ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

மக்களிடம் கனிவு காட்டுங்கள்: காவல் துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்


சென்னை, ஆக. 28: காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று காவல் துறையினரை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நிறைவடைந்தது. இரண்டாவது நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் முனைந்து செயல்பட்டு, குற்றங்கள் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மாநிலத்தில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் சாதி, மத பேதங்களைத் தூண்டிவிட்டுப் பூசல்களை ஏற்படுத்துவோர் மீதும், கள்ளச்சாராயம், போதை மருந்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.சொத்துகளை ஆக்கிரமித்தல், காலி செய்தல், ஆட்களைக் கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற மக்கள் பாதிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், எந்தவிதமான பாரபட்சமுமின்றித் தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கண்ணியமாக நடத்துங்கள்: பொது மக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்கள் அளிக்கும் புகார்களின் பேரில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். குற்றத்தடுப்பு செயல்களிலும், புலன் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளிலும் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி, தலைமறைவாக இருந்து வரும் எதிரிகளைத் தேடி உடனுக்குடன் கைது செய்திட வேண்டும்.குற்றங்கள் நிகழாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் வளர்ப்பதுடன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.மனிதாபிமானத்துடன் அணுகுதல்: மக்களின் பிரச்னைகளை காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். முதியோருக்கு இழைக்கப்படும் குற்றங்களை முற்றிலும் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கணினியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களைத் தடுத்து குற்றம் புரிந்தோர் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சாலைக் குறியீடுகள், போதிய விளக்கு வசதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு சாலைப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தீவிர கவனம் செலுத்திட வேண்டும்' என முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.இந்த மாநாட்டில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

நல்ல அறிவுரைகள்.இவற்றின் மூலம் இவ்வாறெல்லாம் இப்போது காவல்துறையினர் நடந்து கொள்ளவில்லை என முதல்வரே குற்றம் சுமத்துகிறார் என்பதைப் புரிந்து கொண்டு காவல்துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக ஆணைகளையே செயல்படுத்தாத காவல்துறையினர் அறிவுரைக்கா செவி மடுக்கப் போகிறார்கள்?சான்றாகக் குற்றம் எப்பகுதியில் நடந்தாலும் எந்தக் காவல்நிலையமாய் இருந்தாலும் பணி வரம்பில் இல்லை என மறுக்காமல் பொதுமக்கள் தரும் முறையீட்டை வாங்க வேண்டும் எனப் பன்முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த திங்கள் கும்பகோணம் சுவாமி மலைக்குச் சென்ற ஒருவரின் நகை பேருந்தில் பறிபோனது. ஆனால், காவல்நிலையங்கள் முறையீட்டைப் பெறவில்லை. இவ்வாறு நித்தம் நித்தம் வெவ்வேறு பகுதிகளில் நடந்து கொண்டுதான் உள்ளது. இவ்வாறில்லாமல் அறிவுரைகளைப் பின்பற்றி மக்கள் தொண்டாற்றி நற்பெயர் எடுக்கக் காவல்துறையினருக்கு வேண்டுகோள். ஆளும் கட்சியினரும் காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் மனித நேயத்துடன் நடத்த வேண்டும். 
காவல்துறை மக்கள் நண்பனாக விளங்க வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 2:55:00 AM
அரசியல்வாதிக்கு சலாம் போடும் காவல்துறைனர்கள் இருக்கும் வரை மக்களுக்கு நீதி கிடைப்பது சந்தேகமே. முதலில் காவல்துறைனர் மக்களை மதிக்க தெரிந்து கொள்ளடும்.அபோதுதான் கலைஞர் அவர்கள் ஆசை நிறைவேறும். செய்வார்களா?
By syed -riyadh
8/29/2010 1:12:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக