இதயத்தை வாட்டி வதைக்கும் துயரம்! வைகோ
தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது. வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த அப்பெருமகனார், அரசு அலுவலராகப் பணி ஆற்றிய நாள்களில், நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்.
தமிழ் உலகம் போற்றும் மாவீரர் திலகத்தின் புகழுக்கு உரிய தந்தையான வேலுப்பிள்ளையும், அவரது துணைவியார் அன்னை பார்வதி அம்மையாரும், ஒருவருக்காக ஒருவர் என்று மனமொத்து வாழ்ந்த இலட்சியத் தம்பதியர் ஆவர். தமிழகத்தில் அவர்கள் தங்கி இருந்த நாள்களில், பலமுறை சந்தித்து இருக்கிறேன். என் இல்லத்துக்கு, எங்கள் குடும்ப விழாக்களுக்கப் பலமுறை வந்து வாழ்த்திச் சிறப்பித்தனர். எனது மூத்த மகளின் ஆண் பிள்ளைக்கு, என் வீட்டுக்கு வந்து, ‘பிரபாகரன்’ என்று பெயர் சூட்டினார்கள். எனது பெற்றோரைப் போலக் கருதி, அவர்கள் மீது அளவற்ற அன்பும், மதிப்பும், பாசமும் கொண்டு இருந்தேன்.
இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைபாதக சிங்கள ராஜபக்சே அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, வதைமுகாம்களில், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்துகிறது. பிரபாகரனின் பெற்றோர், போராளிகள் அல்ல. வயது முதிர்ந்த இவர்களை, அதிலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கையும் காலும் சரிவர இயங்காத நிலையில் உடல் நலிவுற்று உள்ள பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாமில் அடைத்துச் சிங்கள இராணுவம் துன்புறுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரச் சிங்கள அரசு, இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது. பிரபாகரனின் பெற்றோரை, பயங்கரவாதத் தடுப்பு முகாமில், வெளி உலகத்தார் எவ்விதத் தொடர்புகளும் கொள்ள முடியாத நிலையில் அடைத்து வைத்து இருந்தது ஏன்?
கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்வி, தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டு, எவ்வளவோ முயற்சித்தும், ஏன் சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை? தங்கள் தாயக மண்ணில் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் கோரமாகக் கொல்லப்பட்ட கொடுமையால், உள்ளம் சுக்கல்சுக்கலாக உடைந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாம்களில் துன்புறுத்தி, அவமானப்படுத்தி உள்ளனர். நினைப்பதற்கே நம் நெஞ்சு கொதிக்கிறது.
ஈவு, இரக்கம், மனிதாபிமானம் எதுவுமே இல்லாத மிருகத்தனமான அரக்க வெறியோடு சிங்கள அரசு, தமிழர்களை வதைப்பதற்குச் சாட்சியம்தான் வேலுப்பிள்ளையின் மரணம் ஆகும். உலகத்தை ஏமாற்றுவதற்காக சிங்கள இராணுவ பிரிகேடியர் உதய நாணயக்கார, இயற்கை மரணம் என்று கூறி உள்ளான். அவர் உடல்நலம் குன்றிய நிலையில், அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள்? ஏன் அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்கவில்லை? கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட எண்ணற்றோர், விசாரணை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளாகினர். எத்தனையோ பேர் சாகடிக்கப்பட்டனர் என்ற உண்மை இன்றைக்கு மறைக்கப்பட்டாலும், அக்கொடுமைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரத்தான் செய்யும்.
தமிழ் ஈழத்தில் நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, சிங்களரால் இழைக்கப்பட்ட கொடுமையும், படுகொலையும், பேரழிவும், பிஞ்சுக்குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நம் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்டு மடிந்ததை எண்ணி, அழுது துடிக்கும் நமக்கு, உத்தமர் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில், நாம் வணங்குவதற்கு உரிய அன்னை பார்வதி அம்மையாரின் மனவேதனையைக் கற்பனை செய்வதற்கே உள்ளம் நடுங்குகிறது.
நாம் ஒருவருக்கு ஒருவர், ஆறுதல் கூறவா முடியும்? தேறுதல் சொல்லவா முடியும்? தமிழ் இனத்தின், ஈழத்தமிழ்க் குலத்தின் தியாக வரலாற்றுத் தலைவனின் அன்புத்தந்தை வேலுப்பிள்ளை அவர்கள், போற்றுதலுக்கு உரிய மாமனிதராகவே தமிழர் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்!
‘தாயகம்’
வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
07.01.2010 மறுமலர்ச்சி தி.மு.க
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 9129
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக