மளிகை கடைகளில் சிதறும் தானியங்களை சேகரித்து, பறவைகளின் பசியை, போக்கி வருகிறார் ஒருபெண்.
இரைச்சல் மிகுந்த சென்னையில், பறவைகளை பார்ப்பது அரிதாகி விட்டது. நீர் நிலைகள் குறைந்து, மரங்கள் வெட்டப்பட்டு, நகரமே கட்டடமயமாகிவிட்டதால், பறவை எண்ணிக்கை குறைந்து விட்டது. சிலரது மனிதாபிமானமிக்க நடவடிக்கையால், அங்கொன்றும் இங்கொ ன்றுமாக சிறகசைப்பது தொடர்கிறது.
தானியம் சேகரிப்பு:புதுக்கோட்டை மாவட்டம் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. ராமாபுரம் பாலாம்பிகை நகரில் வசிக்கிறார். சிறுவயதில் இருந்தே பறவைகள் மீது அலாதி ஆர்வம் கொண்டவர். வீடு தேடி வரும் பறவைகளுக்கு தானியங்களை வழங்கி பசியாற்றி வருகிறார். இதற்காக, மளிகை கடையில், தினமும் சிதறி வீணாகும் தானியங்களை கேட்டு வாங்கி பறவைகளுக்குப் போட்டு மகிழ்கிறார்.
தந்தை தந்த பரிசு:ரேவதி தெரிவித்ததாவது:பறவைகளை வளர்ப்பதில் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். ஆனால், கூண்டுக்குள் வளர்ப்பதில் விருப்பம் இல்லாதவர். வீட்டுக்கு பறவைகளை வரவழைப்பதற்கென்று ஒரு மொழியை கற்று வைத்திருந்தார். குரல் உயர்த்தி கூப்பிடுவார்; பறவைகள் வீடு தேடி வந்துவிடும். தானியங்களை கொத்தி தின்னும் போது, குதூகலிப்பதை பார்த்து மகிழ்வார். அப்பாவின் மூச்சுக் காற்று பிரிந்து செல்லும் தருணம் வரை பறவைகளோடு வாழ்ந்து மறைந்தார்.
மகிழ்ச்சி:பறவைகள் வளர்ப்பில் இருக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். வளர்க்கலாமே என்றார். ஆனால், இந்தளவுக்கு பாசக்காரியாக இருப்பேன் என, தெரியாது. பறவைகள் பயமின்றி வந்து செல்வதற்கு ஏதுவாக, வாசல் பகுதியில் தோட்டம் அமைத்தேன். அதில் பறவைகள் கொஞ்சி மகிழ்கின்றன. மளிகை கடைகளில் சிதறும் தானியங்களை வாங்கி வந்து பறவைகளுக்குப் போடுகிறேன். கொத்தி தின்று விட்டு சிறகசைத்து பறக்கையில் நன்றி சொல்லும். அவற்றை பார்க்கும் போது, என் அப்பா கூடவே இருப்பதுபோலவே உணர்கிறேன்.இவ்வாறு ரேவதி கூறினார்.
- ஆர்.மோகன்ராஜ் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக