புது தில்லி, ஆக. 31: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கையில் கிருஷ்ணா இவ்வாறு கூறினார்.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக தரப்பிலும், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலும் ஒருமித்த குரலில் மக்களவையில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.மக்களவையில் இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை கொண்டு வந்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:1974-ல் கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, மீன் பிடிப்பதும், கடல் எல்லையில் தங்களுக்கு உள்ள உரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது என அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் கூறினார்.அந்த ஒப்பந்தத்தின்படி கச்சத் தீவு இலங்கையின் எல்லைக்குள் இருந்தாலும், இந்திய மீனவர்கள் அங்கு ஓய்வு எடுக்கவும், சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது தங்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.ஆனால், 1976-ல் இருநாட்டு செயலர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை மாறிவிட்டது.நாடாளுமன்றம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே அந்தக் கடிதங்கள் ஒப்பந்தத்தின் அங்கமாகிவிட்டன. இது மீனவர்களுக்கு பேரிடியாக அமைந்தது.எனவே கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து இந்திய மீனவர்களைக் காக்க இந்திய கடற்படையின் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்றார் பாலு.இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் மு.தம்பிதுரை பேசியதாவது: இலங்கை கடற்படையால் இதுவரை 500 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் பேரைக் காணவில்லை.இலங்கையுடன் ஒத்துழைப்பு வேண்டும் என்பதற்காக நமது மீனவர்களின் நலன்களை இந்தியா புறக்கணிக்கக் கூடாது.இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களிடையே உள்ள உறவைத் துண்டிப்பதற்காகவே திட்டமிட்டு இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.எனவே, கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வெறும் "கடிதம் எழுதுவதால்' மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றார் தம்பிதுரை.அவர் இவ்வாறு கூறியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சிகளின் உறுப்பினர்களும் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இத் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத் துறை எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:இரு அரசுகளும் முறையாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை நட்பு நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுபோன்ற பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்காகவே வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்றுள்ளார்.அக்டோபரில் நான் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளேன். அப்போது மீனவர் பிரச்னை குறித்து மேலும் விவாதிக்கப்படும்.மீன்பிடிப்பது தொடர்பாக 2008 அக்டோபரில் இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்குப் பின் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது பெருமளவு குறைந்திருக்கிறது.2008-ல் 1,456 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 2009-ல் அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜூலை வரை 26 மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் "அதீத ஆர்வம்' குறித்து இந்தியா கண்காணித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிருஷ்ணா.கச்சத் தீவு தொடர்பாக எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலால் திருப்தி அடையாத அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். டி.ஆர்.பாலு கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தார். இந்நிலையில், விவாதத்தை இத்துடன் முடிப்பதாக அறிவித்து அடுத்த அலுவலுக்கு மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 5:16:00 AM
9/1/2010 5:16:00 AM
By இளந்தமிழ்
9/1/2010 3:37:00 AM
9/1/2010 3:37:00 AM
By rajasji
9/1/2010 3:18:00 AM
9/1/2010 3:18:00 AM
By Tamilan In Qatar
9/1/2010 12:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/1/2010 12:21:00 AM