சனி, 16 அக்டோபர், 2010

விஷ ஊசி" வழக்கில் 4 பேருக்கு தூக்கு
பணத்துடன் சென்னைக்கு வந்தவர்களை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், 4 பேர் தூக்குத்தண்டனையும், 4 பேர் ஆயுள் தண்டனையும் அடைந்தனர்.
 
சென்னை நகரில் 1970_ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 1972_ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கும்பல் 7 பேர்களை கொலை செய்தது. இந்த துணிகரக் கொலைகளை, பண ஆசையால் அந்த கும்பல் மிகவும் சாதூரியமாக நடத்தி வந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் போல நடித்து கைவரிசை காட்டினார்கள்.
 
கொலை செய்யப்பட்டவர்களில் பலர் வியாபாரிகள். தொழில் விஷயமாக சென்னைக்கு வந்தபோது, இந்த கொலை கும்பலிடம் மாட்டிக்கொண்டு உயிரை துறந்தார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
 
1. ராமநாதன் செட்டியார் என்கிற வடிவுல்லான் செட்டியார் (24). ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஓ.சிறு வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
 
2. சாகுல் அமீது (29). ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர். மலாயாவில் உள்ள ஈப்போ நகரில் தொழில் செய்து வந்தவர்.
 
3. மூர்த்தி (25), சென்னை. இவரும் விஷ ஊசி கும்பலைச் சேர்ந்தவர். அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கொடுக்கிறார் என்று சந்தேகப்பட்டு, இவரையும் கொன்றுவிட்டனர்.
 
4. புகாரி தம்பி (40), காயல்பட்டினம், நெல்லை மாவட்டம்.
 
5. சித்திக் (45), காயல்பட்டினம்.
 
6. முகமது சாலிக் (60), காரைக்கால்.
 
7. தைக்கா தம்பி (38), கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.
 
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு பணத்துடன் வரும் வியாபாரிகள், பணக்காரர்கள் ஆகி யோரை இவர்கள் முன் கூட்டியே நோட்டம் பார்த்து வைத்துக் கொள்வார்கள். அந்த நபர் சென்னை வந்ததும், கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களில் ஒருவர் அவரை மடக்குவார். சுங்க இலாகா அதிகாரி என்று கூறி மிரட்டுவார்கள்.
 
"நீ சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடு பட பணத்துடன் வந்திருக்கிறாய். உன்னிடம் இருப்பது கறுப்புப்பணம். உன்னைப் பிடித்து வரும்படி அதிகாரி உத்தரவிட்டு இருக்கிறார். என்னுடன் வா" என்று சற்று தூரத்தில் நிற்கும் கார் அருகே இழுத்துப் போவார்.
 
காரில் இருக்கும் தன் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை சுட்டிக்காட்டி, "ஐயாவிடம் உள்ளதைச் சொல்" என்று மிரட்டு வார். வியாபாரி மிரள்வதை பயன்படுத்தி, இந்த கோஷ்டியினர் அவரை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு போவார்கள்.
 
காரில் அதிகாரி போல இருப்பவர், "இவனுக்கு உண்மையைச் சொல்ல வைக்கும் மருந்தைக்கொடு" என்று கட்டளையிடுவார்.
 
உடனே அந்த நபருக்கு தூக்க மருந்து அல்லது அதிக மயக்கம் தரும் பெத்தடின் ஊசி மருந்து உடலில் செலுத்தப்படும். மயங்கி விழுந்ததும் அவனை சாகடித்து பணத்தை கொள்ளை அடித்துக்கொள்வார்கள்.
 
இறந்தவர் யார் என்று தெரியாமல் இருக்க, அவர் உடலில் உள்ள எல்லா துணிகளையும் அகற்றிவிடுவார்கள். காரில் இருந்தபடியே பிணத்தை கீழே உருட்டி தள்ளிவிடுவார்கள்.
 
2 பிணங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள். ஒருவரை தூக்கு போட்டு தற்கொலை செய்ததை போல மரத்தில் தொங்க விட்டார்கள். ராமநாதன் செட்டியாரை செங்கல்பட்டு அருகே ஒரு சுடுகாட்டில் குற்றுயிராக போட்டுவிட்டு வந்தனர். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் இறந்தார்.
 
மற்றவர்களை கார் "பேன்" பெல்ட்டினாலும், மப்ளரினாலும் கழுத்தை இறுக்கிக் கொன்றனர்.
 
இந்த மாதிரி இவர்கள் ரூ.5 லட்சம் வரை கொள்ளை அடித்ததாக கூறப்பட்டது. இவற்றில் ரூ.3 லட்சம் பெறுமான ரொக்கம், தங்கக் கட்டிகள், தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், கார்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.
 
தமிழக போலீசார் இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கு போய் புலன் விசாரணை நடத்தி துப்பு துலக்கினார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கித்தானே தீரவேண்டும். அந்த வாக்குக்கு ஏற்ப விஷ ஊசி கொலை கும்பல் போலீசாரிடம் சிக்கினார்கள்.
 
தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி ஐ.ஜி. அருள் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத்துறை சூப்பிரண்டு ஞானசம்பந்தம் தலைமையில் டிப்டி சூப்பிரண்டு தியாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி நரசிம்மன், மனோகர், சுந்தர மூர்த்தி, கந்சாமி, சப்_இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, தலைமை போலீஸ்காரர் ஷெரீப் ஆகியோர் புலன் விசாரணை நடத்தி 9 பேர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தார்கள். பிடிபட்ட கொலைகாரர்கள் பெயர் விவரம்:-
 
1. டி.வி.வைத்தீசுவரன் என்கிற வைத்தி (வயது 38). சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த மருந்துக்கடை வியாபாரி.
 
2. சி.ஆர்.பார்த்தசாரதி என்கிற சாரதி (37), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். கார்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார்.
 
3. கே.லட்சுமணன் (30). ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மோட்டார் டிரக் டிரைவர்.
 
4. கே.கண்ணன் (25), சென்னை கம்பெனி சிப்பந்தி.
 
5. எம்.எம்.தாவூத் (41), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்.
 
6. ஏ.அïப்கான் (28), ராமநாத புரத்தைச் சேர்ந்தவர். டூரிஸ்டு டாக்சி கம்பெனி பங்குதாரர். முன்பு கார் டிரைவராக இருந்தவர்.
 
7. வி.மஜீத் (37), கீழக்கரை அச்சக தொழிலாளி.
 
8. கோபால் (33), சென்னை வன்னிய தேனாம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர்.
 
9. வேணுகோபால்.
 
இந்த வழக்கில் வேணுகோபால் அப்ரூவராக மாறிவிட்டார். எனவே, மற்ற 8 பேர் மீதும் சென்னை துணை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் 6 பெண்கள் உள்பட 257 பேர் சாட்சியம் அளித்தார்கள். குற்றவாளிகள் தரப்பில் 6 பேர் விசாரிக்கப்பட்டனர். இந்த பரபரப்பு வழக்கில் 10_1_1975 அன்று நீதிபதி விஜயரங்கம் தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றம் சாட்டப்பட்ட வைத்தீசுவரன், பார்த்தசாரதி, கே.லட்சுமணன், கே.கண்ணன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனையும், தாவூத், அïப்கான், மஜீத், கோபால் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
அப்ரூவர் வேணுகோபால் விடுதலை செய்யப்பட்டார். தீர்ப்பு 1,064 பக்கங்கள் இருந்தன. தீர்ப்பில் நீதிபதி விஜயரங்கம் கூறியிருந்ததாவது:-
 
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் இதில் கொலையுண்டு இருக்கிறார்கள். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களின் எதிரிகள் அல்ல. அவர்களுக்கு இவர்களை முன் பின் தெரியாது. இந்த நிலையில் பணத்தாசை பிடித்து எப்படியும் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இந்த கொலைகளைச் செய்து இருக்கிறார்கள்.
 
இப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கு மிகக்கடுமையான தண்டனையே பரிகாரமாகும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் துப்புதுலக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஆகியோரை நீதிபதி பாராட்டினார்.
 
தீர்ப்பைக் கேட்டதும், தூக்குத்தண்டனை அடைந்தவர்களில் ஒருவரான கே.கண்ணன் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவருடைய கைகளும், கால்களும் உதறின. உடனே கோர்ட்டு சிப்பந்திகள் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தனர். தீர்ப்பைக் கேட்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் மற்றும் திரளான பொதுமக்களும் கோர்ட்டில் கூடியிருந்தனர்
+++++++++++++++++++++++
கருத்து
Saturday, October 16,2010 04:11 AM, Ilakkuvanar Thiruvalluvan said:
இருவரும் சரியான கேள்வி கேட்டுள்ளனர். பணம் விளையாடியதால் ஆயுள் தண்டனையாகக் கருதப்பட்டு விடுதலை ஆனார்கள். அதுவும் காரணம் என்ன சொல்லப்பட்டது தெரியுமா? தூக்குத் தண்டனையைவிடக் கொடுமையானது அதற்காகக் காத்திருக்கும் மன உளைச்சல் என்று. ஆனால், நளினி முதலான பலர் இன்னும் சிறையில் இருக்கின்றனர். இத் தீர்ப்பின் அடிப்படையில் கூட அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யலாம். ஆனால் தமிழர் நாடாக நம் நாடு இல்லையே! நாம் தமிழர் என்னும் உணர்வைத் தமிழர் தந்தை ஆதித்தனார் விதைத்ததும் பலர் உணரவில்லையே! சீமான் உணர்த்தும் பணியைத் தொடங்கியதும் சிறைக்கு அனுப்பப்பட்டாரே! தமிழ் நாட்டில் தமிழ் முதன்மையும் தமிழர் தலைமையும் பெறும் பொழுதுதான் விடிவு கிடைக்கும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
Friday, August 20,2010 01:17 PM, தாரிக் said:
இவ்வளவு சொன்னீங்களே அவனுங்கள தூக்குள போட்டாச்சா இல்ல இன்னும் சுகமா கஞ்சி சாப்பிட்டுகுட்டு இருக்கானுங்களா அத சொல்லவே இல்ல
Wednesday, August 11,2010 04:45 PM, raj said:
They hanged or not

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக