வியாழன், 3 ஜனவரி, 2013

மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே இராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
இ ராமேசுவரம், சன. 3-
 
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.
 
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 500 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.
 
அப்போது சிறிய ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது என்று கூறி தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். படகுகளில் ஏறி அவர்களை மிரட்டினர்.
 
மேலும் கரைக்கு உடனே திரும்பி செல்லுங்கள், இல்லை என்றால் சிறைபிடித்து செல்வோம் என்று மீனவர்களிடம் மிரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு பெருத்த ஏமாற்றத்துடன் மீன்களை பிடிக்காமல் கரைக்கு திரும்பினர்.
 
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
 
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த எங்களை இலங்கை கடற்படையினர் மிரட்டி, தரக்குறைவாக பேசி உடனே கரைக்கு செல்லுங்கள் என்று எச்சரித்தனர். எனவே நாங்கள் மீன் பிடிக்காமல் வெறுங்கையுடன் திரும்பிவிட்டோம்.
 
ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் எங்களை தாக்குவதும், மீன் பிடிக்கவிடாமல் தடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
 
இந்த அவல நிலையை போக்க மத்திய- மாநில அரசுகள் மவுனம் கலைத்து உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக