வியாழன், 2 செப்டம்பர், 2010

தோள் வலி உடையவன் நான்: முதல்வர் கருணாநிதி


கலைஞர் 87 நூலை, சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் புதன்கிழமை வெளியிட, அதனைப் பெற்றுக் கொள்கிறார் புதுவை முதல்வ
சென்னை, செப். 1: தோள் வலி உடையவன் நான் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். கருணாநிதியின் 87 வயதைக் குறிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் தமிழகத் தலைவர்கள் என 87 பேர் அவரைப் பற்றி தெரிவித்த கருத்துகள் கலைஞர் 87 என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி தொகுத்துள்ள அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாதமியில் புதன்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இந்த நூல் ஒரு அருமையான நூலாகும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், என்னுடைய நிரந்தரப் பகைவர்களும் இந்நூலில் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். இது எதிர்காலத்துக்கு பயன்படக் கூடிய ஒரு சிறந்த ஆவணமாகத் திகழ்கிறது. இவ்வாறு ஒரு நூலைத் தொகுத்து, தி.மு.க.வின் ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கிலான வசந்தி ஸ்டான்லியின் பணி போற்றத்தக்கது. அவர் இதன் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இந்த நூலின் கடைசி பக்கத்தில், அவரது ஆயுள் முடியும் நேரத்தில் விழியோரம் உருண்டோடும் ஒரு துளி கண்ணீர் என் பாதத்தை நனைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இது போன்ற வரிகளை நான் விரும்பக் கூடியவன் அல்ல. கண்ணீரை துடைப்பதுதான் தி.மு.க.வின் நோக்கமே தவிர, யாரையும் கண்ணீர் விடச் செய்வது அல்ல. தமிழ்நாட்டில் கண்ணீரைக் காணாமல் செய்வதுதான் தி.மு.க. அரசின் கொள்கை. தோள் வலி: எனக்கு கடந்த இரு நாள்களாக கடுமையான தோள் வலி. செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை எடுத்துக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் ஓய்வெடுத்த பிறகுதான் நான் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்று 3 மணி நேரம், 4 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர் எச்சரித்தார். மேலும் அவர் கூறும்போது, கவியரங்கம் என்றெல்லாம் கூறிக்கொண்டு பல மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களே, உங்களுக்குத் தெரியாத கவிதைகளையா அவர்கள் பாடுகிறார்கள், இவ்வாறு நீங்கள் கலந்து கொள்வது முறையா? என்றும் கேட்டார்.நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவை அந்தக் கவிதைகளில் இருப்பதால்தான் கலந்து கொள்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். எனக்கு ஒன்றும் பெரிய, பயங்கரமான நோய் எதுவும் இல்லை. வெறும் தோள் வலிதான். தோள் வலிக்கு இரண்டு பொருள் உண்டு. தோளில் வலியை ஏற்படுத்துவது என்பது ஒன்று. தோள் வலி உடையவன் என்றால் வீரன் என்ற மற்றொரு பொருளும் உண்டு. ஆம், நான் மிகுந்த தோள் வலி உடையவன். அதனால்தான் இவ்வளவு அல்லல்கள், ஆபத்துகள், சோதனைகளைத் தாங்கக்கூடிய வலிமை எனக்குக் கிடைத்திருக்கிறது’ என்றார் கருணாநிதி. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, நூலை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் க. அன்பழகன், இந்தியாவெங்கும் உள்ள பல தலைவர்களுக்கு வழிகாட்டும் தலைவராக கருணாநிதி திகழ்கிறார். இது அவரே தேடிக் கொண்ட வலிமை. அவரது உழைப்பால் கிடைத்த பெருமை என்றார். நூலைப் பெற்றுக் கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் வி. வைத்தியலிங்கம், முதல்வர் கருணாநிதியின் எழுத்துகள் மூட நம்பிக்கைகளை தகர்க்கும் ஆயுதமாக, வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்தெறியும் நெம்புகோலாக, சோர்ந்து போவோர்க்கு நம்பிக்கை தரும் ஊன்று கோலாக விளங்குகிறது என்றார். நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், கவிஞர் வைரமுத்து, முனைவர் இரா. செல்வகணபதி, ஜெயந்தி தங்கபாலு ஆகியோர் பேசினர். முன்னதாக தே. கருணாநிதி வரவேற்றார். நிறைவாக வசந்தி ஸ்டான்லி நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தோள்வலிமை மிக்கவர் கலைஞர் என்பதில் ஐயமில்லை. எனவே அவரைப்பற்றிய இந்நூல் தொகுப்பு பாராட்டிற்குரிய பணியே. அவரின் பன்முகச் சிறப்புகளைப் பலர் வாயிலாக அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரம் தம் குடும்பத்தினரின் விழியோரம் கண்ணீர் வரக்கூடாது என்பதற்காக ஈழத்தமிழர்கள் செந்நீர் குடிக்கப்படவும் உலகத்தமிழர்களின் கண்ணீர் பெருக்கெடுத்தோடவும் காரணமாக இருந்து விட்டாரே என்ற அவலத்தையும் நாம் மறக்க இயலாது. தம்முடைய வரிகளையே மீள நினைத்துப் பார்த்தார் என்றால் களங்கத்தைத் துடைக்கும் விதமாகச் செயல்பட்டுத் தமிழர் தாயகத்தை மலரவிட்டு உண்மையிலேயே உலகத் தமிழர்களின் கண்ணீர் துடைத்த பெருமகனாவார். 
குடும்பப்பற்றைத் துறந்து தமிழினப்பற்றை ஏற்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:45:00 AM
இவன் நல்லா பிள்ளையவும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறான் !!! அரசு வங்கியில கடன் வாங்கி கட்ட முடியாதவ MP ஆகி...இந்தப் புத்தகத்துல எப்படித்தான் எம்பி எம்பி குதிக்கிறாளோ ???...எதைத்தான் ஏப்பம் விட்டாளோ !!! இவன் கண்ணீரைத் துடைப்பவனாகத் தெரியவில்லை ! மக்கள் கண்ணீரைக் குடிப்பவனாகத் தெரிகிறது !!! @ rajasji
By rajasji
9/2/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
//////
தோள்வலிமை மிக்கவர் கலைஞர் என்பதில் ஐயமில்லை. எனவே அவரைப்பற்றிய இந்நூல் தொகுப்பு பாராட்டிற்குரிய பணியே. அவரின் பன்முகச் சிறப்புகளைப் பலர் வாயிலாக அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரம் தம் குடும்பத்தினரின் விழியோரம் கண்ணீர் வரக்கூடாது என்பதற்காக ஈழத்தமிழர்கள் செந்நீர் குடிக்கப்படவும் உலகத்தமிழர்களின் கண்ணீர் பெருக்கெடுத்தோடவும் காரணமாக இருந்து விட்டாரே என்ற அவலத்தையும் நாம் மறக்க இயலாது. தம்முடைய வரிகளையே மீள நினைத்துப் பார்த்தார் என்றால் களங்கத்தைத் துடைக்கும் விதமாகச் செயல்பட்டுத் தமிழர் தாயகத்தை மலரவிட்டு உண்மையிலேயே உலகத் தமிழர்களின் கண்ணீர் துடைத்த பெருமகனாவார்.
குடும்பப்பற்றைத் துறந்து தமிழினப்பற்றை ஏற்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:45:00 AM  ( கலைஞரின் அன்பனான என் கருத்தை ஏன் எடுத்தீரோ தினமணியாரே!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக