கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 மே, 2013

கூடங்குளம்- உச்சநீதிமன்றம் இசைவு தீயூழ்: அச்சுதானந்தன்

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க உச்சநீதிமன்றம் இசைவு வழங்கியது தீயூழ்: அச்சுதானந்தன்

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது துரதிர்ஷ்டவசமானது என கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதி தரக்கூடாது என வலியுறுத்து அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். ஆனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அணுமின் நிலையத்தை இயக்கலாம் என உத்தரவிட்டது.இதுதொடர்பாக அச்சுதானந்தன் வெளியிட்ட அறிக்கையில்:
கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அணுமின் நிலையம் இயக்க அனுமதி தந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதன் கட்டுமானத்துக்கு தரம் குறைவான பொருள்கள் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது அணுமின் நிலையம் இயங்க அனுமதி தந்திருப்பது மேலும் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தி விடும் என்றார் அவர்.
அணுமின் நிலைய விவகாரத்தில் தனது கட்சியான மார்க்சிஸ்ட் நிலைக்கு எதிராக எதிர்ப்பாளர்களுக்கு அச்சுதானந்தன் ஆதரவு தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி  2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியா,பல்கேரியா,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு பொருட்கள் வழங்கி வரும் இந்நிறுவனம் இப்போது பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. தங்களுடைய நாட்டில் அமைந்துள்ள அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாமல் தரச்சான்றிதழையும் கோரியுள்ளது பல்கேரியா. இந்நிறுவனம் வழங்கும் தரக்குறைவான பொருட்களைப் பற்றி சீனாவும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.கோபாலகிருஷ்ணன் ஒரு ஆங்கில நாளிதழில் சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் கூடங்குளம் அணு உலைகளை திறப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குக் காரணம் தரக்குறைவான பொருட்களாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தரக்குறைவான பொருட்களை பயன்படுத்துவது அணு உலை விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் ஜியோ-போல்டோஸ்க் நிறுவனத்தின் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள எல்லா அணு உலைகளிலும் செயல்பாட்டை நிறுத்தி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் ரஷ்ய சுற்றுசூழல் களப்பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். தவிர, அணு உலைகளின் திறன் குறித்து கூடங்குளம் பகுதி மக்களின் பயம் நியாயமான ஒன்று என்றும் அவர் கருதுகிறார்.
கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு அன்னிய நிதி, போராட்டத்தின் பின்னணியில் மதவாத சக்திகள் இயங்குகின்றன என்று தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே வீசி வந்த இந்திய அணு நிறுவனத்திலிருந்து உண்மையின் குரலாக, நியாயத்தின் குரலாக ஒலித்திருக்கிறது கோபாலகிருஷ்ணன் குரல்.
இது போக, போராட்டத்தை முன்னெடுத்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தகவலறியும் உரிமையின் கீழ் கோரிப் பெற்றிருக்கும் தகவலின் படி, கூடங்குளம் அணு உலைகளின் அழுத்தக் கலனில் மையப்பகுதியில் இரண்டு இடங்களில் இணைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அணு உலைகளின் அழுத்தக்கலனில் இணைப்புகள் அமைப்பது அதன்  முதிர்வுக் காலத்தை வேகப்படுத்தும் என்றும் அதனால் உலகெங்கும் அணு உலைகள் இப்படிப்பட்ட இணைப்புகளை பொதுவாக அமைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையில் இதனால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்திருந்தும் இணைப்புகளை அமைப்பது, அம்மக்களின் நியாயமான அச்சங்களை உதாசீனப்படுத்தும் செயலாகவே இருக்கிறது. தவிர, அணு உலையில் வால்வுகள் சரியில்லை என்பதையும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தரம் குறைந்த பொருட்கள் கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தும் அச்சத்தோடு போராடி வரும் மக்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் அல்லாமல் அணு உலைகளை அம்மக்கள் மீது மத்திய அரசு திணிக்க எத்தனிப்பதை ம.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.
தரக்குறைவான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்தோடு அல்லாமல், மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணு உலைகளை உடனடியாக மூட முன் வர வேண்டும் என்றும் ம.தி.மு.க மத்திய அரசை கோருகிறது.

திங்கள், 31 டிசம்பர், 2012

கூடங்குளம் : கலைநிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்லும் திட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைக் கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டம்
 
இராதாபுரம், டிச.31-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்பாளர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இடிந்தகரை கிராமத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஏராளமான மக்களை திரட்டி மேலும் பல போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

அணுஉலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை இடிந்தகரை மக்கள் எந்த ஒரு விழாவையும் ஆடம்பரமாக கொண்டாடவில்லை. திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள்கூட மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டன.

இந்நிலையில் 2013 புத்தாண்டை முன்னிட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மராட்டியம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணுஉலை எதிர்ப்பாளர்கள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், மீனவ மக்கள் 250பேர் நேற்று இடிந்தகரை வந்தனர்.

அவர்களை இடிந்தகரை பங்குத்தந்தை ஜெயக்குமார், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் வரவேற்றனர். பின்பு அவர்களுக்கு அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின் போக்கு குறித்தும், விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இடிந்தகரை வந்துள்ள வெளிமாநில அணுஉலை எதிர்ப்பு குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை பாடல்கள், நாடகங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை புத்தாண்டு தினத்தில் இடிந்தகரையில் இருந்து தொடங்குகின்றனர்.

அதேநேரத்தில் அந்த குழுவினர், விடுதலையை உறுதிப்படுத்துவோம், எதிர்ப்பை கொண்டாடுவோம் என்ற கருத்தை மையப்படுத்தி இங்கு இன்று காலை முதல் நள்ளிரவு 12மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

இதன் முன்னோட்டமாக இடிந்தகரையில் நேற்று (30-ந்தேதி) கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டத்தை வெளி மாநில அணுஉலை எதிர்ப்பு குழுவினர் இடிந்தகரையில் இன்றுகாலை தொடங்கினர்.

அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களை விளக்கும் வகையில் பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இக்குழுவினர் பல்வேறு கடற்கரை கிராமங்களுக்கும் சென்று கலைநிகழ்ச்சிகளை இன்று நடத்துகிறார்கள்.

இதில் டாக்டர் வினாயக்சென், வக்கீல் பிரசாந்த் பூஷன், முன்னாள் கடற்படை தளபதி ராம்தாஸ், அஜின் வினாயக், வக்கீல் காலின் கொன் சால்வ்ஸ், பிரபுல் பிட்வாய், லலிதா ராம்தாஸ், அனில் சவுத்ரி, அஜிதா ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

திங்கள், 10 டிசம்பர், 2012

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்




கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தியைத் துவக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலி மீனவர்கள் படகுகளில் வந்து நடுக்கடலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் தலைமை வகித்தார்.
இப்போராட்டத்தின் போது உச்சநீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் நகல்களை போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடலில் வைத்து எரித்தனர். போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சுப. உதயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது அணுமின் சக்தி மற்றும் நாட்டில் உள்ள அணு உலைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்களிடைய பொது விவாதம் நடத்த வேண்டும். பொது விவாதத்துக்குப்பின் பெரும்பான்மையான மக்கள் அணு சக்திக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தால், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அருதிப் பெரும்பான்மைக் கிடைத்தால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட தயார் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை பகுதியில் போலிஸார் நுழைவதற்கு முயற்சித்ததால், பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்பு போலிஸார் அங்கிருந்து விலகியதால் பதற்றம் தணிந்தது.

வெள்ளி, 23 நவம்பர், 2012

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு

First Published : 22 November 2012 03:18 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடப்பட்டுள்ள கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலைக் கழிவுகளைச் சேமிக்கவுள்ளதாகக் கூறப்பட்டதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் பகுதியில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நரிமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டன. அவற்றில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பதிலளித்தார்.
இந்த பதிலால் அச்சமடைந்த மக்கள், தமிழகத்தில் இருந்து அணுக் கழிவுகளை கர்நாடகம் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கோலார் தங்கவயலில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வியாழன், 22 நவம்பர், 2012

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

First Published : 22 November 2012 01:17 AM IST
கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை சிறப்பு பணிக் குழு அளித்த 17 பரிந்துரைகளும் எந்தெந்த கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்பதை விரிவாக விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அணு உலைக்கு எதிராக ஜி.சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 27) ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இரண்டாவது நாளாக புதன்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் கூறியது:
அணுக்கழிவு மறுசுழற்சி இடம் முடிவாகவில்லை: ""கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக் கழிவுகளை எந்த இடத்தில் மறுசுழற்சி செய்வது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் நிலத்தடி தொட்டி உள்ளது. அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தேக்கிவைத்துக் குளிரூட்டப்படும்.
மறுசுழற்சியிலும் 3 சதவீத கழிவுகள்: பயன்படுத்தப்படும் எரிபொருளில் 97 சதவீதத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, அணுக்கழிவுகள்தான் மறுபயன்பாட்டுக்குரிய அணுவளங்களாகக் கருதப்படுகின்றன. மீதமுள்ள 3 சதவீதக் கழிவுகளை வெளியேற்ற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளோம். ஆரம்ப நிலையில் உள்ள இந்த வகைத் தொழில்நுட்பத்தை இந்தியாதான் உலகிலேயே முதலாவதாக உருவாக்கி வருகிறது.
கல்பாக்கத்தில் அணுக்கழிவு சேமிப்புத் திட்டம்: அணு உலையில் பயன்படுத்தப்படும் நீரைக் குளிரூட்ட பல ஆண்டுகள் ஆகும். அதேபோல் உயர்அழுத்த எரிபொருள் கழிவைத் தேக்கி வைக்கும் வசதி தாராபூர் அணு உலையில் உள்ளது. கல்பாக்கத்தில் அந்த வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம் : சில நாடுகளில் யுரேனிய வளம் அதிகம் உள்ளது. அதனால் மறுசுழற்சி முறையில் அணு எரிபொருளைத் தயாரிக்க அவை ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் யுரேனிய வளம் குறைவு. அதனால்தான் யுரேனியம், புளூட்டோனியம் ஆகியவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம். ஆனால் அதை நேரடியாக அணுப்பிளவு (நியூக்ளியர் ஃபிஷன்) செய்ய முடியாது. "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை உருவாக்க முடியும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தத் சோதனை நடைபெற்று வருகிறது.
2020-ல் 750 டன் மறுசுழற்சி எரிபொருள்:  இந்தியாவில் டிராம்பே அணுமின் நிலையத்தில் ஆண்டுக்கு 60 டன் மறுசுழற்சி எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். தாராபூர், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களில் உயர் அழுத்த நீர் திறன் கொண்ட எரிபொருளை ஆண்டுக்குத் தலா 100 டன் அளவுக்குத் தயாரிக்க முடியும். 2020ஆம் ஆண்டில் நாட்டின் பல இடங்களில் இந்த வசதியை உருவாக்கி 750 டன் மறுசுழற்சி எரிபொருளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ரோஹிங்டன் நாரிமன் வாதிட்டார்.
தெளிவில்லாத திட்டம்: இதையடுத்து மனுதாரர் சுந்தர்ராஜன் சார்பில் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்:
உலகின் எந்த அணு உலையிலும் எரிபொருளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. எரிபொருளை மறுசுழற்சி செய்த பின் அங்கு கழிவுகள் என்னவாகும் என்பதை அணுசக்தித் துறை தெளிவுபடுத்தவில்லை.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இடத்தை ஆணையம் இதுவரை தேர்வு செய்யவில்லை. அந்த இடத்தைக் கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்? அங்கு எவ்வாறு அணுக்கழிவுகள் தேக்கி வைக்கப்படும்? அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்? போன்ற திட்டங்கள் அணுசக்தித் துறையிடம் இல்லை.
கடல் வளம் பாதிக்கப்படும்: கூடங்குளத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆறு உலைகள் செயல்படத் தொடங்கியதும் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் குளிரவைக்க கடல் நீர் பயன்படுத்தப்படும். பின்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4200 கோடி லிட்டர் சுடு நீர் கடலில் கொட்டப்படும்.
கடல் நீர் ஏற்கெனவே 29 டிகிரி வெப்பநிலையில் இருக்கும்போது அணு உலையில் பயன்படுத்தப்பட்ட 7 டிகிரி வெப்பம் கொண்ட நீரைக் கொட்டுவதால் கடல் நீரின் வெப்பநிலை 36 டிகிரியாக அதிகரிக்கும். இதனால் கடல் வளம் பாதிக்கப்படும்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதன் தலைவராக மத்திய அணுசக்தித் துறையின் செயலர்தான் இருக்கிறார். எனவே அணு மின் நிலையங்களைக் கண்காணிக்க செயல் அளவில் தன்னிச்சையான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும்.
"அணுசக்தி ஆணையம் நியமித்த சிறப்புப் பணிக்குழு அளித்த 17 பரிந்துரைகளும் நிறைவேற்றிய பிறகு அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும்' என மத்திய அரசு ஆரம்பத்தில் கூறியது.
ஆனால், சில மாதங்களில் அந்த நிலையை மாற்றிக் கொண்டு முதலில் 6 பரிந்துரைகளையும் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மற்ற பரிந்துரைகளையும் செயல்படுத்துவோம் என இப்போது கூறி வருகிறது. இந்த முரண்பட்ட நிலைக்கு இந்திய அணுசக்தி ஆணையம் அளிக்கும் விளக்கம் ஏற்கும்படி இல்லை'' என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ""அணுசக்தி குழு பரிந்துரைகளின் அமலாக்கம் எந்த அளவில் உள்ளன? அவை எந்தெந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்படும்? அவற்றை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்?'' என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறை: வைகோ கண்டனம்

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறை: தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

First Published : 16 November 2012 10:21 AM IST
கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மீது, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை, கைது அத்துமீறல் என நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"தென்தமிழ்நாட்டின், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக்கோரி, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கமும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தொடக்கத்தில் இருந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
ஜப்பானில் புகுஷிமா அணு உலை பேரழிவிற்குப் பின்னர், உலகத்தில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவுசெய்து உள்ள சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் இடிந்தகரையைப் போராட்டக்களமாகக் கொண்டு அமைதி வழியில் அறப்போர் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் பங்கேற்ற காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரும், ஓராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டமும், இதுவரை இந்தியாவில் எங்கும் நடைபெறாத உறுதியும் தியாகமும் நிறைந்த போராட்டம் ஆகும்.
ஆனால், மத்திய அரசு போராட்டக்காரர்களை இழிவுபடுத்தியும், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், கிறிஸ்துவ மிசினரிகள் மீது அபாண்டமாக பழி சுமத்தியும், போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் மீது களங்கச் சேற்றை வாரி இறைத்தும், இந்திய விமானப்படை விமானங்களை இடிந்தகரை வட்டாரத்தில் தாழ்வாகப் பறக்கச் செய்து அச்சுறுத்தியும், அதன் விளைவாக இடிந்தகரையைச் சேர்ந்த மீனவர் சகாயத்தை படுகொலை செய்தும் தொடர்ந்து அராஜகம் புரிந்து வருகிறது.
தமிழக அரசும், ஒரு இடைப்பட்ட 5 மாத காலத்தில், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலையை திறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, பின்னர் அணு உலையை இயக்குவதற்கு ஆதரவு அளித்தோடு. இந்தப் பிரச்சினையின் தொடக்கத்தில் இருந்தே காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி வருகிறது. கடந்த 2011 செப்டம்பர் தொடக்கத்தில், கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்காக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தது.
அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டதோடு, இந்த நெடிய போராட்டத்தில் துளி அளவும் வன்முறையில்  கிளர்ச்சியாளர்கள் ஈடுபடவில்லை. எனினும், காவல்துறை தடியடிப் பிரயோகம், கண்ணீர்புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி கொடிய அடக்குமுறைகளில் ஈடுபட்டது. மணப்பாட்டைச் சேர்ந்த அந்தோணி ஜான் என்பவரைச் சுட்டுக் கொன்றனர். இந்த இரண்டு படுகொலைகளுக்கும் தமிழக அரசு நீதி விசாரணை அறிவிக்கவில்லை.
இதுவரை, 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் மொத்தத்தில் 2 லட்சம் பேர் மீது போடப்பட்டு உள்ளன. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 8 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். தாய்மார்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இடிந்தகரை, வைராவிகுளம், கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பலர், இன்னமும் வேலூர், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டைச் சிறைகளில் வாடுகின்றனர். அறப்போராட்டத்தை நசுக்க முனைந்து,  அடக்குமுறையின் உச்சகட்டமாக, தற்போது அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவி சிறையில் அடைக்கத் தொடங்கி விட்டனர்.
இடிந்தகரையைச் சேர்ந்த 68 வயதான லூர்துசாமி என்பவரும், 40 வயதான நசரேன் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நவம்பர் 15 அன்று வைராவிக்குளத்தைச் சேர்ந்த தவசிகுமார் மீதும் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்துபாரத் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு கைது செய்து பாளை மத்திய சிறையில்  அடைத்து உள்ளனர்.
பிணையில் சிறையில் இருந்து விடுதலை பெறக்கூடாது  என்பதற்காக, காவல்துறை ஏவுகிற இந்த பாசிச நடவடிக்கை ஜனநாயகத்தின் மென்னியை முறிக்க முயலும் அநீதி ஆகும். அடக்குமுறையாலோ அச்சுறுத்தலாலோ எதேச்சதிகார மிரட்டலாலோ, எந்த உரிமைக் கிளர்ச்சியையும் நசுக்க முடியாது. மாறாக, போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும்; வெல்லும் என்பது வரலாறு தருகின்ற பாடம் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும். காவல்துறையினர் மேற்கொண்டுவரும் அராஜக அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, பொய் வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை

தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 படகுகள் முற்றுகை



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் கடல்பகுதி நுழைவு வாயிலை சனிக்கிழமை படகுகள் மூலம் முற்றுகையிட்ட அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்.
தூத்துக்குடி, செப். 22: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் போராட்டக் குழுவினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும், எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வேண்டும், 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் கடந்த 10-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவ அமைப்பினர் அடுத்த கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.போராட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டன. இதுதவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருச்செந்தூர், அமலிநகர், புன்னக்காயல், மணப்பாடு, ஆலந்தலை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளான இடிந்தகரை, உவரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இப் போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேவியர் வாஸ், நாட்டுப் படகு சங்கத் தலைவர் ஜான்சன், பேராசிரியை பாத்திமா பாபு உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.பலத்த பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் பிரச்னைகள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், துறைமுகத்தின் கடல் பகுதி நுழைவு வாயிலில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான வீராஸ், அகல்யா பாய், நாட்கி தேவி ஆகிய கப்பல்களும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புப் பிரிவு ரோந்து படகுகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. துறைமுக நுழைவுவாயிலில் ராட்சத கயிறு மூலம் படகுகள் உள்ளே செல்ல முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தது. மேலும், துறைமுக சுற்றுப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆயுதம் தாங்கிய நிலையில் சுமார் 300 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடலோர காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் மூலமும் போராட்டம் கண்காணிக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தையொட்டி, தூத்துக்குடி மாநகரப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.துறைமுக நிலவரம்: தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 7 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தக் கப்பல்களில் இருந்து நிலக்கரி, சுண்ணாம்பு, பொது சரக்குகள் போன்ற பொருள்களின் இறக்குமதி வழக்கம்போல் எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்றது.மேலும், வெளித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 கப்பல்களைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதுதவிர, நிலக்கரி ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நிலக்கரிக்கான தனி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.கட்சிக் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு:  இதற்கிடையே திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை காலை அணு உலைக்கு எதிராகவும், கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி வந்த சிலர் அந்தப் பகுதிகளில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர். பின்னர் கொடிகளை தீ வைத்து எரித்தனர்.இதனால் அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன.மனிதச் சங்கிலி: வஉசி துறைமுக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் பலர் இனிகோ நகரில் இருந்து மீன்பிடி துறைமுகம் வரை  பனிமய மாதா பேராலய பங்குத் தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். பாதிப்பு இல்லை: போராட்டம் குறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் நடராஜன் கூறியது: பல்வேறு காரணங்களால் கப்பல்கள் வருவதிலும், செல்வதிலும் தாமதம் ஏற்படுவது உண்டு. இந்தப் போராட்டத்தால் துறைமுக செயல்பாட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.