ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

save your eyeballs!

கருவிலேயே லேசர் சிகிச்சை...
இரட்டை குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாகப் பிறக்க வழிகாட்டும் டாக்டர் சுரேஷ்: கருப்பையில் இரண்டு கரு முட்டைகள் தனித்தனியாக வளரும் போது, எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சில சமயங்களில் ஒரே கரு உருவான, நான்கு அல்லது எட்டாவது நாளில், இரண்டாகப் பிரியும். இப்படி தாமதமாகப் பிரியும் போது தான் பிரச்னை. ஒரே பிளாசென்டாவில் இருந்தே இந்த இரண்டு கருவிற்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. அதேபோல், ரத்த நாளங்களும் ஒன்று தான்.
ஒரே முட்டையிலிருந்து பிரிந்த கருக்களை, "ஏ' "பி' என, வைத்துக் கொள்வோம். கருவில் ரத்த ஓட்டம், "ஏ' விலிருந்து "பி'க்குச் சென்று மீண்டும், "ஏ'க்கு வரும். இது தான் ஒரே கரு முட்டையிலிருந்து உருவான, 85 சதவீதக் கருக்களில் நடக்கும் விஷயம். ஆனால், மீதி, 15 சதவீத கருக்களில், "ஏ'விலிருந்து, "பி'க்கு சென்ற ரத்தம் மீண்டும், "ஏ'க்கு வருவதில்லை. காரணம், ரத்தத்தை மீண்டும் வந்த இடத்திற்கே கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இருப்பதில்லை அல்லது ஏதாவது குறைபாட்டுடன் இருக்கும்.
சமமான ரத்த ஓட்டம் இரண்டு கருவிற்கும் கிடைக்காதது தான் இங்கு மையப் பிரச்னை. தேவைக்கு அதிகமான ரத்தம்,
"பி'யில் தங்குவதால், கருவிலிருந்து வெளிவரும் நீரும் அதிகமாக இருக்கும். இப்படி வெளிவரும் நீர் அடிக்கடி கருவைச் சுற்றி நிறைய சேர்ந்து விடும். அதேசமயம், "ஏ'க்கு போதுமான ரத்தம் இருக்காது. இதனால், கருவிலிருந்து போது மான நீர் வெளிவராது; கருவைச் சுற்றியும் தேவையான நீர் இருக்காது.
இதற்கு சரியான சிகிச்சை தராவிட்டால், குறை பிரசவத்துடன் பிறந்து, 100 சதவீதம் இரண்டு குழந்தைகளும் இறக்கும் அபாயம் உள்ளது. இதற்கு சரியான தீர்வு தான், "பீட்டோஸ்கோபி!' இந்த முறையில், ஒரு மெல்லிய நுண் குழாயைக் கருவினுள் செலுத்தி, லேசர் சிகிச்சை மூலம், கருவின் ரத்த நாளங்களை செயலிழக்கச் செய்து விடுவோம். அதன் பின், தேவையானரத்தம் நஞ்சுக் கொடியிலிருந்து கருவிற்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 


கண்ணே கருவிழியே!

கண் மருத்துவர் பிரக்ஞ வெங்கடேஷ்: நம் கண்கள் எப்போதும் தூரப் பார்வைக்கென்றே அமைந்தது. எனவே, எந்த வேலையாக இருந்தாலும், நீண்ட நேரம் குறைந்த தூரத்தில் பார்த்துச் செய்தால், கண்களைப் பாதிக்கும். கண்களில் சுரக்கும் நீர் தான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. கண்களின் நடுப் பகுதியில் உள்ள கருவிழிக்கு ரத்த ஓட்டம் கிடையாது. எனவே, கருவிழிக்குத் தேவையான ஊட்டச்சத்து, கண்களில் சுரக்கும் நீர் வழியாகவே கிடைக்கிறது. கண்களில் தேவையான அளவு நீர் சுரக்க வேண்டுமென்றால், ஒரு நிமிடத்திற்கு குறைந்தது, 10 முறை இமைக்க வேண்டும்.

ஒரு நிமிடத்திற்கு, 10 அல்லது 12 முறை கண்களை இமைப்பது சாதாரணமான விஷயம். ஆனால், ஐ.டி., துறையில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதுடன், நிமிடத்திற்கு மூன்று, நான்கு முறை மட்டுமே இமைக்கின்றனர். இதனால், போதுமான நீர் சுரக்காமல், கண்கள் வறட்சியாகி விடுகின்றன.இதைத் தொடர்ந்து, எரிச்சல், சோர்வு, சிவந்து போவது, தலைவலி, பார்வை மங்குவது போன்ற பிரச்னைகளும் வரும்.

ஆண்டுதோறும், இந்தப் பிரச்னையால் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்படி அதிகம் பேரைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தாலும், இதைத் தவிர்ப்பது எளிது.
எப்போதும், கம்ப்யூட்டர் திரை நம் உயரத்தை விட சற்று குறைவான உயரத்தில் இருக்க வேண்டும். தொடர்ந்து, 12 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் இருக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தது, 12 முறை கண்களை இமைக்க மறக்கக் கூடாது. அதையும் மீறி கண்கள் வறட்சியானால், போதுமான நீர் சுரக்க, சொட்டு மருந்து உள்ளது. கண் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக