வியாழன், 3 ஜனவரி, 2013

திருவள்ளுவர் சிலையைக் காக்கப் போராட்டம் : கருணாநிதி

திருவள்ளுவர் சிலையை க் காக்க ப் போராட்டம் : கருணாநிதி

First Published : 02 January 2013 02:38 PM IST

கன்னியாக்குமரியில் திருவள்ளுவர் சிலையை காக்க போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி : குமரி முனையிலே உள்ள திருவள்ளுவரின் சிலையினை இந்த அரசு சரியாகப் பராமரிப்பதில்லை என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?
கருணாநிதி : அதற்காக ஒரு போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் சிலையை மாத்திரமல்ல. சென்னை மாநகரில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் திட்டமிட்டுப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் நேரில் சென்று பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். அங்கே அமர்ந்து படிப்பவர்களுக்கு எந்த வசதியும் இல்லையாம். கழிவறைகளும் அசிங்கமாக இருக்கிறதாம், புத்தகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறதாம்.
கேள்வி : தமிழகத்தில் தொடர்ந்து 16 மணி நேரம், 18 மணி நேரம் என்று மின் வெட்டு நீடித்துக் கொண்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து மடிகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் முதலமைச்சர் கொடநாட்டில் பல நாட்கள் தங்குகிறாரே?
கருணாநிதி : கொடநாட்டில் தங்கி அரசுப் பணிகளை ஆற்றுவது அவருடைய திறமையையும், தமிழ்நாட்டு மக்களின் பொறுமையையும் பொறுத்தது.
கேள்வி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் உங்களைப் பற்றிப் பேசியதற்கு நீங்கள் விளக்கமாகப் பதில் அளித்திருந்தீர்கள். அதற்குப் பிறகும் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் திரும்பவும் அதையே கேட்டிருக்கிறாரே?
கருணாநிதி : அவர் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் அவர் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும். இளம் பிராயத்திலிருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அந்தக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவன் என்றும் பல முறை சொல்லியிருக்கிறேன். ராமகிருஷ்ணனுக்கு உண்மையான கம்யூனிஸ்ட்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
கேள்வி : வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. நாற்பது இடங்களிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே? தி.மு.க. வின் நிலை என்ன?
கருணாநிதி : நானாக தன்னிச்சையாக பதில் அளிக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் 6ஆம் தேதியன்று மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. அதிலும் அதற்குப் பிறகும் செயற்குழு, பொதுக் குழு கூடி தேர்தல் வியூகங்களை வகுத்து அறிவிக்கும் என்ற பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக