சனி, 5 மே, 2012

"ஆங்கிலமா... நானா?'

சொல்கிறார்கள்

"ஆங்கிலமா... நானா?'
 

பெங்களூரு செயின்ட் ஜோசப் மாலை கல்லூரியின் முதல் பெண் முதல்வர் கிரேஸ்லெட் ஸ்டேன்லி: நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தான் என் சொந்த ஊர். என் உடன் பிறந்தவர்கள் 16 பேர். சின்ன வயதில் இருந்தே, என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உண்டு. அதற்குக் காரணம் என் அம்மா. படிப்பு மட்டுமல்ல, பேச்சு, கட்டுரை, கவிதை என்று அனைத்திலும் உற்சாகப்படுத்துவார். நான், பிளஸ் 2 வரை தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். அதனால், எனக்கு வசப்படாமல் இருந்த ஆங்கிலம் மீது கோபமும், காதலும் சேர்ந்து வந்தது. கல்லூரியில், பி.ஏ., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்; ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினேன். ஆனால், "நானா - ஆங்கிலமா'ன்னு மல்லுக்கட்டிப் படித்தேன். பல்கலைக்கழக முதல் மாணவியாக வந்தேன். பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில், பேராசிரியராக வேலை கிடைத்தது. மாலை கல்லூரி மாணவர்களில் பாதி பேர் பெண்கள். இன்று உள்ளது போல், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு கிடையாது. ஏட்டுக் கல்வியை மட்டும் கொடுக்காமல், சமூகத்தில், தான் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத் தரவேண்டும் என்பது என் எண்ணம். அதை நான் செயல்படுத்தினேன். காதல், பாலியல், கல்வி சார்ந்த சரியான பார்வையைப் பெறவும் வழிகாட்டினேன். கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நான் தான் பொறுப்பு. அதை நான் சிறப்பாகக் கையாண்டதால், "கல்லூரி கவர்னர்' பதவி கொடுத்தனர். அதையும் சிறப்பாகச் செய்தேன். கல்லூரியில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக, என் னை முதல்வர் ஆக்கினர். இந்த அங்கீகாரம் கிடைத்ததில் நிறையவே பெருமையடைகிறேன். சமூக மாற்றத்தின் சாவியான கல்வி, ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இனி என் பயணம் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக