சனி, 9 ஜனவரி, 2010

மாவட்டம் தோறும் சிற்றரங்கங்கள் வேண்டும்: தினமணி ஆசிரியர்



சென்னை, ஜன. 8: சென்னையில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம் இருப்பது போல மாவட்டம் தோறும் தமிழக அரசு அரங்கங்களை அமைக்க வேண்டும் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை 33-வது புத்தகக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஸ்ரீசெண்பகா பதிப்பகம்- விழிகள் பதிப்பகம் இணைந்து 4 நூல்களை வெளியிட்டன.
இதில் பேராசிரியர் தமிழண்ணலின் திருக்குறள் நுண்ணுரை மற்றும் ராம.குருநாதன் தமிழில் மொழி பெயர்த்துள்ள தமிழ் யாப்பியல் உயராய்வு நூல்களின் முதல் படியை பெற்றுக்கொண்டு தினமணி ஆசிரியர் பேசியதாவது:
""இதுபோன்று காலத்தால் அழியாத கருவூலமாகப் புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும்.
ஏன் இந்தப் புத்தகங்களை வைத்திருக்கவில்லை என நூலகர்களையும், நூலக ஆணைத் துறையையும் வாசகர்கள் கேட்கும் வகையில் நூல்கள் வெளிவர வேண்டும்.
இதுபோன்று புத்தகங்களை வெளியிடும் விழாக்கள் நடக்கும்போதுதான் என்ன புத்தகம் வருகிறது என்கிற ஆர்வத்தை வாசகர்களிடையே உருவாக்க முடியும். புதிய பல வாசகர்களைக் கவர முடியும். நல்ல பல நூல்களால் தமிழ் மொழி வளமாக்கப்பட முடியும்.
எனவே, நமது இலக்கிய அமைப்புகள் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு முன்வைக்க வேண்டும்.
சென்னையில் தேவநேயப்பாவாணர் அரங்கம் இருப்பது போல இலக்கிய விவாதம், நூல்கள் வெளியீடு, கவிதை வாசிப்பு என இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறிய இலக்கிய அரங்கம் அமைக்கப்படவேண்டும்.
அரசு சார்பில் இலக்கியவாதிகளுக்கு குறைந்த வாடகையில் இலக்கிய அரங்கங்கள் அமைத்து அதை ஒதுக்கித்தரவேண்டும்.
இது புதிய கோரிக்கை அல்ல. ஏற்கெனவே நெடு நாள்களாகப் பல இலக்கியவாதிகள் வைத்த கோரிக்கைதான். இவ்வாறு அமையும் அரங்குகளில் இலக்கிய விவாதங்களை நடத்தலாம்.
மக்கள் ஆட்சித் தத்துவத்தின் அடிப்படையே விவாதம்தான். தயிரைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோல விவாதம் மூலம் தெளிவு ஏற்படும். எனவே வட்ட அளவில் இல்லாவிட்டாலும், மாவட்ட அளவிலாவது விவாதங்கள் நடத்தப்படவேண்டும்.
அரசியல், சமூகம், இலக்கியம் என்று எல்லா களங்களிலும் விவாதம் நடைபெறுவதுதான் ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு வழிகோலும்.
தமிழகம் முழுதும் உள்ள இலக்கிய அமைப்புகளை ஒன்றுபடுத்த ஏதாவது ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஆண்டுக்கு ஒரு முறை எல்லா இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இத்தகைய முயற்சியை மேற்கொள்ள யாராவது முன்வந்தால், அவர்களது அறைகூவலைத் தமிழகம் முழுதும் எதிரொலிக்க தினமணி தயாராக உள்ளது. அதுபோன்ற முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன், ஆண்டு தோறும் ஒரு இலக்கிய சங்கமத்தை இந்த அமைப்புகள் நடத்திக்காட்ட ஒத்துழைப்பு நல்க "தினமணி' காத்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமை வகித்து நூல்களை வெளியிட்டார். அவரது என்னருமை ஈழமே என்ற நூலும் ஆ.சந்திரபோஸின் நெஞ்சிலாடும் மலர்கள் எனும் நாவலும் வெளியிடப்பட்டன.
பபாசி துணைத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் என்னருமை ஈழமே மற்றும் நெஞ்சிலாடும் மலர்கள் நூல்களின் முதல்படிகளைப் பெற்றுக்கொண்டார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் ச.செந்தில்நாதன், அ.அருள்மொழி ஆகியோர் ஆய்வுரையாற்றினர்.
பேராசிரியர்கள் தமிழண்ணல், ரா.குருநாதன் மற்றும் ஆ.சந்திரபோஸ் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
தி.நடராஜன் வரவேற்றார். விழிகள் பதிப்பக உரிமையாளர் நடராஜன், அன்னை முத்தமிழ் பதிப்பக உரிமையாளர் தி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள்

வரவேற்க வேண்டிய நல்ல கருத்து. மற்றொரு கருத்தைத் தினமணி வலியுறுத்தி வெற்றி காண வேண்டும். இதழ் அஞ்சல் (book-post)கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து இலக்கிய அமைப்புகளின் அழைப்பிதழ்களை அனுப்புவதில் செலவுகூடி மிகத் தொல்லையாக இருக்கிறது. எனவே, கலைஇலக்கிய அழைப்பிதழ்களுக்கான இதழ் அஞ்சல் கட்டணம் அச்சிட்ட செய்திகளுக்கு (printed matter)இருப்பது போல் 10 காசு என்ற அளவில் இருக்க வேண்டும். தினமணி உரியவாறு வலியுறுதத வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/9/2010 6:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக