சனி, 13 ஜூன், 2009


இன்று: சனிக் கிழமை, ஜுன் 13, 2009
ஆற்றுகை செய்வோம் ஆறுதல் செய்வோம்
பிரசுரித்த திகதி : 12 Jun 2009

ஈழத்தமிழ் சமூகம் சொற்களில் அடங்காத சோகத்தினுள் கட்டுண்டு கிடக்கின்றது.இன்றைய காலம் ஏற்படுத்தியுள்ள காயங்கள் மொழிகளால் கட்டிட முடியாத துயர காவியமாகிவிட்டது.

மாவிலாறுவில் தொடங்கிய இன்றைய வரலாற்றின் 'இறுதிப்போர்| முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தபோது நாங்கள் இழந்தவை அளந்திட முடியாதவையாகிவிட்டது. பல்லாயிரமாக கணிக்கப்படும் உயிரிழப்புக்களும் - மழையெனப் பொழிந்த எறிகணைகள் ஏற்படுத்திய ஊனங்களும் முன்பு என்றுமே நிகழ்ந்ததில்லையென்றாகிவிட்டது. இந்தப் போரில் தமிழர் தரப்பின் தலைமை இட்டுநிரப்பிட முடியாத இடைவெளிகளைப் பெற்றுவிட்டது. பல்லாயிரம் வீரமும், அர்ப்பணிப்பும் நிரம்பிய இளைஞர்களும், இளைஞிகளும் பெரும் தற்காப்புப் போரினை இறுதிவரை நிகழ்த்தி ஆகுதியாகிப் போயினர்.

இந்தப் போர்ப்பயணத்தின் முடிவில் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக சுமார் மூன்று இலட்சம் வன்னித்தமிழ் மக்கள் முட்கம்பிகளாலும் - சிறீலங்காப் படைகளாலும் சுற்றி வளைக்கப்பட்ட இருண்ட கண்டத்தினுள் 'வனவாசம்| போக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். காணமல் போவதும், உணவுக்காக காத்திருப்பதுவும், போசாக்கின்மையால் வாடுவதும், கவனிப்பாரற்று இறப்பதுவும் தினசரி பதிவாகிவிட்டது.

மறுபுறம், விடுதலைக்காக போராட முன்னின்ற தலைமுறையொன்று சிறீலங்காப்படைகளின் விசாரணைக் கூடங்களில் எதுவித சர்வதேச சட்ட நியதிகளுக்கும் அகப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்படுகின்றனரோ - தினசரி வதைக்கப்படுகின்றனரோ என்கின்ற அச்சம் தமிழ்சமூகத்தின் பொதுமனவோட்டத்தில் விரக்தியினை ஏற்படுத்துகின்றது.

திருமலையிலும், மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் தமிழ் மக்கள் வாழ்வின் முகத்தினை தினசரி காணமல் போவோர் பட்டியலும், இடம்பெயர்ந்தவர் முகாம்களில் வாடும் தமிழர் கணக்கீடுகளும், அபிவிருத்தித்திட்டங்கள் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்களும் பதிவு செய்கின்றன.

யாழ். குடா நாடு துப்பாக்கி முனையில் மௌனமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறி கரிசனை கொள்வோர் காணமல் போவார்கள் அல்லது ஏதாவது ஒரு வயற்பரப்பில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுவார்கள்.

எங்கள் வாழ்வு இப்படியாகியது...

இந்த இழப்புக்களினால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்.

எங்கள்தேசியக் கனவு இடியுண்டு போவதால் மீளவே முடியாதோ என்கின்ற அங்கலாய்ப்புடன் ஒவ்வொரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழனும் ஏக்கத்தினுள் வாழ்கின்றனர். இந்தக் காலத்தினுள் வாழ்வதும், எஞ்சிய காலத்தினை வாழ்ந்து முடிப்பதுவும் எங்களுக்கு சபிக்கப்பட்டதாக ஏங்கிப் போயுள்ளனர்.

இந்த ஒடுக்குமுறையின் கனத்தினால் விழிபிதுங்கி நிற்கும் எமக்கு - புலம்பெயர்ந்த மக்களிற்கு - ஆற்றுகைப்படல் தவிர்க்க முடியாத நியதியாகிவிட்டது. ஏனெனில், அடுத்த கட்டப் பயணத்திற்கு தயார்ப்படுவது எமக்கு விதிக்கப்பட்ட வாழ்வாகிவிட்டது.



திரும்பி வரலாறுகளைப் பார்ப்போம்.

காலம்காலமாகவே உலக வரலாற்றின் இயக்கம் சுமக்க முடியாத வேதனைகளையும், இழப்புக்களையும், சுமைகளை மக்கள் சமூகங்கள் மீது சுமத்தியுள்ளது. ஐரோப்பிய சமூகங்கள் உலகப் போர்களின் போது லட்சோபலடசம் உயிர்களைப் பலிகொடுத்து தனது இருப்பையும், விடுதலையையும் பாதுகாத்துள்ளது. அமெரிக்கா தனது இருப்புக்காக பல்லாயிரம் உயிர்களை அர்ப்பணித்து போரடியுள்ளது. சீனாவும், வியட்நாமும், ருஸ்சியாவும் பல இலட்சம் மக்களின் உயரிழிப்புக்களையும், துயர்களை சுமந்த போதும் தொடர்ந்து பயணித்து தங்கள் வாழ்வினை மீட்டெடுத்தன. உலக வரலாறு யூதர்களிற்கு ஹிட்லர் படை இழைத்த கொடூரத்தினை விரிவாகப் பதிவு செய்கின்றது. நாங்கள் வாழும் மேற்குலக நாடுகளில் அந்தப் பதிவுகள் தெருக்கற்களாக, கண்காட்சியகங்களாக, நூலகங்களாக எனப்பலவாறும் பிரதிபலிக்கப்படுகின்றது. இந்த இழப்பின் மத்தியில் உயிர்த்த இஸ்ரேல் வளமும், வாய்ப்பும் மிக்க நவீன நாடாக அமைவுபெறுகின்றது.

இந்த வரலாறுகள் அனைத்தும் பொதுவில் புலப்படுத்துவது என்னவெனில்.....

இழப்பின் சுமையில் வீழ்ந்து - அடிபணிந்து விடாது வாழ்வினை அதன் அனைத்து வசந்தங்களுடனும் மீளநினைப்பதுவும், அதனை நோக்கி இயங்குவதும் எதிர்காலத்திற்கான வரலாற்றுப் பணியாகும். ஏனெனில் அதுவே எங்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் நாங்கள் ஈட்டிக்கொடுக்கப்போகும் பெருஞ்செல்வமாகும்.


பரந்துபட்ட புலத்துத்தமிழ் சமூகம் தனது இடிபாடுகளிலிருந்து மீள எழுந்து நிற்பதற்கான மனவலுவானது அதனது கூட்டுச்செயற்பாடுகள் மூலமே ஈட்டப்படும். அது எங்கள் விழிவழியே வழியும் கண்ணீரை பரஸ்பரம் துடைத்து, அந்தக் கரங்களை ஒன்றாக இணைத்து இயங்கத் தொடங்குவோம். அந்தக் இணைவு நெஞ்சினில் வலுவினையும், தேசிய வாழ்விற்கான நம்பிக்கையினையும் தந்திடும்.

தமிழர் விளையாட்டுவிழா என்பது கடந்த ஒரு தசாப்த காலமாக பிரான்சு வாழ் தமிழ் சமூகம் கூட்டாக சேர்ந்து தனது அடையாளங்களை விளையாட்டுக்களில், உணவில், நிகழ்வுகளில் பகிரும் பிரமாண்டமான நிகழ்வாக உருப்பெற்றது. பிரான்சு வாழ் ஈழத்தமிழ் தலைமுறைக்கு இடையேயான பராம்பரிய தொடர்ச்சிகளை நிலைநிறுத்தும் எண்ணங்களைக் கொண்டதொரு பெருநிகழ்வாக வடிவமைக்கப்பட்டது.

இம்முறை அது வரலாற்றின் மற்றுமொரு பணியினை செய்கின்றது.

வேதனையால் உடைந்துபோயுள்ள எங்கள் சமூகத்தினை ஒன்றுதிரட்டி ஆற்றுகைப்படுத்தும் பெரும்பணியில் இயங்குகின்றது. ஒன்றுதிரள்வதற்கும், அதன் அரவணைப்பில் நம்பிக்கைபெறுவதும் தமிழர் விளையாட்டுவிழா ௨009ன் பொறுப்பாகின்றது.

வாருங்கள்!

வாழ்வினை மீளகட்டியெழுப்பிடும் மூச்சு செய்வோம்!.

11.06.2009

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக