புதன், 1 செப்டம்பர், 2010

தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ்


கொழும்பு ஆக. 31: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்."எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம்' என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள  தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியிடம் அவர் ஆலோசித்தார்.அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார். கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார்.தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது. இதுதவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது. தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது. ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
கருத்துக்கள்

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வராமலா போகும்?ஒத்திகை முடிந்ததும் நாடகம் அரங்கேறாமலா போகும்? இறுதியி்ல் குற்றவாளி நடிகர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போகும்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 6:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *http://www.dinamalar.com/News_Detail.asp?Id=74695
தமிழர்களுக்கு இந்தியா உதவும் : நிருபமா உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக