வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

அலோபதி சருக்கரை வணிகம்

1/2)" மரபு மருத்துவ முறைகளை  நெறிப்படுத்தி மக்களைக் காக்க வேண்டும்"    எனக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர் தெளிவாகவே தமிழ் மருத்துவ  முறையால் நீரிழிவு நோய் முதலான நோய்கள் நீங்குவதைக் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளதைவிடத் "தமிழ் மருத்துவப் பயன்களைப் பரப்பி" நோய்களைப்  போக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கலாம். பெரும்பாலோர் நோயை ஓரளவு கட்டுப்படுத்தும் ஆங்கில முறையை நம்பி, இறுதியில்   நோயை அடியோடு நீக்கும், தமிழ் மருந்திற்கு வருகின்றனர். அவ்வாறில்லாமல் முதலிலேயே  வந்தால் பெரும்பயன் அடையலாம்
2/2) சருக்கரைக் கொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சான்  உண்மையிலேயே சிறந்த மருந்தாகும். இதனுடன் நவாப்பழக்கொட்டை முதலான சிலவற்றைச் சேர்த்து மருந்துத் தூளாகத் தமிழ் மருந்துக் கடைகளிலும் 'காதிகிராப்ட்'  எனப்படும்  கடைகளிலும் விற்பனை செய்கின்றனர்.   இம் மருந்துத்தூளை நான் 6 வாரம் உட் கொண்ட பின் எனக்கிருந்த சருக்கரைநோய் நீங்கியது. இவ்வாறு எனக்கு அறிமுகமான பலருக்கு இதனால் பலன் ஏற்பட்டுள்ளது. தமிழ் மருத்துவர்களுக்குக் கூடுதல் ஊதியம் தருவதன் மூலம் இப்படிப்பின் மீதான ஈடுபாட்டை அரசு ஏற்படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அலோபதி சருக்கரை வணிகம்

தமிழ் இந்து, ம. செந்தமிழன்
Comment (10)   ·   print   ·   T+  
முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் ‘இலவச சர்க்கரை’சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற புகார்களுடன் மருத்துவர்களை அணுகினால், உடனடியாக சர்க்கரை நோய் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக, நாட்டில் சர்க்கரை நோய் தேடித் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறது. நல்லது. ஒரே ஒரு கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். பரிசோதனை செய்துகொள்பவர்களுக்கு ‘சர்க்கரை நோய்’இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதைக் குணப்படுத்தும் மருந்து யாரிடம் உள்ளது? அலோபதி மருத்துவத் துறைதான், நோய்களின் பிரச்சாரத்தை உலகப் போர் நடத்துவதைப் போல் நடத்திக்கொண்டிருக்கிறது. சரி, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அலோபதியில் இருக்கிறதா? இல்லை என்பதுதான் அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்ள வேண்டிய விடை. அதுதான் உண்மையும்கூட.
இந்திய அரசின் மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டம் 1940, 1945, 1995, தனது அட்டவணை ஜெ பிரிவில் 51 நோய்களை வகைப்படுத்தியுள்ளது. ‘இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என்றோ, தடுக்க முடியும் என்றோ, அவ்வாறான எண்ணங்களை வேறு ஏதேனும் வகையிலோ மக்களுக்கு அளிக்கக் கூடாது’என்கிறது அச்சட்ட விதி. இந்த 51 நோய்களின் பட்டியலைப் பார்த்தால், நாட்டில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு அலோபதி மருந்துகளை வாங்கவே தேவையில்லை என்று புரிந்துவிடும். இந்தப் பட்டியலில் 14-வது நோயாக சர்க்கரை நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் சட்டம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதற்குத்தான் இந்திய அரசின் பிரமாண்டமான கட்டமைப்பில் எவரும் இல்லை. மருத்துவம் என்பது ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அந்த நோயைத் தீர்த்து, நோயாளியை முழு நலமுடைய மனிதராக வாழச் செய்ய வேண்டும். அந்தத் திறன் அலோபதிக்கு இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோய் விஷயத்தில். சட்டப்படியும் நடைமுறைப்படியும் மருந்து இல்லாத நிலையில், எந்த மருத்துவராவது தம்மிடம் வரும் நோயாளியிடம், ‘எங்கள் முறையில் இதற்கு மருந்து இல்லை. ஆகவே, வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்’என்று கூறுவதுண்டா? எவரேனும் இருந்தால், அவர் நேர்மையாளர். மாறாக, ‘சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்’என்றுதான் கூறுகிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து மாத்திரைகள் விழுங்கிவிட்டு, இறுதியில் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு, பரிதாபமான நிலையை அடைகிறார்கள் மக்கள். புண்கள் வந்தால் உறுப்புகளே நீக்கப்படுகின்றன.
சர்க்கரை ஒன்றும் புத்தம் புதிய நோய் அல்ல. பல காலமாக இருந்துவருவதுதான். சர்க்கரை நோயை நம்முடைய மரபு மருத்துவ முறைகள் கட்டுப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்திலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சமீபமாகப் பரவலாகிவரும் தொடுசிகிச்சை முறையும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இவ்வளவு ஏன்? உணவுப் பழக்கத்தையும், சில வாழ்க்கை முறைகளையும் மாற்றினாலே போதும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். வந்தாலும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும். இந்த உண்மைகள் இப்போது மக்களின் கண்களுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால், பெரும் வணிக நோக்கம் இருக்கிறது.
சர்க்கரை நோயை மையமாக வைத்து எவ்வளவு பொருட்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்பதைச் சற்றே உற்றுப் பாருங்கள். மருந்து மாத்திரைகளில் துவங்கி, ஊட்டச் சத்துப் பொருட்கள், உடற்பயிற்சிக் கருவிகள், செருப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் என எல்லாமே வணிகமயம். இவ்வளவு பொருட்களும் சேர்ந்து, சர்க்கரை நோயைத் தீர்த்தால்கூடச் சகித்துக்கொள்ளலாம். ஆனால், இவை எல்லாம் சேர்ந்து, அலோபதி மருத்துவர்கள் மொழியில் கூறுவதானால், ‘சர்க்கரையைக் கட்டுப்பாட்டில்’வைக்கின்றன.
இந்திய அரசின் சுகாதாரத் துறைக்கென என்னதான் கொள்கை இருக்கிறது என்று புரியவில்லை. ஒருபுறம் சட்டத்தில் ‘இந்த நோய்களுக்கு அலோபதியில் குணமளிக்கும், தடுக்கும் மருந்துகள் இல்லை’என்கிறது. மறுபுறம், அந்த நோய்களைத் தீர்க்கும் உள்நாட்டு மருத்துவ முறைகளை ஓரங்கட்டி வைக்கிறது. மக்கள் நோயினால் நொந்து, சிகிச்சையினால் கடன்பட்டு, சொத்துகளை இழந்து, உறுப்புகளை இழந்து மாண்டுபோகட்டும் என்பதுதான் அதன் கொள்கையா?
பல கோடிகள் செலவிட்டு, நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும்போது, அந்த நோய்களை எந்த மருத்துவ முறைகளில் தீர்க்க முடியும் என்பதை ஏன் அரசு கூறுவதே இல்லை? என்ற கேள்வியைக் குடிமக்கள் கேட்க வேண்டும்.
சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் நடைப்பிணங்களாக மாற்றப்பட்டுவருகின்றனர். தமிழக அரசு 30+ விளம்பரங்களோடு கடமையை முடித்துக்கொண்டால், அதன் அறுவடையும் அலோபதி கருவூலங்களுக்குத்தான் சென்று சேரும். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு, சட்டப்படியும் மனித நேயப்படியும் மரபு மருத்துவ முறைகளை நெறிப்படுத்தி, சர்க்கரையை விரட்டி, மக்களைக் காக்க வேண்டும்.
செந்தமிழன், இயக்குநர். சர்க்கரை நோயை மையமாக வைத்து அவர் எடுக்கும் ‘இனிப்பு’ ஆவணப்படத்தின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. 
தொடர்புக்கு: senthamizhan2007@gmail.com

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மின் கம்பி அறுந்தால் . . தானியங்கி நிறுத்தி

மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!

சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. "டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும், "மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. தொடர்புக்கு: 96590 95472.



வணிகம் செய்ய  அகவை தடையில்லை!

பெல் நிறுவனத்தின் பாய்லர்களுக்கு, உதிரிபாகங்கள் செய்து தரும் தொழிலில் ஆண்டிற்கு, 6 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும், கீதா: எனக்கு திருமணம் நடைபெறும் போது, வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்திருந்தேன். குழந்தைகள் பிறந்ததும், கணவர் வெளிநாட்டிற்கு வேலை செய்யச் சென்றார். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், குழந்தைகளை கவனித்து கொண்டே, எம்.ஏ., - எம்.பில்., - எம்.எட்., என, என்னால் முடிந்ததை படித்து, பட்டதாரியாக மாறினேன். பட்டதாரியாக இருந்தாலும், வெறும், 2,400 ரூபாய் சம்பளத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். 2006ம் ஆண்டு, புதிய பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் அமைப்பில், உறுப்பினராக சேர்ந்தேன். அங்கு தான், "பெல்' எனும், பாரத மிகு மின் நிறுவனத்தில், உருவாக்கப்படும் பாய்லர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை செய்வதற்கு, "கான்ட்ராக்ட்' எடுப்பது பற்றி பேசினர். எனக்கும், பிசினஸ் செய்ய ஆர்வம் ஏற்பட்டதால், இது பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். "பெல்' நிறுவனத்தை பொறுத்த வரை, ஆண்களுக்கு மட்டுமே, "கான்ட் ராக்ட்' தருவர். ஏனெனில், இரும்பு போன்ற கடின உலோகங்களுக்கு வெல்டிங் செய்வது போன்று, வேலை, மிக கடினமாக இருக்கும். குறிப்பாக, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு தான் முன்னுரிமை. நான், இன்ஜினியரிங் படிக்காத பெண் என்பதால், மேற்கூறிய இரண்டு தகுதிகளும் என்னிடம் இல்லை. இருந்தாலும், கான்ட்ராக்ட்டை பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், வெல்டிங் செய்ய கற்றுக் கொண்டேன். பின், இன்ஜினியரிங் பிரிவில், "அட்மினிஸ்ட்ரேஷன்' படித்து, புதிய பெண் தொழில் முனைவோராக, "பெல்'லிலேயே, "கான்ட்ராக்ட்' பெற்று, வங்கி கடன் மூலம், பிசினசை ஆரம்பித்தேன். தற்போது, ஆண்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு, பிசினசில் உயர்ந்து, 17 தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன். என் பெண்ணிற்கு திருமணம் செய்து, அவளுக்கும் குழந்தை பிறந்த பின்னரே, என் பிசினசை ஆரம்பித்தேன் என்பதால், பிசினஸ் செய்ய வயது தடையில்லை.

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்களும் வணிகம் புரியலாம்!

பெண்களும் வணிகம் புரியலாம்!

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.