சனி, 4 பிப்ரவரி, 2017

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா


அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா

  அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை துய்த்தவர்கள்(அனுபவப்பட்டுவிட்டவர்கள்), வெகு  எளிதில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் (சிரஞ்சீவியாக) நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கூட்டுத் தோழர்கள் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிரள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு-தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்-போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும் வேண்டுகோள் எதுவும், தனது கையிலுள்ள அதிகாரத்தைப் பறித்துக்(அபகரித்துக்) கொள்ளும் நோக்கத்தோடு எழுந்தவை என்றே நம்பிக்கொள்வர். எனவே முன்கூட்டியே இத்தகைய நிலமை ஏற்படாமல் இருக்கத் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள முனைவர். இந்தப் போக்கு கோட்பாடு அரசியலில் பெரியதோர் நோயின் அறிகுறியாகும். மக்கள் ஆட்சி முறைக்கு இது முற்றும் புறம்பானது. இதனை முளையிலே நசுக்கி ஒழிக்கவேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்டவர்களின் நீங்காக் கடமையாகும்.
பேரறிஞர் அண்ணா,
கட்டுரை – இரட்டை நாவினர் – 28.12.1947
அண்ணா களஞ்சியம்