செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழர்க்கு விருது தமிழில் அல்ல..!



தமிழர்க்கு விருது தமிழில் அல்ல..!
தில்லியில் அரங்கேறிய அவலம்
-  ஆரா

  தேசிய வளர்ச்சி சபைக் கூட்டத்தில் தாமும் தமிழ்நாடும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார் தமிழக முதல்வர் செயலலிதா. இப்படித் தமிழ் நாட்டை அவமதித்த மத்திய அரசு, சில நாட்களுக்கு முன் தமிழையும் அவமானப்படுத்தியது.
  அது குடியரசுத் தலைவர் மாளிகையில்.
 உலகின் மூத்த மொழி என்றும் மொழிகளுக்கெல்லாம்  தாய் என்றும் உயர்தனிச் செம்மொழி என்றும் போற்றப்படுவது தமிழ் மொழி.  செம்மொழித் தமிழின் இளம் அறிஞர்களுக்கான விருதுகள் திசம்பர் 21-ஆம் நாள் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்சியால்  அவரது மாளிகையில் வழங்கப்பட்டது.
  விருது வழங்குவது தமிழ் அறிஞர்களைப் போற்றுவதற்காக! விழா நடந்ததோ தமிழுக்கு அயலான இந்தி மொழியில்!  விருதுவாங்கும்  தமிழறிஞர்களுக்குத் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? என்னவாறு பாராட்டி விருது வழங்குகிறார்கள்?  என்றெல்லாம் தெரியாது. விருது உரை, அழைப்புரை, தொகுப்புரை, என எல்லாமே இந்தி! இந்தி! இந்திதான்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலர்கள் தமிழில் அறிவிக்க வேண்டியும், ஆங்கிலத்திலாவது அறிவிக்க மன்றாடியும்  புறக்கணித்து இந்தியில்மட்டும்தான் எல்லாம் எனத் தமிழறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது.
  இதுபற்றித் தமிழர்கள் மத்தியில் கோபமும் குமுறலும் நிலவிவந்த நிலையில் நாம் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.

  மத்திய அரசிற்கு  மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு  இல்லை.  ஆனால்,  இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு  உள்ளது.  மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
 முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தம் கெழுதகை நண்பர் எனப் போற்றி குடியரசுத் தலைவராக முதன்முதலில் ஆதரவு கொடுத்தாரே அந்தப் பிரணாப் முகர்சி பணியேற்றதும்  பணியேற்றதும் இனி எல்லாம்  இந்தியில்மட்டும்தான் நடக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு விட்டாராம்! எனவேதான், தமிழ் விழாவிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாம்! இந்தியிலும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பின் ஏற்றிருக்கலாம்.  ஆனால், இந்தியில்மட்டும்தான் எல்லாம் என்பதும் தமிழ் முதலான பிற தேசிய மொழிகள் புறக்கணிக்கப்படுவதும் ஆணவப்போக்கா? அலட்சியப்போக்கா? மமதைப்போக்கா?  பிரிவினைக்கு  வழிவிடும் அஞ்சத்தக்கப் போக்கா?

ஆரவார முழக்கங்களில்  மகிழ்ச்சி காணும் தமிழர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்ற எண்ணமா?  எதிர்ப்பு வந்தாலும உடனே  அடங்கிவிடும் என்ற அஞ்சாமையா?

ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்
சாக இந்தியா என்றுசாற்றிடுவோம்
என்ற பாவேந்தரின் பாடலைக்கூறி உணர்ச்சியூட்டிய  முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பரின்  செயல்பாட்டால்தான் தமிழுக்கு மேடைவாய்ப்பு மறுப்பும்  இந்திக்கு மேடையேற்றமும் நடந்தேறியிருக்கிறது. அவர்,  தம் நண்பரிடம் கூறி உடனே இப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழினப் படுகொலையின்பொழுது வாய்மூடி அமைதியாக இருந்ததன் தவற்றை உணர்ந்தவர்கள் சீறி எழ வேண்டிய நேரம் இது என்று கொதித்தவர் கோபத்தோடு தொடர்ந்தார்.
  இங்கே மற்றோர் அவலத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது. இளம் அறிஞர்கள் ஐவருக்கு விருதுகள் வழங்க வேண்டும். ஆனால், நால்வருக்கு மட்டும்தான்  வழங்கப்பட்டன. ஏன்?  நால்வர் மட்டும்தான் தகுதி வாய்ந்தவர்களாம். எட்டுக்கோடியை எட்டிப்பிடிக்கும் தமிழக மக்கள் தொகையில் இளம் தமிழறிஞர் யாருமில்லை என்பது  நமக்கும் இழிவு! தமிழுக்கும் இழிவு! இவ்வாறு சொன்னவர் யார்?  எப்பொழுது?
   தமிழாய்ந்த தமிழறிஞர் முதல்வர் என்ற முறையில் செம்மொழி நிறுவனத்தின் தலைவராக இருந்தபொழுது நால்வர் மட்டுமே தகுதியானவர் என்று நால்வரை மட்டுமே பரிந்துரைத்ததால்தான் இந்த நிலை. ஒரு வகையில் தகுதியில்லாதவருக்கு விருது வழங்கப்படக்கூடாது என்ற இந்த   எண்ணம் பாராட்டிற்குரியது.  ஆனால்,  என்ன செய்திருக்க வேண்டும்? விருதுபற்றிப் பரவலாக விளம்பரப்படுத்தி இருக்க வேண்டாவா? அவ்வாறு செய்யாமல் விருதுக்குரிய இளந்தமிழறிஞர்கள் இல்லை என அறிவிப்பது  மானக்கேடல்லவா?
  இளம்அறிஞர் விருதுகள்  நால்வருக்கேனும் வழங்கப்பட்டன. ஆனால்,  வாழ்நாள் முழுமைக்குமான  ஆண்டுதோறும் உருபாய் 50,000  வழங்கப்பெறும் மூத்த அறிஞர்களுக்கான விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. நம்மை விட்டால் தமிழறிஞர் யாருமில்லை என ஒவ்வொருவரும் எண்ணினால் தமிழறிஞர்களைப் போற்றுவது எங்ஙனம்? தமிழை வாழ வைப்பது எங்ஙனம்?
  ஆண்டுதோறும் 15 சமசுகிருத அறிஞர்களுக்கும் அரபி, பெர்சியன், பாலி, பிராகிருத அறிஞர்களுக்கும் வழங்கப்பெறும் மூத்த  அறிஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படாமை தமிழுக்கான தலைக்குனிவன்றோ!  மூத்த தமிழறிஞர்களுக்கான செம்மொழி விருது வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டும் இதுவரை யாருக்கும் வழங்க எந்நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நமக்கு இழப்பு மட்டும் அல்ல!  இழிவுமாகும்! 2004 ஆம் ஆண்டில் தமிழின் செம்மொழிச்சிறப்பை உணர்ந்து அறிந்தேற்பு வழங்கப்பட்டது.  எனவே,  அந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 15 தமிழறிஞர்கள் மூத்த தமிழறிஞர்கள்  விருதுகள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன் தலைவர் என்ற பொறுப்பு முதல்வருக்குத்தான் உள்ளது. அவரின் இன்றியமையாக் கடமைகளில் செம்மொழி நிறுவனத் தலைவருக்கான பணியை நிறைவேற்றுவதும் ஒன்று என்பதை அவரது அலுவலகத்தினர் உணர வேண்டும். எனவே, அனைத்து விவரங்களையும் அளித்து இச்செம்மொழி நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வகை செய்ய வேண்டும். தமிழறிஞர்களே இயக்குநராகவும் பிற பொறுப்பில் உள்ளவர்களாகவும் பிற குழுக்களில் உள்ளவர்களாகவும் அணி செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
  மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மூலம் நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தமிழில் பேசும் உரிமையைப்பெற்றுத் தர வேண்டும் எனச் செப்டம்பர் 15, 200 அன்று வருந்திச் சீறிய இந்நாள் முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் நண்பர்கள் மூலம் குடியரசுத்தலைவர் மாளிகையில் தமிழ்த்தாய் அவமானப்படுத்தப்பட்டிருப்பதற்கு வருத்தம் தெரிவிக்கச் செய்ய வேண்டும். தமிழ், தனக்குரிய இடத்தைப்பெற உறுதி பெற வேண்டும் என்று உணர்ச்சிக் கொந்தளிப்போடு  முடித்தார்.
நன்றி : தமிழக அரசியல் நாள் 02.01.2013 பக்கங்கள் 26-27


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக