ஸ்வைப்' செய்தால், வயிற்றிலிருந்து, "ஓட்டை' கொட்டும் இந்த இயந்திரம். இதை உறுதி செய்யும் சம்பவங்கள், சரித்திரத்தில் நடந்தேறியுள்ளன.

கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், "கரீபி ஹகட்டாவோ' வறுமையே வெளியேறு என்ற, கோஷத்தை முன் வைத்து, இந்திரா வெற்றி கண்டார்.கடந்த, 1971ம் வருடம், சுதந்திரம் பெற்று அன்று, 24 ஆண்டு ஆகியும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. இன்றும் அப்படித்தான் என்பது, வேறு விஷயம்.தோற்றுப்போகும் சூழல் உருவாகும் போதெல்லாம், காங்கிரஸ் புத்தியில் புதிய புதிய ஏமாற்றுத் திட்டங்கள் வேர்க்கும். அதே மாதிரி ஒன்று தான், இந்த மானியங்களை பணமாக, வங்கி மூலம் வழங்கும் திட்டம்.ஓட்டுக்காக, கட்சி பணத்துக்கு பதில், அரசு பணத்தையே, அதாவது, மக்கள் பணத்தையே, மக்களுக்கு கொடுக்க அறிவித்ததுதான் இந்த திட்டம்.

வெளிநாட்டிலிருந்து, ஈமு கோழி என்ற ஒரு பறவையை, இங்கு கொண்டு வந்து, அது இந்தியாவின் தட்பவெட்ப சூழலுக்கு வளருமா என்பதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளிடம் ஆசை வார்த்தை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டினர்.காலம் காலமாக வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டு, காவல் நிலைய வாசல்களில், அசலுக்காக தவங்கிடக்கும் காட்சி, தினசரி பத்திரிகைகள் படம் பிடித்து காட்டுகின்றன. சில தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை.

தனியார், மக்களை ஏமாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசே, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டை பறித்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதும், ஒரு சாராரின் கேள்வி.வாஜ்பாய், "வேலைக்கு உணவு' திட்டத்தை கொண்டு வந்தார்; எதற்காக? அன்றைய தினம், உணவு கிடங்குகளில், கோதுமை நிரம்பி வழிந்தது. சேமிக்க இடமில்லை. தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அதை ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார்.மக்கள், அரசிடம் கையேந்தக் கூடாது. எனவே, இலவசமாக கொடுக்க விரும்பாமல், அவர்களே அதை சம்பாதித்துக்கொள்ளும் வழியில், 8 மணி நேரம் வேலை கொடுத்து, சம்பளமாக கோதுமை கொடுத்தார்.வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, அதே திட்டத்தை, மாற்றுப்பெயரில் காங்கிரஸ் தொடர்ந்தது. பெயர் மட்டுமல்ல, வழிமுறை, செயல்பாடுகளும் மாறின. "தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்பது தான், அந்த புதிய பெயர். இதில், தானியத்துக்கு பதிலாக, பணம் கொடுக்கப்பட்டது. கணக்குக்கு, 100 முதல், 110 ரூபாய் சம்பளம். கைக்கு வருவதோ, 60 அல்லது 70 ரூபாய் மட்டுமே. இடையில், 40 முதல், 50 ரூபாய் வரை, ஒழுகல் இருந்ததால், உருப்படியான வேலை ஏதும் நடைபெறவில்லை.

தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றும், ஆளும் கட்சிக்காரர்கள் பிரித்தாண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்த வேலைக்கு, அவர்கள் கேட்ட விலை, தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனும் நிபந்தனை தான். இப்போது, "வங்கி மூலம் மானிய பணம்' திட்டம், நிஜமாகவே, ஒரு ஜாக்பாட் தான். இதே திட்டத்தை, இப்போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, "மாதிரி திட்டமாக' காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், "கோட்காசிம்' தாலுகாவில், நவம்பர், 2011ல் அறிமுகப்படுத்தினர்.முதலில் ஏழை குடும்ப கார்டுதாரருக்கு, வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்து, மண்ணெண்ணெய்க்கு மானியத்தை, வங்கியில் செலுத்த முடிவு செய்தனர். அதாவது, ஒரு கார்டுதாரர், மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 15 ரூபாய் என, மானிய விலையில் கொடுத்ததை, அதன் சந்தை விலையான, 49 ரூபாய்க்கு வாங்கி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் முதல் மாத மானியம், 340 ரூபாயை, முன்கூட்டியே வங்கி கணக்கில் கட்டி விடுவது என, முடிவு செய்தனர். இது முதல், மூன்று மாதங்களுக்கு தொடரும். இரண்டாவது, மூன்றாவது மாதத்திலிருந்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வாங்கும் மண்ணெண்ணெய்யின் அளவை பொறுத்து, மானிய தொகை, வங்கியில் செலுத்துவது என்பது ஏற்பாடு. திட்டம் துவங்கிய கடந்த ஓராண்டில், ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் மானிய தொகை, வங்கியில் செலுத்தப்படவில்லை. சந்தை விலைக்கே, ரேஷனில் மண்ணெண்ணெய்யை விற்பதால், எண்ணெய் வாங்க ஆளில்லை. அதாவது, ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை, 70 சதவீதம் குறைந்ததுஇந்த விற்பனை குறைவை, அரசு, தற்போது கையில் எடுத்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய், கள்ள மார்க்கெட்டுக்கு போனதை, அரசு தடுத்து விட்டதாம். இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு இதை வைக்கிறது.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. அரசின் மானியம், வங்கி கணக்கில் ஏறாததால், சந்தை விலையான லிட்டர், 49 ரூபாய்க்கு மக்களால் மண்ணெண்ணெய்யை வாங்க முடியாததால், கிராமவாசிகள், காட்டில் கிடைக்கும் விறகுகளை பொறுக்கி, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

இது தவிர, இந்த திட்டத்தில் வேறு என்ன பாதகங்கள் இருக்கின்றன என்று, கேட்பவர்களுக்கு, சில விவரங்கள்: வங்கிகள் இல்லாத கிராமங்கள் நாட்டில், 40 சதவீதத்துக்கும் அதிகம். பெரும்பாலான கிராம மக்கள், தபால் நிலையங்களில், கணக்கு வைத்துள்ளனர்.நாட்டின், 60 சதவீத தபால் நிலையங்கள், "இன்டர்நெட்'டினால் இணைக்கப்படவில்லை. இதை செய்து முடிக்க, அரசுக்கு, 2013 ஜூனில் ஆரம்பித்து, 15 மாத காலம் ஆகும் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.ஆக, "மாதிரி திட்டமே' ஓராண்டு கால சாதனையாக, வேதனையே தந்துள்ளது. அதுவும், ஒரே ஒரு பொருளுக்கு, அதாவது, மண்ணெண்ணெய் மானியத்துக்கு மட்டும்.

மிக முக்கியமான வங்கி கணக்கு வசதியே முழுமை பெறவில்லை. அரசு அறிவித்துள்ள, 51 மாவட்டங்களில் கூட, 71 சதவீதம், வங்கிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வசதி உள்ளதாக, மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், இதை அவசர, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? "தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ், இத்திட்டத்தை அறிவித்துள்ளது' என்ற குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் வாக்குமூலம் வலு சேர்க்கிறதே.நலத்திட்டங்கள், மானியங்கள், ஏழை மக்களை சமூகத்தில் முன்னேறியவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுவதற்காக, அரசு செய்ய வேண்டிய கட்டாயங்கள். அதனால் தான், நம் நாட்டின் அரசை, அரசமைப்பு சட்டத்தில், "மக்கள் நல அரசாங்கம்' என்று
குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இன்றைய அரசு, குறிப்பாக, "காந்தி' பெயர் கொண்ட, நேரு குடும்ப தலைமையிலான அரசுகள், மானியங்களை பணமாக தருகிறோம் என்ற பெயரில், லஞ்சமாக மாற்ற முயல்வது, இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.
EMAIL:srseghar@gmail.com

எஸ்.ஆர்.சேகர்,அரசியல் சிந்தனையாளர்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

உரத்த சிந்தனை: காவிரியில் கருகும் வாழ்வு: எல்.பிரைட்

உரத்த சிந்தனை: காவிரியில் கருகும் வாழ்வு: எல்.பிரைட்

"தமிழகத்தின் நெற்களஞ்சியம்' எனப் போற்றப்படும் தஞ்சைத் தரணியின் நிலை, இன்று, நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. கர்நாடக அரசு, காவிரி நதியில், நமக்குச் சேர வேண்டிய தண்ணீரை விடாமல் முரண்டு பிடிப்பதால், அந்நீரை நம்பியே விவசாயம் செய்து வரும், தமிழக விவசாயிகளின் கண்ணில், இன்று கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.

தஞ்சைப் பகுதியின் நிலங்களில் விளையும் விளை பொருட்கள், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால், தஞ்சைத் தரணியைத் தான், தமிழகமே தன் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில், ஆரம்ப நிலையிலிருந்தே கர்நாடகா, இப்பிரச்னையில் நாடகங்களைத் தான் அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது போடும் நாடகத்தை, யாராலும் ரசிக்கத் தான் முடியவில்லை.காவிரி நதி, கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி, தமிழகத்தில் முடிகிறது. 800 கி.மீ., நீளமுள்ள காவிரி நதி, 320 கி.மீ., தூரம் கர்நாடக மாநிலத்திலும்; 64 கி.மீ., கர்நாடக - தமிழக எல்லையிலும்; 416 கி.மீ., தமிழகத்திலும்; 125 கி.மீ., நீளம் காவிரி டெல்டா பகுதியிலும் பாய்ந்து, இறுதியில் சிறு ஓடையாகக் குறுகி, வங்கக் கடலில் கலக்கிறது.

கி.பி., இரண்டாம் நூற்றாண்டில், ஒருமுறை, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் கரைகள் உடைந்து விட்டன. உடைந்த கரைகள் வழியே வெளியேறிய தண்ணீர், தற்போது, "உள்ளாறு' என்று அழைக்கக் கூடிய சிறு ஓடை வழியாக, கொள்ளிடத்தில் கலந்ததாம்.
இந்த உடைப்பைச் சரிசெய்வதற்காக, அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன், கரிகால் சோழன் என்பவன், இன்றும் காவிரியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும், கல்லணையைக் கட்டி முடித்தான்.இந்த வரலாற்றுச் சான்றிலிருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக, காவிரித் தண்ணீரை, தமிழர்களாகிய நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம் என்ற உண்மை தெரிய வருகிறது. எனவே, தொடர்ந்து அந்நீரை பயன்படுத்துவதற்கான உரிமை, நமக்கு நிறைய இருக்கிறது.

காவிரி நீர், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அளவைப் பொறுத்து, வெவ்வேறு காலங்களில், பல்வேறு பாசனத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.ஆனால், கர்நாடக அரசு செய்து வரும் ஒப்பந்த மீறல் மோசடிகளால், திட்டங்களின் பலன், தமிழக விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காமல் போய் விட்டது. இதன் காரணமாக, காவிரியை நம்பியிருக்கும், 35 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், இன்று வேலை இழந்து நிற்கின்றனர்; 21.59 லட்சம் ஏக்கர் நிலம், காய்ந்து, கருகிக் கொண்டிருக்கிறது.தமிழ்நாடு, கர்நாடகம் என்று பெயர் மாற்றம் அடையும் முன்பே, இவ்விரு மாநிலங்களுக்கு இடையேயும் காவிரிப் பிரச்னைகள் ஆரம்பித்து விட்டன. இப்பிரச்னையை பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கி வைத்தது, அப்போதைய மைசூர் அரசு தான். அது, அன்றைய சென்னை அரசின் அனுமதி பெறாமலேயே, தன் இஷ்டத்துக்குப் பாசனப் பரப்புகளை அதிகரிக்கத் துவங்கியது.

மைசூர் அரசின், தன்னிச்சையான, தான் தோன்றித்தனமான போக்கால், சென்னை அரசின் பாசனப் பரப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உட்பட்டன. இதன் எதிரொலியாக, 1890 - 1892ம் ஆண்டுகளில், இரு மாநிலங்களுக்கு இடையேயும் பேச்சு நடந்து, முடிவில், 1892ல், ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.அதன்படி, காவிரியிலோ, அதன் துணை நதிகளான ஹேமாவதி, லட்சுமணத் தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாச்சி ஆகியவற்றிலோ, மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால், சென்னை அரசின் அனுமதி பெற்ற பின்பே, நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். மைசூர் அரசு, அணைகள் கட்டுவது, தன் பாசன வசதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அதற்கு அனுமதி மறுக்கிற அதிகாரத்தையும், சென்னை அரசுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது.

போகப் போக, கர்நாடக அரசின் சுய ரூபம் வெளிப்பட்டது. 1892ல், ஒப்பந்த விதிகளை அப்பட்டமாக மீறத் துவங்கியது, கர்நாடக அரசு. சென்னை அரசின் அனுமதி பெற்று, 1911ல், 11 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் உயரத்தில் சுண்ணம்பாடி அணையைக் கட்டத் துவங்கியது, மைசூர் அரசு.ஆனால், எதிர்காலத்தில், 41 டி.எம்.சி., தண்ணீரைத் தேக்கி வைக்கும் உயரத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தோடு, ஆரம்பத்திலேயே அணையின் அடித்தளத்தை அகலமாக அமைத்துக் கொண்டது. இதன் மூலம், ஒப்பந்த விதிக்களுக்கு முரணாகச் செயல்பட்டது மைசூர் அரசு.

இரு மாநிலங்களுக்கு இடையேயும், பிரச்னைகள் வளர்ந்தன. பிரச்னை அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால், நீதிபதி ஹென்றி கிரிபின் என்பவர், மைசூர் அரசுக்கு ஆதரவாக, அப்போது தீர்ப்புச் சொல்லி விட்டார்.எனவே, பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது சென்னை அரசு. மத்திய அரசும், மைசூர் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. எங்கும் நியாயம் கிடைக்காமல் போகவே, இறுதியில் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலரிடம், சென்னை அரசு முறையீடு செய்தது.அவர் எடுத்துக் கொண்ட முயற்சியால், இரு மாநிலங்களுக்கு இடையேயும், 1924ம் ஆண்டு, புதிய ஒப்பந்தமும், 1929, ஜூன் 17ல், மற்றொரு துணை ஒப்பந்தமும் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி -

*44.827 டி.எம்.சி., கொள்ளளவுள்ள கிருஷ்ணசாகர் அணைக்கட்டை, மைசூர் அரசு கட்டிக் கொள்ளலாம். இதன் மூலம், 12.5 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை, அது அதிகரித்துக் கொள்ள முடியும்.
*93.5 டி.எம்.சி., கொள்ளளவுள்ள மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக, 3.01 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு, சென்னை அரசு பாசன வசதி செய்து கொள்ளலாம்.
*45 டி.எம்.சி., கொள்ளளவுள்ள அணையை, தன் துணை நதிகளில் அமைத்து, 1.10 லட்சம் ஏக்கருக்குப் புதிய பாசன வசதிகளை மைசூர் அரசு ஏற்படுத்திக் கொள்ளலாம். எனினும், சென்னை அரசின் நீர்ப்பாசன வசதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இது அமைய வேண்டும்.
*சென்னை அரசு, தன் துணை நதிகளில் புதிய அணைகள் அமைத்துக் கொள்ளலாம். பவானி, நொய்யல், அமராவதி நதிகளில் அணைகளைக் கட்டினால், அதன் கொள்ளளவுகளில், 60 சதவீதத்திற்கு மேற்படாதவாறு காவிரியின் துணை நதிகளில் ஒன்றில், மைசூர் அரசு அணைகளைக் கட்டிக் கொள்ளலாம். எனினும், சென்னை அரசுக்குச் சேர வேண்டிய நீரின் அளவை பாதிக்காத வகையில், இது இருக்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒப்பந்தத்தில் சில பிரிவுகளை, சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அதை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்கிறது, மேற்குறிப்பிட்ட விதிகள்.ஆனால், 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களுமே, காலாவதியாகி விட்டதாக கர்நாடக அரசு, கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அன்றைய மைசூர் அரசுக்கு விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், இன்றைய கர்நாடக அரசை கட்டுப்படுத்த முடியாது என்றும், அது வாதிடுகிறது. கர்நாடக அரசோ, தன் கிளை நதிகளில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, லட்சுமண தீர்த்தம் போன்றவற்றில் அணைகளைக் கட்டி, கிருஷ்ண சாகர் அணைக்கட்டுக்கும், மேட்டூர் நீர்த் தேக்கத்துக்கும் வருகிற தண்ணீரை தடுத்து விட்டது. அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் காவிரியில் வருகிற தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. அதனால் தான், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியவில்லை என்றும் கதை விடுகிறது.

இதுவரை, தமிழகத்தை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை குறித்து, 27 தடவைக்கு மேல் பேச்சு நடத்தி இருக்கின்றன. ஆனால், எல்லாமே தோல்வியில் தான் முடிந்திருக்கிறது அல்லது நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுவதைப் போல, குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது.பிரச்னையைத் தீர்க்க, நடுவர்மன்றம் அமைத்ததன் பலனாக, அதன் நீதிபதிகளிடம் லட்சக்கணக்கான மக்கள், தங்கள் குறைகளை நேரிடையாகச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததே தவிர, மற்றபடி தமிழகத்துக்கு நேரிடையாக தண்ணீர் திறந்து விடச் சொல்ல, அதற்கு அதிகாரமில்லாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.

நீதிமன்ற தலையீடு, நடுவர் மன்றம், பேச்சுவார்த்தை என்று தொடர்ந்து நாடகம் தான் "டிவி' தொடர் போல் இழுத்துக்கொண்டே போகிறது. தண்ணீர் வரும் வழியைத்தான் காணோம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகளும் சரி, ஆட்சியை எதிர்க்கும் கட்சிகளும் சரி, இந்த பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் தான் தேடப்பார்க்கின்றனர். பாவம், காவிரி கரை மக்கள். விவசாயமும் இல்லாமல், வருமானமும் இல்லாமல், போராடவும் முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
"இ-மெயில்' முகவரி: dmrcni@dinamalar.in

எல்.பிரைட்,சிந்தனையாளர்
தினமலர்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்

உரத்த சிந்தனை :  
ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்
எசு.ஏ.சுந்தரமூர்த்தி

மக்கள் வளம் முதல், எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது. இந்த வளத்தை, பலத்தால் அடைய வேண்டும் என்று, எத்தனையோ படையெடுப்புகள், இந்தியா மீது துவங்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் இந்தியா, புதுபொலிவுடன் தன்னைக் காத்துக் கொண்டது.

லட்சக்கணக்கான உயிர்களை இழந்து, ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டி, மக்கள் கண்ட சுதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பாலும், தேனும் ஓடும் என்றனர். ஆட்சி மாறியது; ஆனால், காட்சி மாறவில்லை. உலகக் கொள்ளைக்காரன் போய், உள்ளூர் கொள்ளைக்காரர்கள் பலர் வந்து விட்டனர்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் அடிப்படையில் எல்லாருக்கும், "சம நீதி' என்று நாம் படைத்து, நாமே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனம், நம்மை வழிநடத்த துவங்கியது. புனிதமான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலைக்கு வந்துவிட்டது.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது, ராணுவத்திலும், பொது வினியோகத்திலும் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிய, "சிறப்பு காவல் அமைப்பு' 1941ல் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், "டில்லி சிறப்பு காவல் அமைப்பு' எனும் பெயரில், உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் லஞ்சம், ஊழல் குறைய வேண்டும் என்று எண்ணிய அன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், தன் சட்ட ஆலோசகர் கரம் சந்த் ஜெயின் மூலம், டில்லி சிறப்பு காவல் படையை நிர்வகித்து வந்தார்.இந்த, டில்லி சிறப்பு காவல் அமைப்பு, 1963, ஏப்., 1ம் தேதி முதல், மத்திய புலனாய்வு அமைப்பு என்றும், சி.பி.ஐ., என்றும் அழைக்கப்பட்டது.

இப்போது சி.பி.ஐ., இத்தாலி ஆயுத இடைத்தரகன், போபால் விஷவாயுக்கு சொந்தக்காரனை, "யுனைடெட் கார்பைடு' என்று, உலக குற்றவாளிக்கு உதவி வருகிறது. உள்ளூரில் நடக்கும் கொலை, கொள்ளைகளை கண்டறியும், "துப்பறியும் சாம்பு'வாக மாறிவிட்டது சோகத்திலும் சோகம்."ஊழல் ஒழியவே இல்லை. இந்தியா இனி உருப்படாது' என்று சந்தானம் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பின் உருவானது தான், ஊழல் கண்காணிப்பு ஆணையம், 1964ல் ஏற்படுத்தப்பட்டது.
*இது ஒரு ஆலோசனைக் குழு, இதன் முடிவை ஏற்க வேண்டுமா என, முடிவு செய்யும் அதிகாரம் அரசிடமே உள்ளது.
*1,500 துறைகள் (மாநில - மத்திய) ஊழலை கண்காணிக்க, 300 ஊழியர்களுடன் உலா வருகிறது.
*சி.பி.ஐ.,க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாலும், வழக்கு விவரங்களை சி.பி.ஐ.,யிடம் கேட்க முடியாத ஆணையம்.
*ஆளும் கட்சியான பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆணையரை தேர்வு செய்யும் போது, மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்ப்பு மட்டுமே காட்ட முடியும். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து, பி.ஜே.தாமசை துரத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டி வந்தது. உத்தரவு வந்த பின்பும் நாற்காலியை
காலி செய்யாமல் அடம்பிடித்த புண்ணியவான்.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்தை கைப்பற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால், பல் பிடுங்கிய பாம்பை பார்த்து, நாம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 324வது ஷரத்து படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், கொள்ளைக் கூட்ட தலைவன் கூட தேர்தலில் நின்றால், ஒன்றும் சொல்லாது. "கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்று அறிக்கை தர அச்சப்படுகிறது. எப்படியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 148 ஷரத்துப்படி உருவாக்கப்பட்டது தான், இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் பதவி. மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து, ஜனாதிபதியிடமோ, மாநில கவர்னரிடமோ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தற்போது, தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராய், 2008ல் தலைமைத் தணிக்கையாளராக பதவி ஏற்றார். இவருக்கு முன், 10 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர்.அரசுக்கு சாதகமாக இவர்கள் போனதால், பல பல ஊழல்கள் வெளிச் சத்திற்கு வராமல் போய்விட்டன. வினோத் ராய் பதவி ஏற்ற பின், பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.தற்போது கிட்டத்தட்ட, 59 அறிக்கைகளை மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. தலைமைத் தணிக்கையாளர் தந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு, விவரம் பெற்று, மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து, ஓர் இறுதி அறிக்கை தரும் முன் லோக்சபா, ஆயுள் காலம் முடிந்து விடும். மத்திய கணக்குக் குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சியாக மாறிவிடுவர்.
தற்போது, இந்தியத் தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராயின் பதவி காலம், மே. 22, 2014 வரை உள்ளது. அதற்குள் எத்தனை ஊழலை இவர் அம்பலப்படுத்துவார் என்று, ஆளும் கட்சி அரண்டு போய் உள்ளது.

எல்லாத் துறைகளையும் போன்று, நீதித் துறையிலும் ஊழல் வேர் விட்டுள்ளது. நீதித் துறையையும் ஆளும் கட்சி ஆட்டிப் படைக்க முடியும் என்பதை, ஆள் கொணர்வு வழக்கு, 1976ல் உணர்த்தியது. இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தில், "சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு' என, நான்கு நீதிபதிகள் கூறினர். தலைமை நீதிபதி ஏ.என்.ராய், பி.என்.பகவதி, யு.வி.சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகியோர் தான் அவர்கள்.ஆனால், "மிசா' சட்டம் செல்லாது; சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது' என்று, நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டும் கூறினார். இந்திராவின், "மிசா' சட்டத்திற்கு எதிராகத் தனிப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூப்பின் அடிப்படையில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரவேண்டிய அவருக்கு வாய்ப்பு தராமல், ஜன., 29, 1977ல், எம்.எச்.பெக் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

எனவே, தன் பதவியை கன்னா, ராஜினாமா செய்தார். அவர் தலைமை நீதிபதியாக இருந்திருந்தால், ஜூலை.2, 1977 வரை, பதவியில் இருந்து இருப்பார். "மிசா' சட்டத்தை எதிர்த்த எச்.ஆர்.கன்னா தலைமை நீதிபதியாக வருவதை, இந்திரா விரும்பவில்லை.இந்திராவுக்கு சாதகமான அடிப்படையில் தீர்ப்பு கூறிய பிற நீதிபதிகள் எல்லாம், இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துச் சென்றனர்.

இந்திய ஜனாதிபதிக்கு இணையாக உள்ள தலைமை நீதிபதி, தன் மருமகன்கள் பெயரில் சொத்துகளை குவித்தபின், இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை அலங்கரிப்பது என்பது, நம் நாட்டில் மட்டுமே முடியும்.மதுரையில் வெடிகளை வைத்து, "பல்லவ மன்னன்' போல கல்லை எல்லாம் குடைந்து விட்டனர். ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல், இது நடந்து இருக்குமா? மலையை காணவில்லை எனவும், குளத்தை காணவில்லை எனவும் எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை."எல்லா வளமும் போய் சேரும் வெளிநாட்டில்... நாம் கையை நக்க வேண்டும் உள்நாட்டில்...'
இ-மெயில்: asussusi@gmail.com

எசு.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்  -தினமலர்


ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

உரத்த சிந்தனை: புகையிலை இல்லாத தமிழகம்! மருத்துவர் கு.கணேசன்

உரத்த சிந்தனை: புகையிலை இல்லாத தமிழகம்! மருத்துவர் கு.கணேசன்
வளரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்றவற்றில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1998ல், 110 கோடி பேர், உலகம் முழுவதும் புகை பிடித்ததாகவும், 2012ல், இது, 140 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது, உலக நலவாழ்வு நிறுவனம்.

உலக அளவில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துவதில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. புகையிலையால், நம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும், 10 ஆயிரத்து, 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் உண்டாகும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக, 30 ஆயிரத்து, 800 கோடி ரூபாயை செலவிடுகிறது அரசு. இந்தியாவில், புகையிலையால் தினமும், 2,500 பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சித்தகவலைத் தருகிறது, "லான்சட்' எனும், பிரபல மருத்துவ இதழ்.

நம் நாட்டில் இப்போது, ஆண்களுக்குச் சமமாக, பெண்களும் புகைபிடிக்கத் துவங்கியுள்ளனர். இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரில், 15 முதல், 24 வயது உள்ளவர்கள், 18 சதவீதம் பேர்; 24 லிருந்து, 44 வயதுக்குள் உள்ளவர்கள், 37 சதவீதம் பேர்; தமிழகத்திலும், புதுவையிலும், 20 சதவீதம் பேர் புகை பிடிக்கின்றனர் என்கிறது மத்திய சுகாதாரத்துறை.இந்தப் புள்ளி விவரத்தைப் பார்த்தாலே, நிலைமை புரியும். எந்த அளவுக்கு இத்தீயப்பழக்கம், இளைய வயதினரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக, "இரண்டாம் உயிர்கொல்லி' எனப் பெயர் பெற்றுள்ள புகையிலை குறித்து, இந்தியர்கள் கவலைப்படுவதும் இல்லை; அச்சப்படுவதும் இல்லை என்பது தான், இதற்கு முக்கியக் காரணம். சிகரெட் புகையில் நிகோடின், கார்பன் மோனாக் சைட், அமோனியா, அசிடோன், ஆர்செனிக், பென்சீன் என்று, 4,000க்கும் மேற்பட்ட நச்சுப் பொருள்கள் உள்ளன. நிகோடின் நச்சு, இருப்பதிலேயே மிக மோசம்.

அட்ரீனலின் இயக்குநீரை, நிகோடின் அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான், சிகரெட் சிநேகம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரும் வாய்ப்பு, 25 மடங்கு அதிகம்; உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு, 15 மடங்கு வாய்ப்பு அதிகம்; சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு, ஐந்து மடங்கு அதிகம்.இது மட்டுமா?

நிகோடின், ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்வதால், புகைபிடிப்போருக்கு மூளையில் ரத்த நாளம் அடைத்துக் கொள்ள, பக்கவாதம் வருகிறது; கை, கால்களுக்குச் செல்லும் ரத்தம் குறைந்து, விரல்கள் அழுகி, கை, கால்களையே அகற்ற வேண்டிய ஆபத்து உருவாகிறது. ஆண்களின், விந்தணுக்களின் தரத்தையும், எண்ணிக்கையையும் நிகோடின் குறைப்பதால், அவர்களால் தந்தை ஆக முடிவதில்லை.புகையிலையில் இருக்கும், "டார்' எனும், "பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன்' புற்றுநோயை உருவாக்கும். புகைபிடிப்போருக்கு வாய், கன்னம், நாக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை ஆகிய இடங்களில், புற்றுநோய் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில், 50 சதவீதம் பேர், புகையிலையைப் பயன்படுத்தியவர்களாக உள்ளனர். இவர்களில் சரிபாதிப் பேர், பெண்கள் என்பது தான், அதிர்ச்சித் தகவல்.

இதற்குக் காரணம், இந்தியாவில் ஒரு பள்ளி அல்லது கல்லூரி மாணவ, மாணவியர் சிகரெட் புகைத்தால், அது ஒழுக்கக்கேடு என்று சமூகம் குற்றம் சாட்டும். ஆனால், அவர்கள் பான் மசாலா அல்லது குட்கா, பீடா பயன்படுத்தினால், அது தவறாகத் தெரியாது.எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், தயக்கமில்லாமல் பெற்றோருடன், ஏன், ஆசிரியருடன் ஒன்றாக அமர்ந்து, இவற்றை உபயோகிக்க முடிகிறது. இத்தகைய, "புகையில்லா புகையிலைப் பழக்கம்' பெண்களிடம் அதிகரித்து வருகிறது. சினிமா அரங்குகள், பணியிடங்கள், பஸ் நிறுத்தங்கள், சந்தை, இப்படி பொது இடங்களில், மக்கள் புகைப்பிடிக்கும் போது, புகைப்பழக்கம் இல்லாத மற்றவர்களுக்கும், புகையிலை நச்சு உடலுக்குள் சென்று, பல்வேறு உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகிறது.ஆகவே, தவறு செய்யாத வர்களுக்கும், தண்டனை பெற்றுத் தரும் இத்தீயப் பழக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, நம் அனைவரின் கடமையல்லவா?

பொதுமக்கள் புகை பிடிப்பதை கைவிட்டு, தங்கள் நலவாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 1960ம் ஆண்டிலிருந்தே, இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, 2008ல், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. அபராதம் உண்டு என்றாலும், எல்லாமே ஒப்புக்குச் சப்பாணியாகவே உள்ளது.புகையிலை விற்பனையை அதிகரிக்க, புகையிலை நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் பிரமாண்டமான உத்திகளோடு ஒப்பிடும் போது, பட்டுச் சேலைகளுக்கு மத்தியில், பருத்திச் சேலை கண்ணில் படாத மாதிரி, புகையிலையின் கேடுகளை அறிவிக்கும் விளம்பரங்கள், மக்களை அவ்வளவாகச் சென்றடைவதில்லை."புகைப்பது உடல்நலனுக்குக் கெடுதல்' எனும் எச்சரிக்கை வாசகம், சிகரெட் பெட்டியின் அடிப்பகுதியில், கண்ணுக்குத் தெரியாத அளவிற்குச் சிறிய எழுத்தில் அச்சிடப்படுவதே இதற்குச் சான்று.

தமிழக அரசு சென்ற ஆண்டு, "புகையிலை இல்லாத சென்னை' எனும் திட்டத்தின் மூலம், புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஒரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை, செயல்படுத்தியது.இத்திட்டத்தை, "புகையிலை இல்லாத தமிழகம்' என்று விரிவுபடுத்தி, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், புகையிலைத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தோடு இதை நிறுத்திக் கொள்ளாமல், ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
புகைப்பதால் உண்டாகும் பாதிப்புகளை மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களில், அறிவியலில் மட்டுமல்லாமல், துணைப் பாடங்களிலும் பாடமாகச் சேர்க்கலாம்.சில ஆண்டுகளுக்கு முன், எய்ட்ஸ் நோய்க்குத் தொடர்ந்து பல உத்திகளில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்து, வெற்றி கண்டது போல், ஒரு முனைப்பான, தீவிரமான, தொடர்ச்சியான தடுப்பு உத்திகளை மேற்கொண்டு, புகைப்பழக்கத்தின் அபாயங்களை பொதுமக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்ட, மூன்றாவது மாநிலம் பீகார். ஏற் கனவே, மத்திய பிரதேசமும், கேரளாவும், குட்கா, ஜிர்தா பான் விற்பனைக்குத் தடைவிதித்துள்ளன. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும், பழக்கத்தில் உள்ள இந்த மாநிலங்களே துணிந்து, இவற்றின் விற்பனைக்குத் தடைவிதிக்கும் போது, துணிச்சலுக்குப் பெயர் பெற்ற நம் தமிழக அரசுக்கு, இம்மாதிரியான சட்டங்களைக் கொண்டு வருவது கடினமான வேலையே அல்ல.மக்களின் நலன் காப்பதில், மிகுந்த அக்கறையுள்ள நம் தமிழக அரசு, மனது வைத்தால் போதும், "புகையிலை இல்லாத தமிழகம்' எனும் கனவு, விரைவிலேயேநிறைவேறும்.
இ-மெயில்: gganesan95@gmail.com

டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர், எழுத்தாளர்

- தினமலர்