தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

Comment (3)   ·   print   ·   T+  
சேட்டை சேது
சேட்டை சேது
சேட்டை சேது - பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெஸ்ட் என்டர்டெய்னர், தன்னம்பிக்கைச் சுடர் போன்ற விருதுகளை பெற்ற  வானொலி தொகுப்பாளர். ஐ.ஆர்.எஸ். நிறுவனம் நடத்திய சர்வேயில் மதுரையின் நம்பர் ஒன் ரேடியோ ஜாக்கியாக இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர், இப்போது இருப்பது சூரியன் எஃப்.எம்-மில்.
விரைவில் சினிமாவில் அரிதாரம் பூசவிருக்கும் சேது, மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியான அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பிறக்கும்போதே போலியோ பாதிப்பால், தொடைவரை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு கையால் தவழ்ந்து செல்லும் நிலை. அப்படிப்பட்டவர் இன்றைய நிலையை எப்படி எட்டினார் என்பதில் ஒரு தன்னம்பிக்கை கதை அடங்கியிருக்கிறது.
“இருக்குறதுலயே கொடுமையான சித்ரவதை நம்மை மற்றவர்கள் பரிதாபமாகப் பார்ப்பதுதான். அதனால், எனக்கு என் மீது பரிதாபப்படுபவர்களைப் பார்க்கவே பிடிக்காது. 16 வயசு வரைக்கும் பள்ளிக்கு தவழ்ந்தேதான் போனேன். கொளுத்தும் வெய்யில்ல தார் ரோட்டைத் தாண்டிப் போகணும். அப்பவும் நான் யார்கிட்டையும் ஹெல்ப் கேட்டதே இல்லை. மத்தவங்க என்னைய தூக்கிச் சுமக்கணுமேனு, ஸ்கூல் டூர்க்கு கூப்பிட்டாக்கூட நான் போக மாட்டேன்.
எப்பப் பாத்தாலும் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பேன். நம்மளும் சிரிக்கணும் நம்மள சுத்தி இருக்கவங்களையும் சிரிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசைகள் எல்லாமே ரொம்ப பெருசு. தவழ்ந்துபோகும் காலத்திலேயே பைக் ஓட்ட ஆசைப்பட்டேன். அதுக்கு முந்தியே கார் வாங்கணும்னு நினைச்சேன். சுயமா நடக்கணும்கிற ஆசை வெவரம் தெரியுறதுக்கு முந்தியே வந்திருச்சு. 17 வயசுல நானே தட்டுத் தடுமாறி கம்பை ஊன்றி நடக்கப் பழகிட்டேன். இப்ப என்னோட பைக், கார் ஆசையும் நிறைவேறிடுச்சி - என்னோட சுய சம்பாத்தியத்துல. நான் ஓட்டுற பைக், கார் எல்லாத்தையும் எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன். அதுதான் வாழ்க்கை. இருக்கிற இடத்திற்கும், சவாலுக்கும் தகுந்த மாதிரி நம்மை நாமே மாத்திக்கிடணும்" தனது அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கிய சேது, தொடர்ந்தும் பேசினார்.
"சென்னையில் கிடைச்ச சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டுட்டு திண்டுக்கல்லுக்கு ஓடியாந்துட்டேன். அங்க ஒரு லோக்கல் சேனல்ல வாய்கிழியப் பேசுற வேலை, தாவித்தாவி பல வேலைகள்ல இருந்தேன். எதுவுமே செட் ஆகலை. 2007 செப்டம்பரில் மதுரையில் முதன் முதலாக தனியார் எஃப்.எம். ஆர்.ஜே.வுக்காக நடத்திய இன்டர்வியூல செலக்ட் ஆன ஏழு பேருல நானும் ஒருத்தன்.
இப்பத்தான் உங்கக்கிட்டத்தான் முதன்முதலா நான் மாற்றுத் திறனாளிங்கிறதை ஒத்துக்கிட்டிருக்கேன். மற்றபடி அரசல் புரசலாக கேள்விப்பட்டு, போன் போட்டு துக்கம் விசாரிப்பாங்க. ஆர்வம் மிகுதியால என்னைய ஆபீஸுக்கு வந்து பார்க்கிறவங்க, கண்கலங்குவாங்க. அடுத்து ஷோ கேட்கும்போது, 'சேது நீங்க ஜோக் அடிச்சாக்கூட எனக்கு அழுகை அழுகையாக வருது'ன்னு அன்பே சிவம் மாதவன் மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்ல வர்றது ஒண்ணு தான். சாதாரணமானவங்களை விட நமக்கு ஏதோ ஒரு திறமை கொஞ்சம் கூடுதலா இருக்கும். அதைக் கண்டுபிடிங்க. யாரையும் பரிதாபமாகப் பார்க்கவிடாதீங்க. சாதிக்கலாம். நீங்க எதுவாக மாறணும்னு நினைக்கிறீங்களோ, அதுவாக மாறுவது நிச்சயம்” நெத்தியடியாய் சொன்னார் சேட்டை சேது.

திங்கள், 30 செப்டம்பர், 2013

முடங்கவில்லை; முயல்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் மாற்றுத்திறனாளி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81566920130930005635.jpg

முடங்கவில்லை; முயற்சி செய்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் சேலம் மாற்றுத்திறனாளி
 
 
சேலம்:விபத்தில் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் செயல் இழந்ததாலும், தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தானே தயாரித்த, "தொட்டி ஆட்டோ'வில் வலம் வருகிறார், சேலம் மாற்றுத்திறனாளி இன்ஜினியர்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியாளர் சிவானந்தம். இடைப்பாடி, ஆரியப்பாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவானந்தம், 49. டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தன்னுடைய, 25வது வயதில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்றினார். பின், சவுதி அரேபியாவில், ராணுவ விமான நிலையத்தில் பணியாற்றினார்.கடந்த, 1994ம் ஆண்டு, கார் விபத்தில் சிக்கியதில், அவருடைய முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஆறு மாதத்துக்கு பின், வீல் சேருடன் தாயகம் திரும்பினார். வயதான தாய், இரண்டு சகோதரன், இரண்டு சகோதரி, அனைவரும் தனியாக வசிக்கும் நிலையில், அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என, ஓமலூர் இந்திரா நகரில், கையில் இருந்த பணத்தை கொண்டு, சொந்தமாக வீடு கட்டினார்.

கால்கள் இயங்காதபோதும், தனக்கான வசதியை, வீட்டிலேயே ஏற்படுத்திக் கொண்டார். சைக்கிள் பழுது பார்க்கும் கடை, ஜெராக்ஸ் கடை நடத்தி, அதன் மூலம் வருவாயை ஈட்டினார். அவருடன் பணியாற்றிய, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப்டேனியல் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன், அவரை பார்க்க ஓமலூர் வந்தார்.அவரது யோசனைப்படி, கைனெட்டிக் ஹோண்டாவின் முன்பகுதியை மட்டும் வைத்து, மெக்கானிக்குகளை கொண்டு, கைகளால் இயக்கும் வசதியுடன் கூடிய தொட்டி ஆட்டோவை தயாரித்தார்.வீல் சேரில் இருந்தபடியே, தொட்டி ஆட்டோவில் ஏறுவதற்கும், கையால் இயக்கி, கதவை திறந்து வெளியே வருவதற்கும், பெட்ரோல் டேங்க், கிக் ஸ்டாட்டர் என அனைத்து வசதியையும் உருவாக்கினார். அதிலேயே, ஓமலூரில் இருந்து பெங்களூரு, மதுரை, தென்காசி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்.அதே ஆட்டோவில் சென்று, தண்டுவட பாதிப்பால் முடங்கி கிடப்போருக்கு ஊக்கம் அளிக்கும் சேவையை செய்கிறார். தன்னார்வ தொண்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.சிவானந்தம் கூறியதாவது:கார் விபத்து, என் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. கால்கள் செயலழிந்த நிலையில், தவித்த எனக்கு ஆதரவாக இருப்பது இந்த ஆட்டோ மட்டுமே. ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, வீல்சேரில் இருந்தபடியே பல்டி அடித்த சம்பவங்களும் உண்டு. என்னை போல் உள்ளோரை இனம் கண்டு, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதே என்னுடைய பணியாக உள்ளது, என்றார்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்!

மனத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்!


காது கேளாத, வாய் பேச முடியாத, 3,500 மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச தொழில் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்த, முரளி: நான், செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த மாற்றுத் திறனாளி. திருநெல்வேலியில் உள்ள, சிறப்பு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே, "டேபிள் டென்னிஸ்' போட்டியில், தேசிய அளவில் விளையாடி, பல வெற்றிகளை பெற்றேன். "ஸ்போட்ஸ் கோட்டா' மூலம், ஊட்டியில், "இந்துஸ்தான் போட்டோ பிலிம்' தொழிற்சாலையில், வேலை கிடைத்தது.
மாற்றுத் திறனாளியான என் மனைவிக்கும், அத்தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. நாங்கள் இருவரும், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், செவி மற்றும் பேச்சு திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளிடம், சைகை மொழியில், எப்படி பழக வேண்டும் என, மற்ற தொழிலாளர்களுக்கு, சொல்லி கொடுத்தோம்.செவி மற்றும் பேச்சு திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக, முழுநேரமும் உழைக்க எண்ணி, 2002ல், நானும், என் மனைவியும், விருப்ப ஓய்வு பெற்றோம். 2004ல், "டெப் லீடர்ஸ்' எனும் அமைப்பை, கோவை, சாய்பாபா காலனியில் ஆரம்பித்து, நடத்தி வருகிறேன். செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான, கல்லூரி பாடங்கள், ஆங்கிலத்தில் இருப்பதால், அவர்கள், பள்ளி படிப்போடு, வீடுகளில் முடங்கி விடுவர். அவர்களுக்கு, எளிய முறையில், ஆங்கிலம் கற்று தந்து, மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறோம். செவி மற்றும் பேச்சு திறன் இல்லாததால், தாங்கள் எங்கே இருக்கிறோம் என, மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க, மொபைலில், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கற்றுத் தருகிறோம். மேலும், தொழில் ரீதியாக, டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர், சமையல் போன்ற பயிற்சி
களையும், இலவசமாக வழங்குகிறோம். கடந்த, 10 ஆண்டுகளில், 3,500 பேருக்கு தொழிற் பயிற்சியளித்ததுடன், கோவையை சுற்றியுள்ள பல்வேறு நிறுவனங்களில், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளேன். செவிதிறன் குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவர்களுக்கும், சிறப்பு தொழிற் பயிற்சி வழங்குகிறோம்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!

 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79113120130829013015.jpg


தன்தொழிலால் தன்னம்பிக்கை கிடைக்கும்!
 

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச த்தொழிற் பயிற்சி வழங்குவதுடன், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி த் தரும், பி.கே.செரியன்: நான், சென்னை, கிண்டி மத்திய தொழில்நுட்ப பயிற்றுனர் மைய வளாகத்தில் உள்ள, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின், துணை இயக்குனராக பணியாற்றுகிறேன்.
இங்கு, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ், 1976ம் ஆண்டு முதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் தந்து, வேலைவாய்ப்பை ஏற் படுத்தி தருவதுடன், ஊக்க தொகையையும் பெற்று தருகிறோம். 40 சதவீத உடல் ஊனத்தை தாண்டியவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, 51 முதல் 70ஐ.கியூ., உள்ள, 15 முதல் 50 வயதுள்ளவர்கள் மட்டுமே, பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்யலாம். இதற்கு, மாவட்ட மண்டல மறுவாழ்வு அதிகாரியின் சான்றிதழ் தேவை. ஆண், பெண், கல்வியறிவு என, எந்த தடையுமின்றி, தங்களின் திறமையின் அடிப்படையில் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இம்மையத்தில் பதிவு செய்த மாற்றுத் திறனாளிக்கு, இலவச கணினி பயிற்சி, தட்டச்சு, "ரேடியோ, டிவி' மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்குதல், டெய்லரிங், போட்டோகிராபி, ஸ்கிரீன் பிரின்டிங், தங்க அளவு நிர்ணயித்தல் போன்ற பயிற்சிகளை, இலவசமாகவே வழங்குகிறோம். சுய வேலைவாய்ப் பை பெற விரும்பி னால், எம்.எஸ்.எம்.ஈ., (மைக்ரோ, ஸ்மால், மீடியம் என்டர்பிரைசஸ்) மூலம் உதவுகிறோம். மாற்றுத் திறனாளிக்கு தேவைப்படும், செயற்கை கை, கால்கள், மூன்று சக்கர சைக்கிள் வண்டி, காது கேட்கும் இயந்திரம், பார்வை குறைபாட்டிற்கு தொடு உணர்வு கருவி, டேப்ரெக்கார்டர் போன்ற கருவிகளையும், இலவசமாக வழங்குகிறோம்.
எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல பெரிய நிறுவனங்களில், பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். தொடர்புக்கு: 044- 2250 1534.

புதன், 19 ஜூன், 2013

பெண்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்!


பெண்களுக்கு த் தன்னம்பிக்கை வேண்டும்!

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், உயர் பொறுப்புகளை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறும், ஏ.கே. சுகுமாரன்: நான், காம்பை சொல்யூஷன் நிறுவனத்தில், எச்.ஆர்., கன்சல்டன்டாக பணியாற்றுகிறேன். பெண்களும், ஆண்களும், ஒரே மாதிரி கல்வி கற்கின்றனர்; ஒரே மாதிரி வேலை தேடுகின்றனர். ஆனால், வேலை கிடைத்த பின், அந்த வேலையை தக்க வைப்பதிலோ அல்லது அந்நிறுவனத்தின் உயர் பொறுப்புகளை அடைவதிலோ, பெண்கள் குறைவாகவே உள்ளனர். சாப்ட்வேர், தகவல் தொழில்நுட்பம், மருத் துவ துறை, வங்கி மற்றும் நிதி துறை, ரீடெயில் என, பெண்கள் இன்று அனைத்து துறைகளில் சாதித்தாலும், ஏன் உயர் பதவியை எட்ட முடிய வில்லை? சமீபத்திய சர்வேயில், இந்தியாவில் உயர் அதிகாரிகளாக நிலைத்து நிற்க கூடிய பெண்கள் வெறும், 19 சதவீதம் மட்டுமே என, தெரிய வந்துள்ளது. 
படித்த துறையில் வேலை கிடைக்காத பட்சத்தில், மற்ற துறையிலும் பிரகாசிக்கும் வாய்ப்பு, இப்புதிய தலைமுறை பெண்களுக்கு, "பிளஸ்' என்றாலும், பணி செய்யும் துறை பற்றி, மேலும் அறிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதிலோ, அது பற்றிய கல்விக்கோ, பயிற்சிக்கோ, அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள், பல பெண்களிடம் இருப்பதில்லை. அத னால், பெண்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, தாங்கள் விரும்பும் வேலை சார்ந்த துறை மற்றும் அதன் வளர்ச்சி குறித்த தகவல்களை, "அப்டேட்' செய்வது நல்லது. இதனால், செய்யும் பணிக்கு இன்னும் தகுதியுள்ளவர்களாக, உயர்த்திக் கொள்ள முடியும். எனக்கு தன்னம்பிக்கை இல்லை என, தன்னைத் தான் சுயபரிசோதனை செய்து, தன்னம்பிக்கையை திடீரென பெற முடி யாது. ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இருந்தால், "பாசிடிவான' விஷயங்கள் அதிகரித்து, "நெகடிவான' விஷயங்கள் குறையும். பெண்களிடம் தன்னம்பிக்கை இருந்தால், இன்னும் அதிகப்படியான உயர் பதவிகளை அடைய முடியும்

ஞாயிறு, 16 ஜூன், 2013

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்டு.



Bookmark and Share
  • தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்டு.
     
    உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.
    அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்
    கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
    கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.
    பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.
    பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.
    பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.
    பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.
    அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.
    கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.
    இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.
    ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.
    அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.
    விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.
    அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.
    இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.
    கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.
    சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
    இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.
    எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் "என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.
    சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.
    .சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.
    - எல்.முருகராசு,






செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தன்னம்பிக்கை எரியவில்லை!




தன்னம்பிக்கை எரியவில்லை!


சென்னை எழிலக த் தீ விபத்திலிருந்து தன்னம்பிக்கையோடு மீண்டு வந்த, தீயணைப்பு துறையின் முதல் பெண் அதிகாரி, பிரியா ரவிச்சந்திரன்: தமிழக தீயணைப்பு துறையின், முதல் பெண் அதிகாரி நான் தான். தமிழக அரசின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்படும் எழிலகத்தில், 2012ம் ஆண்டு, நள்ளிரவில் நடந்த தீ விபத்தை தடுத்து, தீயணைத்த போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கினேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, நான் பிழைப்பதே கடினம் என, என்னைப் பார்க்க வந்தவர்கள் கூறினர். ஏனெனில், என் உடலின், 45 சதவீத பகுதிகள், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. என் குழந்தைகளிடம், நான் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதாகச் சொல்லி குடும்பத்தினர் சமாளித்துள்ளனர்.தீ விபத்தில், என் முகம் மட்டுமல்ல; முதுகு, கை, கால்களிலும் காயம் ஏற்பட்டதால், திரும்பி படுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரே நிலையில் நீண்ட நேரம் படுத்திருப்பது, எளிதான காரியம் இல்லை. கொஞ்சம் நகர்ந்தாலே, தீயினால் பாதிக்கப்பட்ட தோல், உடனே உரிந்து, சிராய்ப்பு ஏற்பட்டு விடும்.தீ கொழுந்து விட்டு எரிந்த போது, சிதிலமடைந்த எழிலக கட்டடத்தினுள் நுழைந்ததை நான் தவிர்த்திருக்கலாமே என, இப்போது சொல்கின்றனர்.

ஒருவேளை நான் உள்ளே செல்ல தயங்கி இருந்தால், என் சக தீயணைப்பு வீரர்களும், தயக்கம் காட்டியிருப்பர். தீயை அணைப்பதே, ஒரு அதிகாரியின் கடமை; அதைத் தான் நான் செய்தேன்.இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் ஆறு மாதங்கள், நரக வேதனையாக இருந்தது. நெருப்பாற்றில் நீந்திய உணர்வுடன் இருந்தேன். முதல்வர் ஜெயலலிதாவும், என் குடும்ப உறுப்பினர்களும் கொடுத்த தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளே, நான் மீண்டு வர உதவியது.தீக்காயத்திலிருந்து சிறிதளவு மீண்டு, தமிழக தீயணைப்புத் துறையின் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, பணிக்கு திரும்பிய என் தன்னம்பிக்கையை, முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். மீண்டும் இது போன்ற தீயணைக்கும் பணி வந்தால், கட்டாயம் செய்வேன்.






ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தன்னம்பிக்கையின் அடையாளம்!


சொல்கிறார்கள்

விசைப்படகில்  கதிரொளி  மின்னாற்றல்!


தூத்தூர், ஆழ்கடல் மீன்பிடிப்பாளர் சங்க நிர்வாகி வின்சன்ட் ஜெயின்: என் ஊர், கன்னியாகுமரி மாவட்டத்தின், தூத்தூர் மீனவ பகுதி. தினமும், 580 விசைப் படகுகளில், மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்குச் செல்வர். விசைப்படகுகளுக்கு டீசல் தான் முக்கிய எரிபொருள்.விசைப்படகில், 16 மின் விளக்குகள் இருக்கும். இரவு நேரங்களில், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது, மின் விளக்குகள் இருந்தால் மட்டுமே, எளிதாக இருக்கும். இரவில் மின் விளக்குகளின் தேவை அதிகரிப்பதால், விளக்குகள் எரிவதற்கான பேட்டரியை, சார்ஜ் செய்ய, எப்போதும், இன்ஜினை இயக்கியபடி இருக்க வேண்டும்.படகு ஓடாத நிலையில், டீசல் அதிகமாக செலவானது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, நாள் ஒன்றுக்கு, 100 லிட்டர் டீசல் செலவானது. தினமும் டீசல் விலை உயர்வதாலும், நஷ்டம் ஏற்பட்டது. இதற்கான மாற்று சிந்தனையில் ஏற்பட்டதே, "சோலார்' மின் சக்தி.சோலார் பேனல்களை, சோதனை முறையில் பொருத்திப் பார்க்க, முடிவு செய்தோம். ஒரு மீனவரின் விசைப்படகில், 1000 வாட் மின் திறன் கொண்ட, சோலார் தகட்டைப் பொருத்த, சோலார் எனர்ஜி கம்பெனியும், தொண்டு நிறுவனமும் உதவின.கடந்த நவம்பரில், சோதனை முறையில் முதன் முறையாக, மீன் பிடிக்க சென்றனர். இரவு நேரங்களில் இன்ஜினை இயக்காமல், சோலார் மூலம், பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை, விளக்குகள், ஜி.பி.எஸ்., கருவி, ஒயர்லஸ் என, மின் சாதனங்களை இயக்க பயன்படுத்தினர். இந்த விசைப்படகிற்கு, நாள் ஒன்றுக்கு, 70 லிட்டர் டீசல் மட்டுமே செலவானது. டீசல் பயன்படுத்துவதால் வெளியாகும், கார்பன் -டை- ஆக்சைடு நச்சு வாயு, படகில், "சோலார் பேனல்' பயன்படுத்தியதால் வெளியாகவில்லை.அனைத்து படகிலும் சோலார் தகட்டை பயன்படுத்தி, டீசலை செலவைக் குறைப்பதன் மூலம், தினமும் பல லட்சம் கிலோ கார்பன் -டை- ஆக்சைடு நச்சு வாயு வெளியேறுவதை தடுத்து, புவி வெப்பமடையும் ஆபத்தை குறைக்கும். விசைப்படகின் அனைத்துச் செயல்பாடுகளையும், சோலார் மின் சக்தி மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தினால், டீசலை முற்றிலும் ஒழித்து, அதிக லாபம் ஈட்டலாம்.

தன்னம்பிக்கையின் அடையாளம்!

உணவிற்காக சதுரங்க விளையாட்டை கற்று, சர்வதேச சாம்பியனான, ஆப்ரிக்க கண்டத்தின், உகாண்டா நாட்டைச் சேர்ந்த சிறுமி பியோனா முட்டேசி: எல்லா வளங்கள் இருந்தும் நோய், வறுமை, அறியாமை நீங்காத ஆப்ரிக்காவிலேயே, மிகவும் பின்தங்கியது, என் தாய் நாடான உகாண்டா. தெருக்களில் சாக்கடை ஓடும், காத்வே என்ற ஊரில் வளர்ந்தேன்.தந்தை, எய்ட்ஸ் நோயில் இறந்த போது, எனக்கு, 3 வயது. சிறு குடிசை வீட்டில், அம்மா, தங்கையோடு பல நாட்கள், பட்டினியோடு வாழ்ந்தேன். 2005ம் ஆண்டு, உணவிற்காக தெருவோரம் சுற்றியதில், சில குழந்தைகள், கறுப்பு வெள்ளை கட்டங்களில், ஏதோ விளையாடுவதை பார்த்தேன்.அங்கு, ராபர்ட் கடேன்டா என்பவர், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உணவளித்து, செஸ் மூலம் கல்வி கற்று தரும், தொண்டு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு வேளை உணவுக்காக அங்கு சேர்ந்து, ஆர்வமுடன் செஸ் கற்றேன். ஒரே ஆண்டில், செக்மேட் வைத்து, பயிற்சியாளரை வென்றேன்.திறமையை அறிந்து, போட்டிகளில் விளையாட உதவினார். அழுக்கு உடையும், பரட்டை தலையுமாக இருந்ததால், என்னுடன் விளையாட அனைவரும் மறுத்தனர். எப்படியோ, ராபர்ட் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். அதிரடியான காய் நகர்த்தலின் மூலம், அனைவரின் கவனத்தை ஈர்த்து, இரண்டே ஆண்டுகளில், உகாண்டாவின் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றேன்.கல்வி அறிவு இல்லாதலால், லீக் சுற்று, இறுதிப் போட்டி, ரஷ்யாவில் நடைபெற்ற, சர்வதேச ஒலிம்பியாட் போட்டி என, பயிற்சியாளர் சொல்லும் போது மட்டும் விளையாடுவேன். பிரபல டிஸ்னி நிறுவனம், என் வாழ்க்கையை திரைப்படமாக்க, ஒப்பந்தம் செய்து ள்ளது. என்னைப் பற்றிய, "குயின் ஆப் காத்வே' புத்தகம், உகாண்டாவின் ஒடுக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கு, தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.தற்போது, பல நாட்டு தொண்டு நிறுவனங்கள், என் செஸ் திறமையை கண்டு, கல்வி கற்றுதர முன் வந்துள்ளனர். நன்கு படித்து மருத்துவராவதே என் லட்சியம்.

வியாழன், 27 டிசம்பர், 2012

தன்னம்பிக்கைப் பெண்கள்

சொல்கிறார்கள்

"தன்னம்பிக்கை ப் பெண்கள்!'உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, புதுவலவு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகிலுள்ள புதுவலவு தான், எங்கள் கிராமம். விவசாய கூலி போதவில்லை. எனவே, ஏதாவது தொழில் பண்ண நினைத்தோம்.தோட்ட வேலைக்கு போன, 14 பேரும் சேர்ந்து, ஒரு குழு ஆரம்பித்தோம். சில நாட்களில், திருப்பூரிலிருந்து, பனியன் கட்டிங் வேஸ்டேஜை வாங்கி, அதை வைத்து, ஜட்டி தயாரிக்கலாம் என கூறினர். எங்களில், சிலருக்கு மட்டும் தான், டெய்லரிங் தெரியும். அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து, தைரியமாக இறங்கினோம். முதலில், மூன்று மெஷின் போட்டு துவங்கினோம். இப்போது, 10 மெஷின்கள் உள்ளன. 10 - 20 ரூபாய்க்கு திண்டாடினோம். இப்போது, ஒரு ஆளுக்கு, 160 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது.குழு துவங்கிய போது, ஐந்து பேருக்கு மட்டும் தான் தொழில் தெரியும். ஓர் ஆண்டிலேயே, எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, 2.5 லட்சம் ரூபாய் மானியம் கடன் கொடுத்தனர். அடுத்தடுத்து, "ஆர்டர்ஸ்' வர, வெளி ஆட்களை வைத்து, வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.எல்லாரும் முல்லை, தென்றல் என்று தான், மகளிர் குழுக்களுக்கு பெயர் வைப்பர். ஆனால், ஊர் பாசத்தில், நாங்கள், ஊரின் பெயரிலேயே குழுவை துவங்கினோம்.நாங்க தயாரிக்கும் உள்ளாடைகளை, ஆட்களை வைத்து, ஈரோடு துணிச் சந்தையில் இறக்குவோம். ஆந்திரா, கர்நாடகா, கேரள வியாபாரிகள் போட்டி போட்டு, மொத்தமாக வாங்கிப் போய் விடுவர்.ஒரு கட்டத்தில், அதிகமான டிமாண்ட் வந்த போது, எங்களால், அந்த அளவுக்கு பண்ண முடியவில்லை.எந்த அளவுக்கு, "ஹை குவாலிட்டி' உள்ளாடைகளின் தேவை கூடிக் கொண்டே போகிறதோ, அதே அளவு, "சீப்' ரேட்டில் கிடைக்கிற உள்ளாடைகளுக்கும், நல்ல டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால், இதற்கு, எப்பவும் மவுசு குறையாது.

வியாழன், 13 டிசம்பர், 2012

தன்னம்பிக்கையே முதன்மை : முதல்வர் சொன்ன குட்டிக்கதை

தன்னம்பிக்கையே முதன்மை : முதல்வர் சொன்ன குட்டிக்கதை









சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வாழ்கையில் முன்னேற தன்னம்பிக்கையே முக்கியம் என்பதை உணர்த்த குட்டிக் கதை ஒன்றை கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரித் திடலில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவியர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஒன்றரை ஆண்டுகளில் 26,220 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நியமன ஆணைகளை பெற உள்ள  உங்கள் எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணி என்பது அறப் பணி. ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற சேவைப் பணி. ஆசிரியர் பணியை விடச் சீரிய பணி ஏதுமில்லை.
ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.  தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது.  அதை எடுத்துப் பார்த்தார்.  அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார்.  வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார்.  ஆனால் அதனை வெளியில் எடுக்க மாட்டார்.
அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார்.  அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள்.  அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர்.
இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது.  அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, “ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறினார் அந்த மனிதர்.
உடனே மனைவி, “இப்ப அதைப் பார்க்க வேண்டாமே” என்று மெதுவாக கூறினார்.
“இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்!” என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை.  அப்படியே குழம்பிப் போய் நின்றார்.
அப்பொழுது அவரது மனைவி, “உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன்.  அது தெருவில் விழுந்துவிட்டது.  எவ்வளவோ தேடிப் பார்த்தேன்.  கிடைக்கவில்லை.  அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன்” என்று கூறினாள்.
“இது எப்ப நடந்தது?” என்று கேட்டார் அந்த மனிதர்.
“உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது” என்றாள் மனைவி.
இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை.  அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.
ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு,  மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும். ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.
ஓர் ஆசிரியர் பாடத்தை கற்பிக்கும் விதம் மாணவ-மாணவியரை ஈர்க்கும் வகையில், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை விளக்கத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.
“ஒரு பொருளின் வெப்பம் இழக்கும் வீதமானது, அப்பொருளின் வெப்ப நிலைக்கும், சுற்றுப்புறத்தின் வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் நேர்விகிதத்தில் இருக்கும்” என்பது நியூட்டனின் வெப்ப விதி.  இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நடைமுறை உதாரணத்துடன் ஓர் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இரு நண்பர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பால், காபி டிக்காஷன், சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக கொண்டு வந்து வைத்தார் பணியாளர்.  பால் கொதிநிலை சூட்டிலும், டிக்காஷன் அந்த அறையின் வெப்ப நிலையிலும் இருந்தது. அந்த சமயத்தில், அந்த நண்பர்களில் ஒருவருக்கு அவரது அலுவலக உயரதிகாரி கைபேசியில் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். அந்த விவரங்களை தன்னிடம் உள்ள மடிக்கணினி மூலம் தேடி அந்த உயர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காபியை அருந்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.  இந்தச் சூழ்நிலையில், பாலுடன் டிகாஷனை கலந்து வைத்தால் காபி சூடாக இருக்குமா? அல்லது காபியையும், டிகாஷனையும் தனித்தனியே குடுவையில் வைத்திருந்தால் சூடாக இருக்குமா? என்ற கேள்வியை மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.  இதற்கு இரண்டு விதமான பதில்களும் மாணவர்களிடம் இருந்து வந்தன. ஆனால், காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை.
இதன் பின்னர், பால் அறையின் வெப்பநிலையை விட அதிக சூடாகவும், டிக்காஷன் அறையின் வெப்ப நிலையிலும் இருப்பதால், காபி சூடாக இருக்க வேண்டுமென்றால் பாலையும் டிக்காஷனையும் கலந்து காபியாக வைப்பது தான் சிறந்தது என்று ஆசிரியர் எடுத்துக் கூறி, நியூட்டனின் வெப்ப விதியை விளக்கினார். இவ்வாறு அன்றாட நிகழ்வுகளின் படி பாடத்தை விளக்கும் போது அது மாணாக்கரின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்பதோடு, வாழ்நாள் முழுமைக்கும் பயன் உள்ளதாகவும் அமைந்து விடும்.
ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது.
பல்லாண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் என்கிற சிறுவன் மேல்படிப்பு படிப்பது  குறித்து அவன் வீட்டில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்தக் குடும்பத்து பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ஒன்று சமஸ்கிருதம் படி அல்லது ஆங்கிலம் படி. ஆங்கிலம் படித்தால் இந்த உலகத்தில் ஆனந்தமாக வாழலாம்.  சமஸ்கிருதம் படித்தால் மேல் லோகத்திலே ஆனந்தமாக இருக்கலாம். நீ என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், “நான் தமிழ் படிக்கப் போகிறேன்” என்று கூறினான்.
சிறுவனின் பதிலைக் கேட்டதும் கோபப்பட்டார் அந்தப் பெரியவர்.
“ஆங்கிலம் படித்தால் இங்கு நன்றாக இருக்கலாம்.  சமஸ்கிருதம் படித்தால் அங்கு நன்றாக இருக்கலாம்.  தமிழ் படித்தால் இரண்டு இடத்திலும் நன்றாக இருக்கலாம்” என்று தெளிவாக மீண்டும் எடுத்துரைத்தான் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை.  அவர் தான் தமிழ்த் தாத்தா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர். பழந்தமிழ் இலக்கியங்களை நமக்கு அளித்தவர்.  அவர் தமிழ் படித்ததால் தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.
படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவ – மாணவியருக்கும் வெற்றி உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் நலத் திட்ட உதவிகளை பெறும் மாணவ-மாணவியர், மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி, ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழ்நாட்டை விட்டு முற்றிலும் அகலும் வகையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

''தமிழின் பெருமைகளை அறிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்''

''தமிழின் பெருமைகளை அறிந்தால்
 தன்னம்பிக்கை அதிகரிக்கும்''
 
  தினமணி
First Published : 30 Sep 2012 02:13:58 AM IST

Last Updated : 30 Sep 2012 02:36:58 AM IST

நிகழ்ச்சியில் பேசுகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். உடன், பத்மா சேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் டீன் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி.
சென்னை, செப். 29: தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியது: கல்வி ஒருவருடைய சுய மரியாதையை வளர்க்கிறது. வாழ்வில் முன்னேற்றத்தையும் ஒழுக்கத்தையும் வழங்குகிறது. கற்பித்தல் என்பது கடவுளை வழிபடுவது போன்றது. இதனை ஆசிரியர்கள் சேவையாக செய்ய வேண்டும்.ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் புனிதமான இடம் பள்ளியும் கல்லூரியும்தான். வெறும் தகவல்களை மட்டும் மாணவர்களுக்கு வழங்காமல், அவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை தவிர பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி: ஜப்பானிய மொழியில் தமிழ் சொற்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் சென்றுள்ளனர் என்பது போன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.இதனால் மாணவர்களுக்கு மொழியின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மொழியின் மீதான மதிப்பு அதிகரித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், அவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும் என்றார் அவர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. வன்முறை என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்றார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அமைதியான உறக்கமும் நிமிர வைத்த தன்னம்பிக்கையும்



நிம்மதியா தூங்கலாம்!


"நித்ரா' தூக்க அறிவியல் மையத்தின் இயக்குனர் ராமகிருஷ்ணன்: தூக்க மருந்தியல் என்ற துறை, நம் நாட்டிற்கு புதிது. வெளிநாடுகள் சிலவற்றில், மருத்துவத்தில், இதுவும் ஒரு தனியான சிறப்புத் துறை. ஆரோக்கியமாக உள்ள ஒருவர், தினமும், ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்."எட்டு மணி நேரம் தூங்க முடியவில்லை' என, என்னிடம் வருபவர்கள் முதல் வகை. "நன்றாகத் தூங்குகிறோம்; ஆனால், காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கத் தோன்றுகிறது. தூங்கிய நிறைவே இல்லை' என்பவர்கள், இன்னொரு வகை. தூக்கத்தின் நடுவில், நிறைய முறை எழுந்து கொள்பவர்கள் மூன்றாவது வகை.இதற்கு அடுத்த வகையினர், அசாதாரணமானவர்கள்; தூக்கத்தில் நடப்பது, சாப்பிடுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள். "ஷிப்ட்' முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள், குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவர்.தூக்கமின்மைக்கு முக்கிய காரணம், "ஸ்லீப் ஆப்னியா' எனும் சுவாசப் பகுதியிலுள்ள தசைகள், கூடுதலாக விரிவதால், குறட்டை மட்டுமல்லாது, சீராக சுவாசிக்க முடியாமலும், சிலர் அவதிப்படுவர். தூங்கும் போது, குறட்டை விடுபவர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்குப் போகாது. இதனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு, பக்கவாதம் வரலாம்."ஒபிசிட்டி' எனும் அதிக உடல் எடை, வேலையில் ஏற்படும் மன அழுத்தம், வாழ்க் கை முறை மாற்றம் ஆகியவை, தூக்கமின்மைக்கு ஒரு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான், இந்தப் பிரச்னை ஆரம்பிக்கிறது.எல்லா வகையான தூக்கமின்மையையும், மருந்தால் சரி செய்ய இயலாது. பல ஆண்டுகள் பிரச்னைகளுடனே, இருந்து விட்டு, தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த, நீண்ட நாட்கள் ஆகலாம்.குறிப்பாக, "ஆப்னியா'வை மாத்திரைகளால், குணப்படுத்த இயலாது. சீராக சுவாசிப்பதற்கு வசதியாக, பிரத்தியேக கருவி உள்ளது. இரவில் இதைப் பயன்படுத்தும் போது, குறட்டையால் ஏற்படும் சுவாசப் பிரச்னை இருக்காது.

நிமிர வைத்த தன்னம்பிக்கை!


நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வள்ளி: பிறந்த வீட்டு ஏழ்மைச் சூழலால், இரண்டாம் தாரமாகத்தான் வாக்கப்பட்டேன். சம்பாதித்துப் போடாத கணவனால், பல கஷ்டங்களை அனுபவித்தேன். தற்கொலை முடிவெடுத்து, தப்பின நான் ஒரு கட்டத்தில் தெளிந்தாலும், விவசாயக் கூலி வேலை, வீட்டு வேலை என, யாரிடமும் அடிமையாக இருக்க விரும்பவில்லை; சுய தொழில் துவங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.அப்போது தான், திருச்சியைச் சேர்ந்த பேராசிரியை மணிமேகலை மூலமாக, மூன்று ஆண்டிற்கு முன், நாப்கின் தயாரிக்கும் பயிற்சி எடுத்து, வீட்டிலேயே கைத் தொழிலாக செய்து, விற்க ஆரம்பித்தேன்.மாதவிடாய் காலங்களில், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின், கிராமப் பகுதி பெண்கள் அறியாத விஷயம். இந்த பெண்களை நாப்கின் உபயோகிக்க வைத்தால், சில ஆண்டுகளுக்கு போட்டியில்லாமல் தொழில் செய்யலாம்.புதிய வாடிக்கையாளர்கள், தயக்கமில்லாமல் வாங்கிக் கொள்வர் என்ற நம்பிக்கையில், கிராமப் பெண்களைத் தேடிச் சென்றேன். ஒரு தோழியைப் போல், அவர்களிடம் இந்த தயாரிப்பு பற்றி விளக்கிக் கூறியதால், வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்தது.உறிஞ்சும் தன்மையும், மிருதுவான அம்சமும் தான், நாப்கினை பெண்கள் நாடும் விஷயம். என் தயாரிப்பில் இது இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், என் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினேன். தற்போது, மிஷின் மூலம் நாப்கின் தயாரிக்க துவங்கியுள்ளேன். தமிழக தொழில் முதலீட்டுக் கழகத்தில், இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்று, இதை துவங்கியுள்ளேன். உற்பத்தி அதிகரிக்கவே, பள்ளி, கல்லூரி, மகளிர் விடுதிகளை தேடிப் போய், விற்பனை செய்கிறேன். தமிழக அரசு வழங்கும் இலவச நாப்கின் திட்டத்திற்கு, எங்களைப் போல சிறு தொழில் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், மிகவும் பலமாக இருக்கும்.