கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

புதிய மின்வாரியக் கட்டண முறை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79686020130905232428.jpg

 புதிய மின்வாரியக் கட்டண முறை

புதிய இ.பி., பில்லிங் சிஸ்டம்!
ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம், தானியங்கி முறையில் மின் அளவை கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கும், இ.பி., பில்லிங் சிஸ்டம் உருவாக்கிய, மாணவி கீதா
: நான், புதுச்சேரியை சேர்ந்தவள். மயிலம் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கிறேன். மின்சார வாரியம், வாடிக்கையாளர்களின் மின் மீட்டரிலிருந்து மின் அளவை கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தை வசூலிப்பதற்கு, பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வசூல் முறையால், பொது மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மின்சார வாரியம் மற்றும் பொது மக்களின் பணியை எளிமையாக்க, தானியங்கி முறையில் மின் அளவை கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கும், இ.பி., பில்லிங் முறையை, நண்பர்கள் உதவியுடன் உருவாக்கினேன். பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் இ.பி., மீட்டரில், கூடுதலாக, மொபைல் போனில் பயன்படுத்தும், சிம் கார்ட், மைக்ரோ கன்ட்ரோலர் சிப், ரிலே சுவிட்ச், பஸ்சர் அலாரம் ஆகியவற்றைப் பொருத்தினேன். மின் மீட்டரின் நெட்வொர்க்கை, இ.பி., அலுவலகத்தில் உள்ள, நெட்வொர்க் சர்வருடன் இணைத்தேன். இ.பி., அலுவலக சர்வர் மூலம், அன்று எந்த பகுதி மின் மீட்டரில், மின் அளவை கணக்கிட வேண்டுமோ, அதற்கு, ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் அனுப்பினால், உடனே, மீட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் மின் அளவை, துல்லியமாக தெரிவிக்கும். சர்வர், அத்தகவல் மூலம், மின் கட்டணத்தை கணக்கிட்டு, வாடிக்கையாளரின் மொபைலுக்கு கட்டணம் குறித்த தகவலை, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும்.
வாடிக்கையாளர், தன் வங்கி கணக்கு எண்ணை, இ.பி., அலு வலகத்தில் முறைப்படி சமர்ப்பித்தால், வாடிக்கையாளர் சம்மதத்துடன், வங்கி கணக்கிலிருந்து சரியான மின் கட்டணம், "டெபிட்' செய்யப்படும். இப்புதிய தொழில்நுட்பத்தால், சில மணி நேரத்திலேயே, மின் அளவு கணக்கிடப்பட்டு, வாடிக்கையாளரிடமிருந்து கட்டணமும் வசூலித்து விடலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாதவரின், மின் இணைப்பு தானாக துண்டிக்கப்படும்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மின் கம்பி அறுந்தால் . . தானியங்கி நிறுத்தி

மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!

சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. "டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும், "மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. தொடர்புக்கு: 96590 95472.



வணிகம் செய்ய  அகவை தடையில்லை!

பெல் நிறுவனத்தின் பாய்லர்களுக்கு, உதிரிபாகங்கள் செய்து தரும் தொழிலில் ஆண்டிற்கு, 6 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும், கீதா: எனக்கு திருமணம் நடைபெறும் போது, வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்திருந்தேன். குழந்தைகள் பிறந்ததும், கணவர் வெளிநாட்டிற்கு வேலை செய்யச் சென்றார். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், குழந்தைகளை கவனித்து கொண்டே, எம்.ஏ., - எம்.பில்., - எம்.எட்., என, என்னால் முடிந்ததை படித்து, பட்டதாரியாக மாறினேன். பட்டதாரியாக இருந்தாலும், வெறும், 2,400 ரூபாய் சம்பளத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். 2006ம் ஆண்டு, புதிய பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் அமைப்பில், உறுப்பினராக சேர்ந்தேன். அங்கு தான், "பெல்' எனும், பாரத மிகு மின் நிறுவனத்தில், உருவாக்கப்படும் பாய்லர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை செய்வதற்கு, "கான்ட்ராக்ட்' எடுப்பது பற்றி பேசினர். எனக்கும், பிசினஸ் செய்ய ஆர்வம் ஏற்பட்டதால், இது பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். "பெல்' நிறுவனத்தை பொறுத்த வரை, ஆண்களுக்கு மட்டுமே, "கான்ட் ராக்ட்' தருவர். ஏனெனில், இரும்பு போன்ற கடின உலோகங்களுக்கு வெல்டிங் செய்வது போன்று, வேலை, மிக கடினமாக இருக்கும். குறிப்பாக, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தான் முன்னுரிமை. நான், இன்ஜினியரிங் படிக்காத பெண் என்பதால், மேற்கூறிய இரண்டு தகுதிகளும் என்னிடம் இல்லை. இருந்தாலும், கான்ட்ராக்ட்டை பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், வெல்டிங் செய்ய கற்றுக் கொண்டேன். பின், இன்ஜினியரிங் பிரிவில், "அட்மினிஸ்ட்ரேஷன்' படித்து, புதிய பெண் தொழில் முனைவோராக, "பெல்'லிலேயே, "கான்ட்ராக்ட்' பெற்று, வங்கி கடன் மூலம், பிசினசை ஆரம்பித்தேன். தற்போது, ஆண்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு, பிசினசில் உயர்ந்து, 17 தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன். என் பெண்ணிற்கு திருமணம் செய்து, அவளுக்கும் குழந்தை பிறந்த பின்னரே, என் பிசினசை ஆரம்பித்தேன் என்பதால், பிசினஸ் செய்ய வயது தடையில்லை.

வெள்ளி, 5 ஜூலை, 2013

கடை முழுவதும் பெண்களே!

கடை முழுவதும் பெண்களே!


பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும், தொலைபேசி தொடர்பான வாடிக்கையாளர் உதவி மையத் தின் மேனேஜர், கீதா: நான், சென்னையில் உள்ள, ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை மைய மேனேஜராக பணியாற்றுகிறேன். எல்லா அலுவலகங்களிலும், ஆண்களே அதிக அளவில் பணியாற்றுவர். பெயரளவில் மட்டுமே, பெண்கள் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் வேலை செய்தாலும், ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தின் புதிய கிளையை, சென் னையின், டி.டி.கே., சாலையில் அமைக்க தீர்மானித்தோம். எங்களின் மற்ற மையங்களை விட, இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என, திட்டமிட்ட போது, பெண்களை வைத்தே அனைத்து பணிகளையும் செய்வது என, முடிவெடுத்து, 2012 நவம்பர் மாதத்தில், திட்டமிட்டபடி புதிய கிளையை துவக்கினோம்.அலுவலகத்திற்குள் நுழைந்தாலே, பாதுகாப் பிற்கு நிற்கும், "செக்யூரிட்டி' அலுவலக பணிகளில் ஈடுபடும், "டேட்டா என்ட்ரி' பெண்கள், மேனேஜராக இருக்கும் நான் என, 15 பேரும் பெண்களே. அதனால், எங்களின் மையத்திற்கு, "ஏஞ்சல் ஸ்டோர்' என, செல்ல பெயர் வைத்திருக்கிறோம். ஆண்களுடன் வேலை பார்த்த அனுபவத்தை விட, பெண்களுடன் மட்டுமே பணியாற்றும் இச்சூழல், வசதியாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதனால், சில பாதகங்களும் வருவதுண்டு. சில ஆண் வாடிக்கையாளர்கள், வாய்ச்சண்டையில் ஈடுபட்டால், அனைத்து பெண்களும் ஒற்றுமையாக களத்தில் இறங்கி, பிரச்னையை சமாளிக்கிறோம். அப்போது, சில வாடிக்கையாளர்களும், எங்களுக்கு உதவி கரம் நீட்டுவது, சந்தோஷமாக உள்ளது. "பொம்பளைங்க கையில் முழு பொறுப்பையும் கொடுத்தா, காரியம் வீணாகும்' என, யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே, அவர் அவர் வேலையில், இரண்டு மடங்கு கவனம் செலுத்தி, உழைக்கிறோம். பெண்களால், ஒரு அலுவலகம் முழுவதையும், வெற்றிகரமாக இயக்க முடியும் என்பதற்கு, நாங்கள் சாட்சிகளாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ஞாயிறு, 26 மே, 2013

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

கடந்த, 38 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு பதிவை, நம்பிக்கையோடு, முறைப்படி புதுப்பித்து, அரசு வேலை பெற்ற, 57 வயதுள்ள கீதா: நான், சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். 1975ம் ஆண்டு, பி.யூ.சி., முடித்தேன். என்னுடன் படித்த நண்பர்களோடு இணைந்து, அரசு வேலை கிடைக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்தேன். திருமணமானதும், குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில், கணவர் செக்யூரிட்டியாகவும், நான் தட்டச்சராகவும் என, இருவரும் வேலைக்கு சென்றோம். இருந்தாலும், இரு பெண்களையும், பி.இ., மற்றும் பி.காம்., படிக்க வைக்க, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தட்டச்சராக, தொடர்ந்து அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், ஒரு நாள், எனக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என, தொடர்ந்து, 38 ஆண்டுகளாக புதுப்பித்து வந்தேன்.அரசு வேலைக்காக, 40 வயதை தாண்டியும், தொடர்ந்து புதுப்பித்து வருவதை கவனித்து வந்த உறவினர் பலர், சலிப்பாகவும், சிரிப்பாகவும் பேச ஆரம்பித்தனர். "உனக்கு, எங்கே இனி, அர” வேலை கிடைக்கப் போகுது' என, அறிவுரையும் வழங்கினர். நான், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நம்பிக்கையோடு என் கடமையை சரிவர செய்தமையால், 57 வயதான எனக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது. தற்போது, நானும் ஒரு அரசு ஊழியர் என்ற மதிப்பு, மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள, நில உடமை பிரிவில், வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிடைத்துள்ள அரசு வேலை, காலாகாலத்தில் கிடைக்கவில்லையே என, மனதிற்குள் ஒரு வருத்தமும் உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, "40 வயதுக்கு மேல், இனி நமக்கு அரசு வேலை எங்கே கிடைக்க போகுது...' என எண்ணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைவருக்கும் முன்உதாரணமாக, நம்பிக்கையான, ஒரு அரசு ஊழியராக இருந்திருக்க முடியாது.

சம்பங்கி பூவைபயிரிடலாம்!

நீர் பற்றாக்குறையால், சம்பங்கி செடியை பயிரிட்டு, மாதம், 50 ஆயிரம் சம்பாதிக்கும், விவசாயி கென்னடி: நான், தஞ்சாவூரில் உள்ள, பர்மா காலனியை சேர்ந்தவன். டிப்ளமோவில், "ஏசி' மெக்கானிக் படிப்பு படித்து, நான்கு ஆண்டுகள், வெளிநாடுகளில் வேலை செய்து திரும்பினேன். விவசாயம் மீது ஆர்வம் இருந்தாலும், என்னிடம் சொந்த நிலம் இல்லாததால், லீசுக்கு நிலத்தை வாங்கி, சம்பங்கி செடி பயிரிட முயற்சித்தேன்.
சம்பங்கி செடியை, களிமண்ணாக இருக்கும் என் நிலத்தில் பயிரிட முடியாததால், செடி நன்றாக வளர, செம்மண் கலந்த வண்டல் மண்ணாக மாற்றினேன். நுண்ணூட்ட சத்தைப் பெற, நவதானியம், தக்கைப்பூண்டை விதைத்து, பூக்கும் நேரத்தில் அவற்றை அப்படியே மடக்கி, இரண்டு முறை நன்கு உழுது, நிலத்தை சீர்செய்தேன்.சம்பங்கி செடி விதைகள், தனியாகக் கிடைக்காது. வெங்காயம் போன்ற வடிவில் கிழங்காக கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கான கிழங்குகளை வாங்கி, இரண்டு மாதங்கள் நன்கு காய வைத்த பின், பாத்திகளாக பிரித்து, முக்கோண முறையில் நட வேண்டும். இம்முறையால், களைகள் வளர்வது அதிக அளவில் தவிர்க்கப்படும்.தெளிப்பு நீர் பாசன முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், நீர் தெளித்தால் போதும். ஒரு செடியின் இலைகளில், "இலைப் பேன்' நோய் வந்தால், தொற்று நோய் போல், பயிரிடப்பட்ட அனைத்து செடிகளின் இலைகளிலும், பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது முக்கியம். 80 சதவீத இயற்கை உரங்கள் மற்றும் 20 சதவீத செயற்கை உரங்கள் என, இரண்டையும் கலந்தே பயன்படுத்துகிறேன்.
நடவு செய்த, ஐந்தாம் மாதத்திலிருந்து, சம்பங்கி பூக்கள் பூக்க ஆரம்பித்தாலும், ஏழு மாதங்களுக்கு பிறகே, வணிக ரீதியிலான விற்பனைக்கு தயாராகும். அதிலிருந்து, மூன்று ஆண்டுகள் வரை, தினமும் பூக்கும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கர் பயிரிடப்பட்ட நிலத்தில், தினமும், 50 கிலோ பூக்கள் பறிக்கலாம். ஒரு கிலோ சம்பங்கி பூ, 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். தொடர்புக்கு: 99764 05612

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அப்பாடா இப்பவாவது கிடைத்ததே: 57 அகவைப் பெண்ணுக்கு அரசுப் பணி




அப்பாடா இப்பவாவது கிடைத்ததே: 57 அகவை ப் பெண்ணுக்கு அரசுப் பணி
ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு, அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், "டைபிஸ்ட்' பணியில் நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதித்தது. இதன்படி, காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தட்டச்சர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 35 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று நடந்தது.

மேயர் சைதை துரைசாமி, பணி ஆணைகளை வழங்கினார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, கீதா என்பவரும், பணி ஆணை பெற்றார். இவருக்கு, வயது 57. நில உடமை பிரிவில் பணி வழங்கப் பட்டுள்ளது. இவர், குதூகலமாக பணியை, நேற்று துவங்கினார்.ஓய்வு வயதுக்கு இன்னும், ஒரு ஆண்டே உள்ள நிலையில், அரசுப் பணி கிடைத்தது குறித்து, கீதா கூறியதாவது: நான், 1975 ம் ஆண்டு, பி.யூ.சி., முடித்து, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். அரசு பணிக்காக, இதுவரை, 10 முறை, நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றுள்ளேன்.வேலைவாப்பக பதிவை, தவறாமல் புதுப்பித்து வந்தேன். இரண்டு மகள்களும், "இனிமேல் எப்படி வேலையாக கிடைக்கப் போகிறது...' என, கிண்டல் செய்தனர். நான், "ஒரு மாதமாவது அரசுப் பணி செய்வேன்; எனக்கு நம்பிக்கை உள்ளது' என்று, கூறி வந்தேன்; என் நம்பிக்கை வீண் போகவில்லை.
இப்போது, பணி கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என் கணவர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். என் மூத்த மகள், பி.இ., முடித்துள்ளார். இரண்டாவது மகள் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.பணம் கொடுத்தால் தான், அரசு வேலை கிடைக்கும் என்ற காலம், மாறியிருக்கிறது. இந்த நிலை, தொடர வேண்டும், என்பதே என் விருப்பம். ஓராண்டு காலம் பணியாற்றுவேன்; அது போதும். ஓய்வு பெறும் வயது, 60 ஆக உயரும் என்கின்றனர். அப்படியானால் மூன்று ஆண்டுகள் பணியாற்ற முடியும்.
இவ்வாறு, கீதா கூறினார்.

"குடும்ப கஷ்டம் தீரும்'
ராயபுரத்தைச் சேர்ந்த, 51 வயதான புருஷோத்தமனுக்கு, மாநகராட்சியில் தட்டச்சர் பணி கிடைத்துள்ளது. இவர், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், நேற்று பணியில் சேர்ந்தார்.அவர் கூறுகையில், ""பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளேன். பல முறை, "இன்டர்வியூ' சென்றும் வேலை கிடைக்கவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். "இன்டர்வியூ' அழைப்பு வந்ததும், நம்பிக்கை இல்லாமல் தான் வந்தேன். எந்த சிபாரிசும், பணமுமின்றி, வேலை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் தீரும்,'' என்றார். -நமது நிருபர்-

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அதிர வைக்கும் "அந்த நாட்கள்'

அதிர வைக்கும் "அந்த நாட்கள்'!

First Published : 23 Sep 2012 12:00:00 AM IST


அரசுப் பணி புரிபவர்கள் சமூகப் பணியிலும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளார் இளங்கோவன். தென்னக ரயில்வேயின் துணைப் பொது மேலாளராகப் பணிபுரியும் இவர்"சுடர்'  என்ற அமைப்பின் மூலம் 12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின் மேற்படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மனைவி கீதாவும் ஓர் அரசு ஊழியர். இவர் பெண்களுக்காக "கூடு' என்கிற அமைப்பை நடத்திக் கொண்டிருப்பதோடு குறும்பட இயக்குநராகவும் உள்ளார். இருவரையும் நாம் சந்தித்தோம்.முதலில் நம்மிடம் பேசினார் இளங்கோவன்.""அரசுப் பணியில் இருந்தாலும் தனிப்பட்ட மன நிம்மதிக்காக ஏதேனும் செய்ய வேண்டுமென்று தோன்றியது. அப்போதுதான் நண்பர்களுடன் இணைந்து "சுடர்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். ஆதரவற்ற பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்கு இந்த அமைப்பின் மூலமாக உதவி செய்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு நான் மதுரையில் பணிபுரிந்தபோது அங்கிருந்த அரசுக் காப்பகத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே 12ஆம் வகுப்பு வரை அரசின் சலுகையில் படிக்கும் ஏழைப் பெண்கள் பலர் அதன்பின் செல்லும் திசை புரியாமல் திகைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களின் பெற்றோருக்கும் போதிய கல்வியறிவு இல்லாத நிலையில் வறுமை காரணமாக பல மாணவிகள் கூலி வேலைக்கும், மில் வேலைக்கும் சென்றனர். அவர்களுக்கு தொழிற்கல்வி கொடுக்க நினைத்தோம். கேட்டரிங், நர்ஸிங் அஸிஸ்டென்ட், என்ஜினியரிங் போன்ற துறைகளில் படிக்க வைத்தோம். இன்று பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதில் சரண்யா என்ற மாணவி என்ஜினியரிங் படித்துவிட்டு தற்போது ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய படிப்புக்கான முழு செலவையும் "சுடர்' அமைப்பே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னையிலும் இந்த சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மதுரையில் உள்ள காப்பகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இலவச டியூஷன் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல உயர் அதிகாரிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மம்சாபுரம் பகுதியில் மாணவர்களுக்காக இலவச பிரெüஸிங் சென்டரும் நடத்துகிறோம்.இது தவிர நான் இரண்டு ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளேன். முதல் படம் "ஆராயா தீர்ப்பு'. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் 500 சாதியினரை "குற்றப்பரம்பரை' என்ற பட்டியலில் வைத்திருந்தார்கள். அவர்கள் மீது 'ரேகைச் சட்டம்' உள்ளிட்ட பல அடக்குமுறைகள் இருந்தன. தமிழ்நாட்டில் 30 வகையான சாதியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். அதில் "கல்ஒட்டர்' என்று சமூகமும் உண்டு.ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தால் துன்புறுத்தப்பட்ட அவர்கள் தற்போதும் துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தில் பதிவு செய்திருந்தேன்.மதுரையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கல்ஒட்டர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். குற்றவாளிகள் அகப்படாத பல திருட்டு வழக்குகளில் அந்த சமுதாய இளைஞர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்கும் கொடுமையை காவல்துறை செய்து கொண்டிருப்பதை ஆதாரபூர்வமாகக் கூறியிருந்தேன்.இந்த ஆவணப் பட வெளியீட்டு விழாவில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டர்கள். இந்தப் படத்தைப் பார்த்த அப்போதைய மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி அக்பர் அலி ஒரு வழக்கின் தீர்ப்பின்போது ஓர் உத்தரவிட்டார். ""இனி கல்ஒட்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் தன்னிச்சையாகக் கைது செய்யக் கூடாது. தன்னார்வ அமைப்பினரிடம் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும்'' என்றவர் அதற்காக ஒரு தன்னார்வ அமைப்பையே நியமித்தார். அதையே இந்தப் படத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். "கல்ஒட்டர் சமூகத்தில் பிறந்ததற்காக பள்ளியிலும் பல கேலிகளை அனுபவிக்கிறோம்' என்று பல மாணவ, மாணவிகள் அந்த ஆவணப் படத்தில் கூறியிருந்தார்கள். தற்போது அவர்களில் பல மாணவ, மாணவிகளை என்.ஜி.ஓ.க்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.அடுத்து திருநங்கைகளின் வாழ்வை அடிப்படையாக வைத்து "அஃறிணைகள்' என்ற ஆவணப் படத்தை இயக்கினேன். லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்செல் கிளாடி ஆகிய இரண்டு திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இந்தப் படம். திருநங்கைகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை இந்தப் படம் அலசியது. இந்தப் படத்திற்கு சரத் சந்திரர் நினைவு விருது கிடைத்தது. இரண்டு படங்களும் த.மு.எ.க.ச.வின் விருதுகளைப் பெற்றன. மும்பையில் செயல்படும் ஃபிலிம் சொûஸட்டி அமைப்பு உலகம் முழுக்க இந்தப் படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கியுள்ளது'' என்றார்.தொடர்ந்து நம்மிடம் பேசினார் கீதா இளங்கோவன்:""நான் மதுரையில் பணிபுரிந்தபோது அங்கு "கூடு' என்ற அமைப்பை ஆரம்பித்தேன். நான் தற்போது சென்னையில் வசித்தாலும் அந்த அமைப்பு அங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் இலவச நாடகம் நடத்துகிறோம். "பெண்திரை' என்ற தலைப்பில் பெண்கள் இயக்கிய குறும்படத்தைத் திரையிட்டோம். "வாழும் பெண்களின் வாய்மொழி வரலாறு' என்ற தலைப்பில், பிணம் எரிப்பது போன்ற தொழிலைச் செய்யும் பெண்களை அழைத்து வந்து அவர்களின் வாழ்க்கையைப் பிறர் அறிந்து கொள்ள வைத்தோம். இதுதவிர நான் "லிட்டில் ஸ்பேஸ்' என்று குறும்படத்தை இயக்கியுள்ளேன். மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளைப் பற்றிய படம் இது. பொது இடங்களில் அவர்கள் படும் கஷ்டங்கள் அவர்களின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கிறது என்பதை இந்தப் படத்தில் கூறியிருந்தேன். ஹைதராபாத்தில் நடந்த "சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா'வில் இந்தப் படம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. 'ஸ்கார்ஃப்' என்கிற அமைப்பின் விருதையும் இந்தப் படம் பெற்றது. இதையடுத்து தற்போது "மாதவிடாய்' என்ற குறும்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.இதற்காக பல குக்கிராமங்கள் தோறும் பயணம் செய்து படிப்பறிவில்லாத பெண்கள் படும் துயரத்தைப் பதிவு செய்துள்ளோம். கிராமப்புற பெண்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வே இல்லை. உதாரணத்திற்கு மதுரை அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி என்ற கிராமத்திற்கு இந்தப் படம் தொடர்பாக சென்றோம். அந்தக் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் மாத விலக்கான பெண்கள் அனைவரையும் அந்த நாட்கள் முடியும் வரை ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு சிறிய வீட்டில்தான் தங்க வைக்கிறார்கள். அந்த வீட்டில் மின்சார வசதிகூட இல்லை. அந்தப் பெண்கள் அந்த நாட்களில் ஊருக்குள் வரக் கூடாது. இதைவிட கொடுமை, பிரசவம் ஆன பெண்களை 30 நாட்களுக்கு அந்த வீட்டில்தான் தங்க வைக்கிறார்கள். பிறந்த பச்சிளங் குழந்தையுடன் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக தனியே இருக்கும் அந்த வீட்டில்தான் வசிக்க வேண்டும். முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் ஒரு வயதான பெண்மணி அவருக்கு உதவியாக இருப்பார். பிறகு அவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவார். இந்தப் பெண்களுக்கு சாப்பாடு மட்டும் அவ்வப்போது யாரேனும் சென்று கொடுப்பார்கள். அதுவும் சில நாட்களுக்குக் கிடைக்காது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால், "சாமிக்கு பயந்து இவ்வாறு செய்கிறோம்' என்கிறார்கள். இவ்வாறு படித்தவர்கள் முதல் பாமரர்கள் மத்தியில் வரை மாதவிலக்கு தொடர்பாக உள்ள தேவையற்ற அறியாமைகளை போக்கும் விதமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்'' என்று முடித்தார் கீதா இளங்கோவன்.