செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நாடோடிக் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கல்வி கிடைக்குமா?


வேதாரண்யம் : பல தலைமுறைகளாக நாடோடி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களின் சிறார்கள் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அவர்களது வாழ்வில் மாறுதல் ஏற்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.÷ஆதியன் பிரிவைச் சேர்ந்த நாடோடி இன மக்கள், அலங்கரிக்கப்பட்ட (பூம்பூம்) மாடுகளை ஓட்டிச் சென்று பாட்டுப் பாடுவது, குடுகுடுப்பை அடித்து வாக்குச் சொல்வது போன்றவற்றில் ஆண்களும், கதைகளை ஒப்பாகப் பாடுவது, சுறுக்குப் பை தயாரிப்பது போன்றவற்றில் பெண்களும் ஈடுபட்டு முன்பு வருமானம் தேடி வந்தனர்.  காலப்போக்கில் மாடுகளை ஓட்டிச் செல்லும் முறைகளெல்லாம் இல்லாமல் போனது. ஆனாலும், தற்போது பாட்டுப் பாடுவது, பச்சை குத்துவது, குறி சொல்லுவது, பழைய துணிகளைச் சேகரித்து விற்பது, சாலையோரத்தில் வீணாகிக் கிடக்கும் பாலித்தீன் பொருள்களைச் சேகரித்து விற்பது போன்றவற்றின் மூலம் குறைந்த அளவு வருமானம் ஈட்டிவருகின்றனர்.  கல்வி அறிவை முற்றிலுமாகப் பெறாத இந்தச் சமூகத்தவர்களின் இன்றைய தலைமுறையின் நிலையும் பல இடங்களில் அப்படியேதான் உள்ளது. விழிப்புணர்வும், கல்வி கற்கும் வாய்ப்பும் இல்லாத பகுதிகளில் உள்ள குழந்தைகளும் அதே தொழிலில் ஈடுபடும் நிலை உள்ளது.   இதுகுறித்து திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கேசவன் (52) கூறியது:   பூம்பூம் மாடுகளுடன் பிச்சை எடுப்பது எங்களது பூர்வீகத் தொழில். தற்போது சட்டிமேளம் அடித்தும், பாட்டுப் பாடி பிச்சை எடுத்தும், பழைய துணி, பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி விற்றும் வருகிறோம்.   நாடோடிகளாக இருப்பதால் எங்களுடைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்புகள் இல்லை. எங்களை ஆதியன் வகுப்பு எனச் சொல்கிறார்கள். ஆனால், ஜாதிச் சான்று பெறுவதிலும் பிரச்னை உள்ளது என்றார் அவர்.     மாநிலம் முழுவதும் இதே நிலையில்தான் நாடோடிகளின் வாழ்க்கை அமைந்துள்ளது. இதிலிருந்து அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்ற, சில நேரங்களில் அரசு எடுக்கும் முயற்சிகள்கூட தொடர் கண்காணிப்பு இல்லாமல் அதன் நோக்கம் வீணாகிவிடுகிறது.  உதாரணமாக, வேதாரண்யம்- நாகை சாலையில் முன்னர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்ட, கல்வித் துறைக்குச் சொந்தமான இடத்தில் 25-க்கும் மேல்பட்ட நாடோடி குடும்பத்தினர் தாற்காலிக குடிசைகள் அமைத்து வசிக்கின்றனர். இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும்.    இந்த வளாகத்தில்தான் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், அரசு மாணவிகள் விடுதி, உள்ளூர் சிறார் பள்ளி ஆகியன செயல்படுகின்றன.    இதே இடத்தில்தான் கல்வி கற்காத நாடோடி சிறார்கள் ஏக்கத்துடன் பிச்சை எடுத்துவிட்டு வந்து, விளையாடுகின்றனர்.     இவர்களின் நிலை குறித்து 5.9.2005 தினமணியில் ஏற்கெனவே செய்தி வெளியானது. இதையடுத்து, ஆய்வு செய்த அப்போதய நாகை மாவட்ட ஆட்சியரின் முயற்சியால், அங்கு உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேல்பட்டோர் படித்து வந்தனர்.    தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்பட்ட அந்தப் பள்ளி, 2006-ம் ஆண்டில் மூடப்பட்டது. இந்தப் பள்ளியை மீண்டும் திறந்தால் நாடோடிக் குடும்பத்தினர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  14 வயதை அடையாத சிறார்களை வேலைக்கு அமர்த்தும்போது உடல், மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால், அடுத்த தலைமுறையும் கல்வி அறிவை இழந்து வீணாக நேரிடுகிறது. இவற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் குழந்தைத் தொழிலாளர்முறை தடைச் சட்டம். இது நாடோடிகளுக்கும் பொருந்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.   மரபுசார்ந்து நாடோடிகளாக வாழ்க்கை நடத்தும் இந்த இனத்தினரின் வருங்காலத் தலைமுறையாவது கல்வி உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பெற்றிட அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கருத்துக்கள்

அம்பிகாபதிக்கும் தொடர் முயற்சியில் ஈடுபடும் தினமணிக்கும் பாராட்டுகள்.நாடோடி வாழ்க்கை நடத்தும் அனைத்துத் தரப்பார்க்கும் கல்வி நல்க வேண்டும். கல்லாத ஒருவனைக் காணின் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்கு மரம் அங்கே உண்டாம் என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வரியை நினைத்து ஆட்சி செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 5:33:00 PM
yes govt must provide food and education for this people they are also humans they are also the citizens of our nation so we must provide social & economic facilities to them .Great thanks for dinamani for their concern about this issue Samuel vimal raj Kuwait
By samuel
8/31/2010 3:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக