வெள்ளி, 15 அக்டோபர், 2010

நல்லதுக்குக் காலமில்லை


லத்திகா சரண், காவல் துறைத் தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து நடைமுறைக்கே வராத உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்க முற்பட்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதுபோன்ற சில கருத்துகளுக்கு வழிகோலியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.  மக்களாட்சி முறையில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது கொள்கை முடிவுகளை முனைந்து செயல்படுத்துபவர்களைப் பொறுப்பான பதவிகளில் நியமிப்பது என்பது மரபு சார்ந்த வழக்கம்தான். அதற்காக ஏனைய அதிகாரிகள் செயல்திறமை இல்லாதவர்கள் என்பதல்ல பொருள். மூப்பு அடிப்படையில் மட்டுமே தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் போன்ற பதவிகள் தீர்மானிக்கப்படுவதில்லை.  திராவிட முன்னேற்றக் கழக அரசு மகளிருக்கு முன்னுரிமை கொடுப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது என்பது புதிய செய்தி அல்ல. குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரதிபா பாட்டீலை முழுமனதுடன் ஆதரித்ததும், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததும் திமுகதான் என்பது தெரியாத ஒன்றா என்ன? மகளிருக்கு முன்னுரிமை கொடுக்கும் திமுகவின் கொள்கை முடிவில் ஒன்றுதான் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பதவியும், தமிழகத் தலைமைச் செயலர் பதவியும் மகளிரால் அலங்கரிக்கப்பட வேண்டும் என்பது. அந்தக் கொள்கை முடிவில் தவறு காண முற்படுவதுதான் ஏன் என்று புரியவில்லை.  லத்திகா சரண் நியமனத்துக்கு முன் இப்பொறுப்பிலிருந்த ஜெயின் நீண்டநாள் விடுமுறையில் சென்று விட்டதால், காலியாக இருந்த இப்பதவிக்கு வேறு மாநிலம் அல்லது மத்திய அரசுப் பதவிக்குச் சென்றுள்ளவர்களைத் தவிர்த்து மொத்தம் மூன்று பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் லத்திகா சரண், நடராஜ், போலோநாத் என்ற மூன்று பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு, லத்திகா சரண் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.  விஜயகுமார் ஏற்கெனவே மத்திய அரசுப் பணிக்குச் சென்று விட்டார். பாலச்சந்திரன் ஓய்வு பெற்றுவிட்டார். காவல்துறைத் தலைமை இயக்குநர் (தீயணைப்பு) என்கிற பதவியில் தொடர்பவர் நடராஜ். இவரது பதவியோ, முக்கியத்துவமோ குறைந்துவிடவோ, பதவி இறக்கம் செய்யப்படவோ இல்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படவில்லை, அவ்வளவே.  இதனை எதிர்த்து அந்தப் பட்டியலிலிருந்த நடராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்து கடந்த 8.10.2010-ல் தீர்ப்பை வழங்கினர். அத்தீர்ப்பில், லத்திகா சரண் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு ஏதோ திமுக அரசு தவறு செய்துவிட்டதுபோல சிலர் கூக்குரலிடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அந்த விதிமுறைகள் எதுவும் இன்னும் நடைமுறைக்கே வரவில்லை என்பதுதான்.  மத்திய அரசு, மாநிலங்களில் டி.ஜி.பி. நியமனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த மனு நிலுவையில் இருப்பதை, சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியிருப்பதுதான் இவர்கள் குற்றம் கூறுவதற்கு வழிகோலியிருக்கிறது.  மாநிலக் காவல் துறைத் தலைமை இயக்குநராக ஒருவரை நியமிக்கும்பொழுது, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பெற்று, அதிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறை இன்னும் நடைமுறையில் சட்டமாக்கப்படவில்லை. இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் கருத்துகளையும் அறிய அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஜெ. தாமஸýடைய குழுவின் அறிக்கைகூட இப்போதுதான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வராத ஒரு சட்டத்தைக் காரணம் காட்டி லத்திகா சரணின் நியமனம் செல்லாது என குறிப்பிட்டது எந்த வகையில் நியாயமாகும்? இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.  லத்திகா சரணின் நியமனம் செல்லாது என தீர்ப்பு வந்த அன்றே, தமிழக அரசும் இதுகுறித்து முழுமையான, தெளிவான, பதிலோடு அறிக்கை வெளியிட்டது. தமிழகக் காவல் துறைத் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இப்பதவிக்கான நியமனம் தேர்வு நியமனம் என்பதால், இந்தக் காலிப் பணியிடத்துக்கு நியமனம் செய்யும்பொழுது, அந்தக் காலகட்டத்தில் பணியில் இருக்கும் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களின் பணித் திறன், அனுபவத்திறன் ஆகியவற்றைக் கொண்டே லத்திகா சரண் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார் என்றும் தமிழக அரசு அந்த அறிக்கையில் தெரிவித்தது.  மாநிலங்களில் டி.ஜி.பி.க்களை நியமனம் செய்யும் பொழுது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று நபர்களின் பட்டியலைப் பெற்று, அவர்களில் ஒருவரைத்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமோ, இதுகுறித்த நெறிமுறைகள் எங்களுக்கு இதுவரை வரவில்லை என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் மத்திய அரசுப் பணித் தேர்வுதான் எங்களுடைய பொறுப்பு. மாநில அரசுப் பணி நியமனங்களின் பட்டியல் தயாரிக்கும்பொழுது பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், நெறிகாட்டு வழிமுறைகளே எங்களுக்கு இல்லாதபொழுது நாங்கள் எப்படிப் பட்டியல் தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது.  மேலும் இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால் மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த மனு மீது இதுவரை எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையும் இல்லை.  இதையெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு இதுகுறித்து இருமுறை கடிதங்களை எழுதியுள்ளது என்பதை, தமிழக அரசின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கின்போது நீதிமன்றப் பரிசீலனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.  மத்திய பணியாளர் தேர்வாணையம் பட்டியல் தயாரிக்க முடியாத சூழ்நிலையில், தகுதி பெற்ற காவல் துறை மூத்த அதிகாரிகளைக் கொண்டு பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு நியமனம் முறையில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். இதில் உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகளைத் தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றியுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது, தி.மு.க. அரசு தனக்கு வேண்டிய லத்திகா சரணை பணி நியமனம் செய்து விட்டது என்று தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது வேதனை அளிக்கிறது.  மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரிகள் வெறும் பணிமூப்பை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், பணித் திறன், அனுபவத் திறன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைமைக்கு நம்பிக்கை உள்ளவராக நியமனம் செய்வது ஒரு மரபு. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகிற நாம், மக்களிடம் வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகிற அரசுகள் தங்களுடைய கொள்கைகள், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்களின் திறன், அனுபவம் இவற்றோடு அவர்கள் அளிக்கும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் சிந்தித்துத்தான் நியமனம் செய்வது வாடிக்கை, மரபு. பல சமயங்களில் நீதிபதிகள் நியமனத்தின்போதுகூட பணி மூப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு டி.ஜி.பி. அந்தஸ்திலிருந்த அனைத்து அதிகாரிகளின் பெயரையும் முறையாகப் பரிசீலனை செய்த பின், தகுதி, திறமை, அனுபவம், ஒத்துழைப்பு என்ற நிலையில் லத்திகா சரணை நியமித்தது முறையானதுதான் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியபோதும், தேவையற்ற சர்ச்சைகளை சிலர் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.  இப்பிரச்னை குறித்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்போது தீர்ப்புகள் மாறலாம். இறுதி முடிவு தெரியாமலேயே போகின்ற போக்கில் தி.மு.க. அரசு மீதும், முதல்வர் மீதும் விமர்சனங்களை அள்ளித் தெளிப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.  ஒரு பெண்மணி, அதுவும் திறமையும் தகுதியும் உள்ள பொறுப்பான பதவி வகிக்கும் பெண்மணி, தமிழகக் காவல்துறையில் தலைமைக் கண்காணிப்பாளர் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்கிற முதல்வரின் நல்லெண்ணத்தைக் களங்கப்படுத்த நினைக்கிறார்களே... இதை என்னவென்று சொல்ல...?  
கருத்துக்கள்

உங்களுக்கு விரைவில் தக்க பதவி காத்திருக்கிறது. கவலைப்படாதீர்கள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 2:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக