வெள்ளி, 4 மே, 2012

அரிய வகை கோழிகளை வளர்க்கும் இளைஞர்

அரிய வகை கோழிகளை வளர்க்கும் இளைஞர்


கிருஷ்ணகிரி: ஒரு சாண் உயரம் மட்டும் வளரும் கோழி, வாத்து, முடிகள் பின்னோக்கி வளரும் அரிய வகை கோழிகளை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் வளர்த்து வருகிறார்.

கிருஷ்ணகிரி நீதிமன்றம் அருகே உள்ள சாயுதுரை தோட்டத்தில், குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜாகீர், 33. பல்வேறு அரிய வகை விலங்கு மற்றும் பறவைகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு பகுதியில் உள்ள தோட்டத்தில், குடில் அமைத்து, புறா, லவ் பேர்ட்ஸ், வாத்து மற்றும் அரிய வகை கோழிகளை வளர்த்து வருகிறார்.

கொண்டை சேவல்: இவர், ஒரு சாண் உயரம் மட்டும் வளரக்கூடிய பேந்தம் என்ற கொண்டை சேவல், வாத்து போன்ற பளபளக்கும் முடிகளைக் கொண்ட குறைந்த உயரம் கொண்ட சில்கி, இறக்கைகள் பின்நோக்கி திரும்பியுள்ள குறைந்த உயரம் கொண்ட பிரிசல் போன்ற, அரிய வகை கோழிகளை வளர்த்து வருகிறார். இவரிடம் உள்ள இந்த அரிய வகை அழகிய கோழிகளை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும், அரிய வகை பறவைகள், விலங்குகளை வளர்க்கும் ஆர்வம் கொண்டவர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து ஜாகிர் கூறியதாவது: விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து விவசாயத்தை இயற்கை மற்றும் நவீன முறையில் செய்து வருகிறோம். பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் அதிகம். எங்கள் தோட்டத்தில் ஆரம்பத்தில் கூண்டுகள் அமைத்து, புறா மற்றும் லவ் பேர்ட்ஸ் ஆகியவற்றை வளர்த்தேன்.

3,500 ரூபாய்: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் வித்தியாசமான மற்றும் அரிய வகை கோழிகள் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது அங்கிருந்த கோழிகளை பார்க்கும் போது. இதில், ஒரு சாண் உயரம் மட்டும் வளரக் கூடிய மூன்று வகை கோழிகள் இருந்தன. ஒன்று கொண்டை சேவல் போன்ற பேந்தம், முடி பளபளப்பாக வாத்து போன்ற அமைப்பை கொண்ட சில்கி, முடிகள் பின்நோக்கி வளரக் கூடிய பிரிசல் வகைகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. ஒரு ஜோடி, 3,500 ரூபாய் என, ஆறு ஜோடி வாங்கி வந்தேன். ஆரம்பத்தில் இதற்காக பட்டியமைத்து தனியாக வளர்த்தேன். பின் தோட்டத்தில் இருந்த நாட்டுக்கோழிகளுடன் இவை சேர்ந்து வளரத் துவங்கின. எங்களிடம் வளரும் இந்த அரிய வகை கோழிகள் பற்றி கேள்விப்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர். இந்த அரிய வகை கோழிகளை வளர்க்க விருப்பப்பட்டு கேட்டவர்களுக்கு, அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டும், அரிய வகை கோழிகள் அனைத்து இடங்களிலும் வளர வேண்டும் என்பதற்காகவும், ஒரு ஜோடி கோழிகளை, 500 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். இவ்வாறு ஜாகிர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக