புதன், 10 ஜூன், 2009

ஜூன் 10,2009,00:00 IST




ஊட்டி: ஊட்டி அருகேவுள்ள இத்தலார், செம்மனத்தம் ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட, பெருங்கற்காலத்தை சேர்ந்த சுடுமண் சிற்பங்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.



நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது, பழங்கால மனிதர்களின் கலாசார மற்றும் பண்பாடு குறித்து பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால புதைகுழிகளை, கடந்த 1873ம் ஆண்டு அப்போதைய நீலகிரியின் கமிஷனராக இருந்த ஜெ.டபிள்யூ.பிரீக்ஸ் என்பவர் அகழாய்வின் மூலம் கண்டுபிடித்தார். அதில், அக்காலத்தை சேர்ந்த மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் சுடுமண் சிற்பங்கள், அடுக்கு சட்டிகள் போன்ற கலை பொருட்களை சேகரித்தார். இதன் மூலம், இம்மாவட்டத்தில் உள்ள பெருங்கற்காலத்தின் சுவடுகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும், கலை நயத்தையும் வெளி உலகுக்கு கொண்டு வந்தார்.



இதை தொடர்ந்து, பல வெளிநாட்டினர் மட்டுமல்லாமல், உள்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறையினரும் இம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று பொக்கிஷங்களை கண்டுபிடித்து, பல ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டனர். நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, இத்தலார் உட்பட பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையில் ஆர்வம் மிக்க ஊட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வில், பல சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில், இத்தலார் பகுதியில் உள்ள கிணறு வடிவ பெருங்கற்கால புதை குழியின் சுற்றுப்புறப் பகுதியில் சிதறி கிடந்த யானை உருவம், உடைந்த தும்பிக்கை, கால் பகுதிகள் ஆகியவை கிடைத்தன. மசினகுடி பகுதியில் உள்ள செம்மனத்தம் அருகே காணப்பட்ட புதைகுழியின் அருகில் சிறிய அளவிலான சிகப்பு சுடுமண் சட்டிகள் மற்றும் உடைந்த நிலையிலான கருப்பு மற்றும் சிகப்பு சட்டிகளின் பாகங்கள், பல்வேறு விலங்கினங்களின் உடல் பகுதிகளின் சிற்பங்கள் கிடைத்துள்ளன.



இதுகுறித்து, ரவிச்சந்திரன் கூறியதாவது: பெருங்கற்காலம் என்பது கி.மு.,100 முதல் கி.பி., 100 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம். இதுபோன்ற காலத்தில், நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்று ஆதாரங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக,வனப்பகுதிகளிலும், விவசாய நிலப்பகுதிகளிலும், இதுபோன்ற சுடுமண் சிற்பங்கள் காணப்படுகின்றன.இந்த சிற்பங்களின் முக்கியத்துவம் அறியாத சில விவசாய மக்கள், நிலத்தை பண்படுத்தும்போது இவற்றை உடைத்து எறிந்து விடுகின்றனர். இதுபோன்ற வரலாற்று சுவடுகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக