செவ்வாய், 12 அக்டோபர், 2010

கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் விலகல்: முதல்வர் கருணாநிதி
First Published : 12 Oct 2010 12:56:27 AM IST

சென்னை, அக். 11: கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தன்னை விடுவித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.  பூடான் லாட்டரிக்கு கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, அந்த மாநில லாட்டரி ஏஜெண்டான "மெகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனம் சார்பில் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். இது, கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்தப் பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்து, கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:  தமிழக அட்வகேட் ஜெனரலாக உள்ள பி.எஸ். ராமன், தமிழகத்துக்கு எதிரான வழக்குகளில் மட்டுமே ஆஜராகக் கூடாது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழக அட்வகேட் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராகலாம்.  தங்களது மாநிலத்தின் லாட்டரி வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அவர் ஆஜராகியுள்ளார். எனவே, அவர் ஆஜராவதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை. என்றாலும் இந்தப் பிரச்னை தொடர்பாக தங்களது மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்.  இதுபோன்ற வழக்குகளில் அவர் ஆஜராக சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்ற போதிலும், "லாட்டரி வழக்கில் ஆஜராக வேண்டாம்' என்று பி.எஸ்.ராமனை கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்னைக்கு இத்துடன் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

நல்ல நடவடிக்கை. சரியான மறுமொழி. ஆனால், கேரள அரசு இதுபோல் தமிழகத்துடன் நல்லுறவு கொள்ள முயல வேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக