செவ்வாய், 24 ஏப்ரல், 2012

"வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக்கட்டைக்கு வேணும். "

பொய் அறிக்கை வெளியிட்டு சிறிலங்கா பிரதமர் ஆடிய நாடகம் அம்பலம் – முஸ்லிம் தலைமைகள் போர்க்கொடி

thampulla
தம்புள்ள மஸ்ஜித்துல் ஹாய்ரா பள்ளிவாசலை அகற்றிவிட்டு வேறு இடத்தில் அதை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ண, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்ததாக பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் செயலக ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்ட சிறிலங்கா அரச முத்திரையுடன் கூடிய அறிக்கை ஒன்றில், தம்புள்ள பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைமைகள் இணங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
கம்பளையில் நேற்றுக்காலை நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் சிறிலங்கா பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போன்று எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும், தாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் சிறிலங்கா அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.
நேற்று முழுநாளும் தான் மட்டக்களப்பில் இருந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்து கொள்ளவில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.
பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் வழிபட்டு வரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே 65 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிவாசலை அகற்ற பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் இந்த முயற்சி சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா பிரதமரும், அரசும், பௌத்த பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்ற முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் இந்த விவகாரம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளின் தயவில் தான் தமக்குச் சார்பாக 15 வாக்குகளைப் பெறமுடிந்தது.
இதற்கு சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடுமையாக உழைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக