புதன், 10 ஜூன், 2009


இலங்கைத் தமிழர் படுகொலையை இந்தியா வேடிக்கைப் பார்த்தது: மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் உரை
தினமணி


சென்னை, ஜூன் 9: இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, திங்கள்கிழமை அவர் பேசியது: 1940-ல் ஜெர்மனியில் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இறுதியாக ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இப்போது இலங்கைத் தீவில் போர் நடைபெறாத பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் படுகொலையை உலகமே கண்டித்தது. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்கள் படுகொலையை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாக பெருமைப்படுகின்ற நாம்; பல்வேறு மதங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமை வழங்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிவிட்டோம். இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து, பொருள்களை இழந்து, நோய்வாய்ப்பட்டு, உடல் ஊனமுற்று தவிக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.சேது கால்வாய்: சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக் கூடியது சேது கால்வாய் திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு ராமரின் பெயரால் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இந்த திட்டம் நிறைவேற வேண்டும் என எண்ணுகிற தமிழ்நாட்டு ராம பக்தர்கள் வேதனை அடைவார்கள். மத்திய அரசு இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு வழங்கியாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கூட்டணி அரசியலே சிறந்தது: எந்த ஒரு கட்சியும் இந்திய அரசியலில் இனி தனித்து செயல்பட முடியாது என்பதை கடந்த 13 ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். இந்தியாவில் இனி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரிக் கூட்டணி என கூட்டணி அரசியல்தான் அமையும். அதன் மூலம்தான் மத்தியில் நிலையான ஆட்சியையும், பல்வேறு மாநிலங்களில் முறையான வளர்ச்சியையும் நாம் பெற முடியும். கடந்த 3-ம் தேதி தனது பிறந்த நாளின்போது, மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும் என்றார் இளங்கோவன்.

தத்துவ மேதை திரு டி.கே.சீனிவாசன் அவர்களின் திருமகனார். தன் முதல் உரையிலேயே (கன்னிப பேச்சில்) ஈழத் தமிழர் படுகொலையை உலகம் வேடிக்கை பார்த்ததைத் துணிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார. பாராட்டுகள்! ஆனால், இந்தியா வேடிக்கை பார்க்கவில்லை. இந்தியாவிற்காகத்தான் இப்போரை நடததியதாகவும் இந்தியாவின் நட்புறவைப் பெற விடுதலைப் புலிகளைக் கொன் றதாகவும் சிங்கள அரசு சொல்லி வருகிறது. அப்படியாயின் காங்.கின் படுகொலைகளின் பொழுது தேர்தல் ஆதாயங்களுக்காகத் திமுகவும் வேடிக்கை பார்த்தது என்பது உண்மையாகிறது. எனவே, தன் கட்சித் தலைவரிடம் இனியாவது மனம் மாறி, காங்.கை நல்வழிப்படுத்தவும் கட்சி உறுபபினர்களைக் கொண்டு ஈழத் தமிழர் துயரங்கள் தொலைய ஒரே தீர்வு தமிழ் ஈழமே என வலியுறுத்திப் பேசச் செய்யவும் ஆவன செய்வாராக! கழக உறுப்பினர்கள் எண்ணம் தமிழ் ஈழத்தின்பால் இருக்கையில் தலைமை தடுமாற வேண்டா என வலியுறுத்திக் கட்சித் தலைமையையும் அதன வழி காங். தலைமையையும் மனம் மாற்ற வேண்டுகிறேன். தமிழ் ஈழம் வெல்க ! இந்திய - ஈழ நட்புறவு மலர்க!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 4:29:00 AM

because congress dont give what this stubid [dmk] want

By குப்பு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக