வியாழன், 9 ஜூன், 2011

கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்


பாராட்டப்பட வேண்டிய தீர்மானம். ஆனால், இது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது தி.மு.க. வெளிநடப்பு செய்வது வருந்தத்தக்கது. வெளிநடப்பை உடன் முடித்துக் கொண்டு உடன் தீர்மான நிறைவேற்றத்திற்கு வந்திருக்க வேண்டும். காங்கிரசின் மீது அச்சமா எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் இனி, பொதுவான தமிழர் நலன் குறித்த தீர்மானங்கள் நிறைவேறும் பொழுது தி.மு.க.வும் பங்கேற்க வேண்டும். முதல்வருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கச்சத்தீவு வழக்கில் தமிழக வருவாய்த் துறையையும் சேர்க்க பேரவையில் தீர்மானம்

First Published : 09 Jun 2011 11:58:30 AM IST

Last Updated : 09 Jun 2011 12:10:16 PM IST

சென்னை, ஜூன்.9: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார்.சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை:தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.தீர்மானம்:இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.  இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.  டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார்.  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில்,  வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன. 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல்,  1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி,  முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு, முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.நான் முதல்வராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.2006-ஆம்  ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.  கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.1960-ஆம்  ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.  அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.  மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பி.சி. ராய் அவர்களின் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். 1974-ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதல்வர்  கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974-ல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார். 23.7.1974-ல் மாநிலங்களவையில் திரு கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister.  Just now I heard the views expressed by my Hon’ble friend,  Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed.      … There are two news items which appeared in the Hindu.  One was on June 27.    “When pressmen asked the Tamil Nadu Chief Minister      Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary,     Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.”      On the 29th June, the Chief Minister stated the following to the Press:-    “It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation.  The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”,என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார்.      இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை கேட்ட போது, கருணாநிதி, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது.  கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் அவர்கள் பேசியதை எடுத்து சொல்கிறார்.       “… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice”      அதற்கு விளக்கம் அளித்து, மு. கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up –  I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி.  சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான்  கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன். இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார். சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record--க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்

நல்ல திர்மானம். அடுத்து அடுத்து வரும் இப்படியான செய்திகள் மனதை குளிர வைக்கிறது. ஒரு மாநில சட்டசபையில் கொண்டு வரும் தீர்மானங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். கருணாநிதி ஆட்சி செய்யாததை,செய்ய நினைக்காததை செய்து காட்டிய முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
By sakthy
6/9/2011 1:37:00 PM
எதற்காக இந்த வேண்டாத வேலை. எங்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம். எப்பொழுதோ தாரை வார்த்து கொடுத்தாச்சி. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஸ்டன்ட் அடிக்க வேண்டாம். மீனவர்களே ஏமாறாதீர்கள்.
By manoharan
6/9/2011 12:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக