திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்...
திராவிட இயக்கம் தோன்றியதன் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்த இயக்கம் நிறைவான பணிகளைச் செய்ததாகக் கருதுகிறீர்களா?
திராவிட இயக்கம் நிறைவான பணிகளைச்
செய்வதற்கு முயன்றிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இது ஒரு சமுதாய
இயக்கம். அதனால் இது எப்போதுமே தனது கடமைகளைச் செய்து முடித்துவிட்டது என்ற
முடிவு நிலையை அடைய இயலாது. அரசியல் கட்சிகள் போல இதன் இலக்கு
எல்லைக்குட்பட்டதன்று! திராவிட இயக்கம் பல சமூக மாற்றங்களை
நிகழ்த்தியுள்ளது. அவற்றில் முதன்மையானது, திராவிடனை, அஃதாவது தமிழனை தன்
உணர்வு பெறச் செய்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மனிதனை மனிதனாக
ஆக்க முயன்றிருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியையும்
பெற்றிருக்கிறது.
ஒரு வேளை இப்படி ஓர் இயக்கம் தோன்றியிராவிட்டால் என்னவாகி இருக்கும். இதுபற்றி நீங்கள் நினைத்ததுண்டா?
நினைத்ததுண்டு! அதற்குரிய விடைகளையும்
கண்டதுண்டு. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனத் தொடங்கிய, திராவிடர்
இயக்கம் தோன்றியிராவிட்டால், நாமெல்லாம் கல்வி அறிவற்ற விலங்குகளைப்
போலக்கூட வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் விலங்குகளில் உயர்வு, தாழ்வு
கிடையாது. மனித விலங்குக்கு மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாக்கப்பட்டிருந்தது.
இந்த நாட்டுக்குரிய மக்களைக் கல்வி பெறத் தகுதியில்லாதவர் களாகவும்,
ஒருவனை ஒருத்தி மணந்து வாழத் தகுதியில்லாதவர்களாகவும், பார்ப்பனர்களுக்கு குற்@றவல் செய்வதற்கே பிறந்தவர்களாகவும் இருந்த அந்த பழைய நிலையானது வேரூன்றி, விழுதுவிட்டு, பல்கிப் படர்ந்து செழித்து வளர்ந்திருக்கும்.
திராவிட இயக்கம் இனி எப்படிச் செல்ல வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
திராவிட இயக்கம் தன்னுடைய இலக்கில்
இருந்து சற்றே நகர்ந்ததும் உண்டு! விலகிச் சென்றதும் உண்டு! ஆனால்
அவ்வப்போது தன்னைச் சரி செய்து கொண்டும் வந்துள்ளது. உதாரணமாக, பெரியார்
காலத்திலேயே திராவிடர் இயக்கம் தன் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகிச்
செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிப்பது என்ற
நிலையில் சில ஆண்டுகள் அது அரசியல் கட்சிபோலவே இயங்கியது. இதை உணர்ந்த
பெரியார் மீண்டும் அதனைச் சரிசெய்து பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து
சேர்த்துவிட்டார்!
திராவிடர் இயக்கம் இந்தச் சமூகத்தை
செப்பனிட அல்லது புதுமைப்படுத்த உண்டான இயக்கம். அதன் மாசு துடைத்து, ஒளி
ஊட்டி, இக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் தக்கதாக ஆக்க வேண்டும். இதுதான்
அதன் ஒரே பணி, தலையாய பணி. அரசியல் இன்றியமையாதது என்றாலும், பொருளியல்
போன்றவற்றைப் புறக்கணிக்க முடியாது. இதற்கென்று ஒரு பிரிவாவது இயங்கிக்
கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இக்கால அரசியல் போன்ற
எந்தவிதமான பளபளப்பிலும் கண் கூசுதல் இல்லாமல் தன் பாதையைத் தெரிந்து நடக்க
வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கிய வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித்துவம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக
விளங்கியதே வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித் துவம் என்பதல்ல. இது அதன் ஒரு
கூறு மட்டுமே. திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக இருப்பது மனிதனை
மனிதனாகக் கருத வைப்பதுதான். அதாவது தமிழனைத் தமிழனாக!
வகுப்புவாரி உரிமை என்பது பெருமளவு
நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம். நம் இன எதிரிகள் அவர்களுக்கு வகுப்புவாரி
உரிமை கேட்கும் நிலை வந்துவிட்டது. பெரியாரால் உருவாக் கப்பட்ட பெரியார்
கல்வி நிறுவனங்களில் பார்ப்ப னர்களுக்கும் இடம் ஒதுக்கித் தருகிறார்கள்.
சமூக நீதியை விழைந்த இயக்கம். தங்கள் நிறுவனத்திலும் நேர்மையாக
அவர்களுக்கும் சமூக நீதியை வழங்கும் பொருட்டு அங்கு இடஒதுக்கீட்டைக்
கடைப்பிடிக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்து இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை?
