புதன், 6 ஜனவரி, 2010

செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு

பதிந்தவர்_கனி on January 5, 2010
பிரிவு: செய்திகள்

தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று தமிழினத்தை துன்ப இருள் கவ்விக் கொண்டிருக்கிறது. இந்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தமிழீழ மக்களின் கண்ணீராலும் குருதியாலும் நனைந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்கொடுமைகளுக்குக் காரணமான நம் அரசுகள் இப்பொழுது இது அயல்நாட்டுச் சிக்கல் என்கின்றன. நாம் நமது கவலை என்கிறோம்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எந்தப் பின்னணியில் கூட்டப்படுகிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு கட்சி மாநாட்டை அறிவிப்பது போல் உலகத்தமிழ் மாநாடு குறித்துத் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. உரிய கால இடைவெளி, ஆராய்ச்சிப் புலம்சார்ந்த அணுகுமுறை இல்லாமல் செய்யப்பட்ட இந்த அறிவிப்பை உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் நோபரு கரோஷிமா ஏற்க மறுத்து விட்டார். இதை அடுத்துத் தடாலடியாக இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்களுக்குப் பின்னியங்கும் அரசியலை நுழைபுலம் காணும் ஆய்வாளர்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள்.

ஈழத்தமிழர் சிக்கலில் உலக அளவில் சரிந்து வரும் தம் செல்வாக்கை உயர்த்துவது என்பது வெளிப்படையான காரணம். இதை வெற்றியுடன் நடத்துவதன் மூலம் தாமும் தமது அரசும் எடுத்த நிலைப்பாடுகளை உலகத் தமிழினம் ஒப்புக் கொண்டு விட்டது என்பது இனி வெளிப்படுத்திட இருக்கிற காரணம். அரசியல் சதுரங்கத்தில் கலைஞரின் காய்களாக நகர்த்தப்படுவதாகத் தமிழ் சமூகமும் தமிழ் மொழியும் ஆனது தான் இன்றின் துன்பியல் வரலாறு.

குறைபடியாத காலைக்கதிர்கள் நீங்கள் தாம் துடிப்புமிக்க மனச்சாட்சியும் நீங்கள் தாம் உங்களை ஒத்த இளைஞர்கள் களச்சாவு கண்டுள்ளனர். தீக்குளித்து மாண்டுள்ளனர். அவர்கள் செய்த ஈகங்கள் அளப்பரியவை. இந்த வரிசையில் இம்மாநாட்டைப் புறக்கணிப்பது நீங்கள் செய்யும் ஒப்பற்ற ஈகமாக வரலாறு பதிவு செய்யும். உங்கள் ஆய்வுத்திறனைக் காட்டும் பெரியதொரு வாய்ப்புத்தான் இது. எனினும் இதில் நீங்கள் பங்கேற்பது அறம் சார்ந்ததாய் இருக்காது. இளமையில் நிற்கும் உங்கள் முன் விரிந்து கிடக்கிறது காலம். இதனினும் மதிப்புமிக்க வாய்ப்புக்கள் காத்துக் கிடக்கின்றன. ஆம், தமிழினத்தை ஒளிபெறச் செய்பவர்கள் நீங்களன்றோ!

தோழமையுடன்

ஒருங்கிணைப்புக் குழு :

பேராசிரியர் சரசுவதி

கவிஞர் இன்குலாப்

இராசேந்திர சோமன்

சூரியதீபன்

பொன். ஏழுமலை

கவிஞர் ஜெயபாஸ்கரன்

கவிபாஸ்கரன்

செ. சுகுமார்

(Visited 35 times, 35 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக