"மாதவிடாய்'க்கு ப் பயப்பட வேண்டாம்!
ஆண், பெண் இருவரிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, "மாதவிடாய்'
என்ற ஆவணப் படம் தயாரித்த, கீதா இளங்கோவன்: "மாதவிடாய்' (ஆண்களுக்கான
பெண்களின் படம்) என்ற ஆவணப் படம், ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும்
புரியும். வளர்ச்சி அடைய வேண்டிய ஓர் உயிர், அதன் பலன் இல்லாமல், உடலில்
இருந்து வெளியேறுவதே மாதவிடாய்; இதை, அனைவரும், எளிதில் அறியும் படி,
இப்படத்தை தயாரித்துஇருக்கிறேன். மாதவிடாய் நேரத்தில் துணிகள்,
நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும்; அகற்ற வேண்டும் என,
சொல்லியிருக்கிறேன். மாதவிலக்கின் ரத்த போக்கு, தீட்டோ, அழுக்கோ அல்ல;
மாதவிடாய் நிகழ்வு அசிங்கமானதல்ல என்பதை, ஆணித்தரமாகக் கூறிஇருக்கிறேன்.
பள்ளி மாணவியரிடமும், பணிபுரியும் பெண்களிடமும், மாதவிடாய் குறித்து கேள்வி
கேட்டு, பெண்களின் மீதான அடக்கு முறையையும், ஒதுக்கப்படும் அவல
நிலையையும், வாக்குமூலமாகவே பதிலாக பெற்று, ஆவணப்பதிவு செய்திருக்கிறேன்.
பொது இடமான கோவிலுக்குள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் செல்வதில்,
சட்டரீதியாக பிரச்னை இல்லை என்றாலும், மத நம்பிக்கையால் சில உரிமைகள்
தடைசெய்யப்படுகின்றன. அணியும் ஆடைகளில், "கறை' என்று மற்றவர்கள் சொல்ல,
அதனால் ஏற்படும் மன உளைச்சல், கொலை புரிந்ததற்கான குற்ற உணர்வை
ஏற்படுத்துகிறது. மொத்தம், 38 நிமிடங்கள் ஓடக் கூடிய ஆவணப் படத்தை, லாப
நோக்கில், டி.வி.டி.,யில் விற்காமல், 50 முதல், 100 நபர்கள் கூடும்
இடங்களில், இலவசமாக திரையிட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும், இச்செய்தி
சேர வேண்டும் என்பதே, என் நோக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக