ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது: மலேசிய துணை முதல்வர்
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.
“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.
“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.
இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.
செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப் போவதில்லை
தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.
கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இன்று இது போன்ற மாநாடு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?” என்று அவர் வினவினார்.
“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்” என்றாரவர்.
உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்
செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.
மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.
(Visited 79 times, 79 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக