சனி, 12 மார்ச், 2011

Tsunami in Japan: ஜப்பானில் சுனாமி: 1000 பேர் சாவு

ஜப்பானில் சுனாமி: 1000 பேர் சாவு

First Published : 12 Mar 2011 01:46:48 AM IST


மியாகி மாகாணம் நடோரியில் சுனாமியின் சீற்றம்.
டோக்கியோ, மார்ச் 11: ஜப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தலைநகர் டோக்கியோவின் வடமேற்குப் பகுதியில் சுமார் 400 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8.9 அலகுகளாகப் பதிவானது. 33 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கார்கள், பஸ்கள், ரயில், வீடுகள் என ஒரு நகரையே கடல் நீர் அடித்துச் சென்றுவிட்டது.கடலோரப் பகுதிகளில் மின்சாரமும் தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. மியாகி மாநிலத்தில் உள்ள செண்டாய் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானங்களையும், கார்களையும் கடல்நீர் அடித்துச் சென்றது.நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை ஒன்றிலும் கட்டுக்கடங்காமல் தீ எரிந்து கொண்டிருக்கிறது.செண்டாய் நகரின் ஒரு பகுதியில் மட்டும் 200 முதல் 300 உடல்கள் கிடைத்திருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.அணுமின் நிலையம் எரிந்தது:கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவதாகவும், இதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஜப்பான் அரசு மறுத்திருக்கிறது. கதிர்வீச்சு ஆபத்தில்லை என சர்வதேச அணுசக்தி முகமையும் அறிவித்தது.ஆனால், ஃபுகுஷிமா பகுதியில் உள்ள மற்றொரு அணு உலையில் குறைந்த அளவு கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.அணை உடைந்தது:ஃபுகுஷிமா பகுதியில் உள்ள அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டதாக கியோடா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 1800 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை:ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, கனடா, சிலி, பிலிப்பின்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஆழிப் பேரலை கடலோரப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.அமெரிக்காவில்...ஜப்பானை அடுத்து அமெரிக்காவையும் சுனாமி தாக்கியது. கலிபோர்னியாவில் உள்ள ஓரிகன் பகுதியில் 7 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அந்தப் பகுதியிலிருந்த மக்கள் முன்னரே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் அங்கு உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. முன்னதாக ஹவாய் தீவுகளையும் சுனாமி தாக்கியது. அங்கு சேதம் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக