திருப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 டிசம்பர், 2012

தன்னம்பிக்கைப் பெண்கள்

சொல்கிறார்கள்

"தன்னம்பிக்கை ப் பெண்கள்!'உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, புதுவலவு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகிலுள்ள புதுவலவு தான், எங்கள் கிராமம். விவசாய கூலி போதவில்லை. எனவே, ஏதாவது தொழில் பண்ண நினைத்தோம்.தோட்ட வேலைக்கு போன, 14 பேரும் சேர்ந்து, ஒரு குழு ஆரம்பித்தோம். சில நாட்களில், திருப்பூரிலிருந்து, பனியன் கட்டிங் வேஸ்டேஜை வாங்கி, அதை வைத்து, ஜட்டி தயாரிக்கலாம் என கூறினர். எங்களில், சிலருக்கு மட்டும் தான், டெய்லரிங் தெரியும். அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து, தைரியமாக இறங்கினோம். முதலில், மூன்று மெஷின் போட்டு துவங்கினோம். இப்போது, 10 மெஷின்கள் உள்ளன. 10 - 20 ரூபாய்க்கு திண்டாடினோம். இப்போது, ஒரு ஆளுக்கு, 160 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது.குழு துவங்கிய போது, ஐந்து பேருக்கு மட்டும் தான் தொழில் தெரியும். ஓர் ஆண்டிலேயே, எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, 2.5 லட்சம் ரூபாய் மானியம் கடன் கொடுத்தனர். அடுத்தடுத்து, "ஆர்டர்ஸ்' வர, வெளி ஆட்களை வைத்து, வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.எல்லாரும் முல்லை, தென்றல் என்று தான், மகளிர் குழுக்களுக்கு பெயர் வைப்பர். ஆனால், ஊர் பாசத்தில், நாங்கள், ஊரின் பெயரிலேயே குழுவை துவங்கினோம்.நாங்க தயாரிக்கும் உள்ளாடைகளை, ஆட்களை வைத்து, ஈரோடு துணிச் சந்தையில் இறக்குவோம். ஆந்திரா, கர்நாடகா, கேரள வியாபாரிகள் போட்டி போட்டு, மொத்தமாக வாங்கிப் போய் விடுவர்.ஒரு கட்டத்தில், அதிகமான டிமாண்ட் வந்த போது, எங்களால், அந்த அளவுக்கு பண்ண முடியவில்லை.எந்த அளவுக்கு, "ஹை குவாலிட்டி' உள்ளாடைகளின் தேவை கூடிக் கொண்டே போகிறதோ, அதே அளவு, "சீப்' ரேட்டில் கிடைக்கிற உள்ளாடைகளுக்கும், நல்ல டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால், இதற்கு, எப்பவும் மவுசு குறையாது.

சனி, 3 நவம்பர், 2012

கைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்

கைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்

அனுப்பர்பாளையம்:"திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளுகின்றனர். அவர்களுக்கு, கையுறை, காலுறை, சீருடை வழங்க வேண்டும்,' என முதலாவது மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் ரவிசந்திரன் வலியுறுத்தினார்.திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.விவாதம் வருமாறு:சந்திரசேகர் (அ.தி.மு.க): ஆயுத பூஜை விற்பனைக்கு வாழைக்கன்று கொண்டு வந்தவர்கள், விற்காதவற்றை ரோட்டில் விட்டுச் சென்றனர். அதனால், குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வாழைக்கன்று விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடு விதித்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.மாரப்பன் (மா.கம்யூ.,): எனது வார்டில் 17 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

"அபேட்' மருந்து ஊற்றுவதில் குறைபாடு உள்ளது. டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். முதல் மற்றும் ஆறாவது வார்டில் டெங்குவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. வரி விதிப்பில் காலதாமதம்ஏற்படுகிறது.ராமச்சந்திரன் (நகர் நல அலுவலர் பொறுப்பு): மண்டலத்தில் மலேரியா பணியாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினர்
30 பேர் மூலம் "அபேட்' மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் டெங்குவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாநகர பகுதியில் 5,887 நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.உமா மகேஸ்வரி (தி.மு.க.,): குப்பை தொட்டி குறைவாக உள்ளது. செல்லம் நகரில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்.ரவிசந்திரன் (இ.கம்யூ.,): குலாம் காதர் லே-அவுட் பகுதியில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடையை அள்ளுகின்றனர். அவர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்க வேண்டும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர் நல அலுவலர்: தீபாவளிக்கு முன், துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்கப்படும்.சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): வார்டில் சுகாதார பணி மந்தமாக உள்ளது. தெருவிளக்கை மாற்றிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.ஈஸ்வரன் (அ.தி.மு.க.,): எம்ப்ராய்டரி குப்பை அதிகமாக சேகரமாகிறது. எம்ப்ராய்டரிஉரிமையாளர்களை அழைத்து பேசி, அவர்களது நிறுவனத்துக்கே சென்று மாநகராட்சி சார்பில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.சபியுல்லா (உதவி கமிஷனர்): எம்ப்ராய்டரி உரிமையாளரை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.சின்னசாமி (அ.தி.மு.க.,): இ.பி., காலனி முதல் ஆந்திரா வங்கி வரையுள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது.சத்யா (அ.தி.மு.க): பெரியார் காலனியில் பூங்கா பணி மந்தமாக நடந்து வருகிறது.கல்பனா (அ.தி.மு.க.,): சவுபாக்கியா காலனியில் சப்பை தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதாகிறது.

ராதாகிருஷ்ணன் (தலைவர்): இதற்கு முன், 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது ஆறு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய வரி விதிப்பில் தாமதம் ஏற்படுவதாக சிலர் கூறினர். மழைநீர் தொட்டி கட்டாமல் புதிய வரி விதிப்புக்கு வருகின்றனர். மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டியதும் வரி விதிக்கப்படும்.குலாம் காதர் லே-அவுட் பகுதியில் மண்டலம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும். தேவையான சுகாதார பணி செய்யப்படும். ஆயுத பூஜையன்று வாழை கன்று விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் காலனி பூங்கா பணி தீபாவளிக்கு முன் முடித்து திறப்பு விழா நடத்தப்படும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

சனி, 29 அக்டோபர், 2011

தேநீர்க்கடைக்காரர் மகள் பல்கலை அளவில் முதலிடம்

 
 
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2011,23:53 IST
திருப்பூர்:திருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.

மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.

மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.

அனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது "கவுன்சிலிங்' நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.

இரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.

திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார். கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.