பெரும்பாலும் அது நிறைவேறிவிட்டது. அதனால்
பேசப்படுவதில்லை. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர்.
அமைச்சரவையில் கூட ஏதாவது ஓர் இடத்தைத்தான், 'அவர்கள்' பெறுகிறார்கள்! மற்ற
இடங்களில் நாம்தான். இதில் அ.இ.அ.தி.மு.க.வை நான் திராவிட இயக்கமாகக்
கருதுவதில்லை!
திராவிட இயக்கக் கோட்பாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது?
பகுத்தறிவு. இது ஓர் அறிவியல் இயக்கம்.
பகுத்தறிவு ஏற்பட்டுவிட்டால் சுயமரியாதை தானே வந்துவிடும். சுயமரியாதை
வந்துவிட்டால் பகுத் தறிவு வருமா என்பது எனக்குத் தெரியவில்லை!?
மனித இனம் பகுத்தறிவுக்கு முதன்மை தர
வேண்டும். பகுத்தறிவுக் கோட்பாட்டில் அடங்காதது என்பது எதுவுமே இல்லை.
தவிரவும், பகுத்தறிவுக் கோட்பாட்டைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இன்னொரு
கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
திராவிட இயக்கங்களைப் பற்றித் தமிழ்த் தேசியம் பேசுவோர் கூறும் கருத்துகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைய தமிழ்த்தேசியம் பேசுவோரின்
கோட்பாடு என்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் அடங்காதது அன்று.
தமிழ்த்தேசியத்தின் மறுபெயர்தான் திராவிட தேசியம். அல்லது திராவிட
தேசியத்தின் மறுபெயர்தான் தமிழ்த்தேசியம் அல்லது இரண்டும் ஒன்றேதான்!
பல்வேறு வகைப்பட்ட தனித்தனிக் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தை ஒழிக்க
வேண்டும் என நினைப்பவர்கள் கூட்டாக ஏற்படுத்திக் கொண்டுள்ள கோட்பாடுதான்
தமிழ்த்தேசியம்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்,
திராவிடர் கழகம், தி.மு.க. என்று யாராக இருந்தாலும் சரி. எல்லோரும்
உழைத்தது, உழைப்பது தமிழர்களுக்கே. தமிழ் நிலத்துக்கே. எந்தத் தலைவர்களும்
தனியே, தெலுங்கர்களுக்காக பனகல் அரசர், மலையாளிகளுக்காக டி.எம். நாயர்
போன்றோர் இல்லை.
அப்போது இருந்த ஒரே நாடு சென்னை மாநிலம்.
அன்றிருந்த பார்ப்பனரல்லாதவர்களுக்கான, அனைவருக்குமான ஓர் இயக்கமாகத் தான்
அது விளங்கியது. பின்னர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் இந்த உடன்பாட்டு
உணர்வுக்குள் ஒத்துவராதபோது, தமிழ்நாடே திராவிட நாடு எனக் கூறப் பட்டது.
விடுதலை ஏட்டில் தமிழ்நாடு தமிழருக்கே என்று போட்டார்கள். பின்னர் திராவிட
நாடு தமிழருக்கே என்று கூறினர். திராவிட நாடு தமிழ்நாடு என்ற
மூலக்கோட்பாட்டிலிருந்து பிறழவில்லை.
தமிழ் இலக்கணத்தில் சுசந்தனக்கோல்
குறுகினால் பிரப்பங்கோல் ஆகிவிடாது. சந்தனக் கோல் சந்தனக்கோல்தான். அதுபோல்
திராவிட நாடு தன் எல்லையில் குறுகநேர்ந்தாலும் தன் குணம் மாறாது!
இன்றைய அரசறிவியல் என்ற கல்வி அளவுகோலில் திராவிட இயக்கம் குறித்து ஒரு மதிப்பீட்டைக் கூறுங்களேன்?
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில்
இருந்து எத்தனையோ நிலநடுக்கங்கள்! புயல்கள்! காட்டுத் தீ போன்றவை
ஏற்பட்டும் அது தன் இயல்பிலிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் தொடர்ந்து
முயன்று கொண்டிருக்கிறது.
திராவிட இயக்க எழுச்சியால்தான் இடதுசாரி சிந்தனைப் பெருக்கம் முடங்கியதாகக் கூறப்படுகிறதே?
திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இடதுசாரி
சிந்தனை முடங்கி இருப்பதாகக் கூறுவதைவிட, இடதுசாரிகளின் முடங்கிப்போன
சிந்தனை வெற்றிடத்தால்தான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது என்பதே
உண்மை!
இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பெல்லாம் கூச்சப்பட்டனர். இன்று பகிரங்கமாக நெற்றிக்குறி, தேர் இழுப்பது என மாறியுள்ளதே?
இது திராவிட இயக்கத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள்! அது அக அழுக்கா, புற அழுக்கா என்று தெரியவில்லை!
நன்றி: ஆழம் மாத இதழ் ஏப்ரல் 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக