வெள்ளி, 4 மே, 2012

பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம்: விருத்தாசலத்தில் 16 ஆண்டுகளாக அசத்தும் மனிதர்


விருத்தாசலம்: விருத்தாசலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடந்த 16 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
விருத்தாசலம் பழமலைநாதர் தெருவைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார்.
இவரிடம் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், ஆன்மிகவாதி தியானேஸ்வர் மற்றும் ரிசர்வ் வங்கியின் நூறு ஆண்டு விழா உட்பட 150 வகையில் அச்சிட்ட ஒரு ரூபாய் நோட்டுகள், 25 வகையான 2 ரூபாய் நோட்டுகள், 40 வகையான 5 ரூபாய் நோட்டுகள், 6 வகையான 10 ரூபாய் நோட்டுகள் உள்ளன.
சுதந்திரத்திற்கு முன், சில்வர், காப்பர், வெண்கலத்தில் வெளியான நாணயங்கள், சுதந்திரத்திற்கு பின், ஒவ்வொரு கவர்னர் பதவி காலத்தில் வெளியான 1,000, 500, 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் கேசரித்து வைத்திருப்பதுடன், 1813ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் போது புழக்கத்தில் இருந்த பத்திரத்தை கொல்கத்தாவிலிருந்து வரவழைத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
1918 மற்றும் 1945ல் வெளியான ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்கள், எட்வர்ட், விக்டோரியா குயின், ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் ஆட்சி காலத்தில் வெளியான சில்வர், காப்பர், பித்தளை உலோக நாணயங்களும் இவரிடம் உள்ளன.
மேலும், 1836ல் வெளியான ஒரு புறம் கழுகு உருவமும், மறு புறம் தமிழ் எழுத்துகளும் கையால் அச்சிடப்பட்ட நாணயம், சுதந்திரத்திற்குப் பின் முதன் முதலாக 1950ல் குதிரை உருவம் அச்சிடப்பட்டு வெளியான நாணயம், 1957ல் ஒரு நயா பைசா, ஒரு பைசா, பைசா என அனைத்து நாணயங்களும் இவரது சேகரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது.
1887-89ல் மூன்றாம் ஆங்கிலோ பர்மா போர் நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன், 7,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளார். தற்போது இந்த நாணயம் 2.45 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அனந்தகிருஷ்ணன் "தினமலர்' நாளிதழ் நிருபரிடம் கூறியதாவது:
நெய்வேலியில் வசிக்கும் எனது மாமா மகாலிங்கம், சகோதரர் மணிமாறன் ஆகியோர் நாணயங்களைச் சேகரித்து வருகின்றனர். அவர்களைப் பார்த்து கடந்த 16 ஆண்டுகளாக நாணயங்களை சேகரித்து வருகிறேன். மேலும், 1954ல் இந்திய அரசு அச்சிட்ட 5,000, 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தீவிரமாகத் தேடி வருகிறேன்.
1835 முதல் 1947 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெளியான நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதே எனது லட்சியம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக