முதல்வர் திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகம்.
சென்னை, ஆக. 30: தினமணி-எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளின் நாகரிகமான முறையை எல்லாப் பத்திரிகைகளும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். சென்னை ராயப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: நேர்த்தியான இந்த வர்த்தக வளாகத்தைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கோயங்கா குடும்பத்தினர் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்கள்-இன்னும் சொல்லப் போனால் இந்தக் குடும்பத்தின் தலைவர் கோயங்காவையும் பழகி அறிந்திருந்தேன். நான் அனுபவ ரீதியாக உணர்ந்திருந்த குடும்பமாகும். அப்படிப்பட்ட குடும்பத்தின் வழித்தோன்றல்கள், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் உள்ளம் கவருகின்ற அளவுக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகத்தை அமைத்துள்ளனர். பெயருக்கேற்றாற்போல் அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து கட்டடத்தை முற்றாக முடிக்கின்ற வரையில் எக்ஸ்பிரஸ் வேகத்திலேயே நடத்தி அனைவருடைய வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோயங்கா குடும்பம்: சென்னை மாநகரத்தின் தேவைகள் நிரம்ப உள்ளன. அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில், கோயங்கா குடும்பத்தினரைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள், வாய்ப்பு கொண்டவர்கள், வசதி மிக்கவர்களாலேயே தான் இதைச் செய்ய முடியும். வசதியும், வாய்ப்பும் இருந்தாலும்கூட, இதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கில் யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும். கோயங்கா அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த காலம் முதல் அவரை நான் நன்றாக அறிவேன். அவரும் என்னை மிக நன்றாக அறிவார். தென்னிந்தியாவில் இருக்கின்ற வளாகங்கள் அனைத்தையும் விட பெரிய வளாகம் இதுதான் என்று கூறுகின்ற அளவுக்கு இது இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், ஓட்டல்கள் போன்ற பல வசதிகளோடு இது அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒத்துழைப்பு தருவோம்: சென்னை மாநகர மக்களுக்காக அருமையான திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியும், வசதி வாய்ப்புகளை மக்களுக்குத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடக்க விழா அமைந்திருக்கிறது. இந்த ஆரம்ப விழாவே அதற்கான அச்சாரமாக விளங்குகிறது. இந்த வளாகம் எழும்ப மாநகராட்சி, அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் ஒத்துழைப்பு தந்ததற்காக விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்னைக்கு வருகின்ற மக்களின் வசதி வாய்ப்புக்காக அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக-அவர்களுடைய உற்சாகத்துக்காக என்னென்ன வசதிகளைச் செய்து கொடுக்க முடியுமோ அவற்றை அரசின் சார்பில் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நாகரிகமான முறை: கோயங்கா பிகாரில் பிறந்தவர் என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். காமராஜர், பெரியார், அண்ணா போன்றோருடன் தொடர்பு கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருடன் நானும் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் நடத்திய பத்திரிகை நேர்மையான முறையில் எங்களைத் தாக்கக் கூடிய முறையிலே எழுதினாலும் எங்களைக் கண்டிக்கக் கூடிய வகையிலே எழுதினாலும் அதிலே ஒரு கண்ணியம், நாகரிகம் இருக்கும். அப்படிப்பட்ட நாகரிக எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்களான ஏ.என்.சிவராமன், சொக்கலிங்கம் போன்றோர்களைக் கொண்டு தினமணி, எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் நாகரிகமான முறையில் நடந்து கொண்டன. இதே முறையில் தொடர்ந்து தமிழகத்திலே உள்ள பத்திரிகைகள் எல்லாம் நடைபெறுமேயானால் அது கோயங்காவுக்கு காட்டுகின்ற மரியாதையாகும் என்றார் முதல்வர் கருணாநிதி.எக்ஸ்பிரஸ் அவென்யூ சாலை என பெயரிடுகமுதல்வருக்கு கோரிக்கை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் சாலைக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ சாலை எனப் பெயரிட வேண்டும் என எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் தலைவர் சரோஜ் கோயங்கா வேண்டுகோள் விடுத்தார். சென்னை ராயப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று அவர் பேசியது: தென்னிந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வர்த்தக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ விளங்குகிறது. அண்மைக்காலங்களாக சென்னை நகரம் பெரும் வளர்ச்சி பெற்று உருமாறியுள்ளது. இந்தச் சூழலில், எங்களது வர்த்தக வளாகம் நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும். சென்னைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கும். வர்த்தகம் மேற்கொள்வதற்கும், கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும், பொழுதைப் போக்கவும் தகுந்ததாக எக்ஸ்பிரஸ் அவென்யூ இருக்கும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் வர்த்தகம் செய்வதற்கான இடமாக விளங்கும். இந்தக் கட்டடம் பசுமைக் கட்டடமாக இருப்பதோடு, மாற்றுத் திறனாளிகளும் வந்து செல்ல வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கடின உழைப்புடன் இந்த வர்த்தக வளாகம் உருவாகியுள்ளது. இந்தக் கட்டடம் அமைந்துள்ள ஒயிட்ஸ் சாலைக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றார் சரோஜ் கோயங்கா.வளாகத்தில் என்னென்ன? எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகத்தை ஒரே நேரத்தில் 50 ஆயிரம் மக்கள் பயன்படுத்தலாம். வர்த்தக வளாகத்தின் மூன்று தளங்களில் சில்லறை வர்த்தகத்துக்கான இடம், வர்த்தக அலுவலகம் மற்றும் ஓட்டலுக்கான கட்டடம் உள்ளது. எட்டு லட்சம் சதுர அடி பரப்பிலான சில்லறை வர்த்தகப் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் தங்களது கடைகளை அமைத்துள்ளன. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் விற்பனைக்கு உள்ளன. 10 ஏக்கர் பரப்பு கொண்ட நிலப்பரப்பில் 3.57 ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டடம் அமைக்கப்பட்டு எஞ்சிய பகுதி திறந்த வெளியாக விடப்பட்டுள்ளது. எளிதாக நகர்ந்து செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 26 லிஃப்ட்கள், 34 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எட்டு திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 5:24:00 PM
8/31/2010 5:24:00 PM
By skumar
8/31/2010 3:28:00 PM
8/31/2010 3:28:00 PM
By MANI
8/31/2010 2:46:00 PM
8/31/2010 2:46:00 PM
By MAHESH
8/31/2010 1:24:00 PM
8/31/2010 1:24:00 PM
By Rajendran
8/31/2010 1:11:00 PM
8/31/2010 1:11:00 PM
By அயோத்தி ராமன்
8/31/2010 12:16:00 PM
8/31/2010 12:16:00 PM
By Anand
8/31/2010 10:56:00 AM
8/31/2010 10:56:00 AM
By Anand
8/31/2010 10:54:00 AM
8/31/2010 10:54:00 AM
By ponnusamy
8/31/2010 7:31:00 AM
8/31/2010 7:31:00 AM
By Nandhu
8/31/2010 7:21:00 AM
8/31/2010 7:21:00 AM
By KRISHNAN
8/31/2010 7:00:00 AM
8/31/2010 7:00:00 AM
By Mohamed Sultan, Jeddah
8/31/2010 5:39:00 AM
8/31/2010 5:39:00 AM
By deyes
8/31/2010 2:46:00 AM
8/31/2010 2:46:00 AM
By ahamed
8/31/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 8/31/2010 1:37:00 AM
DINAMANI IS DOING GOOD SERVICE TO THAMIL....
பதிலளிநீக்குADVOCATE.RAMA.RAAJENDHIRAN,KARUR.