சென்னை, மார்ச் 8: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக 1965 என்ற சிறப்பு தொலைபேசி எண் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த எண் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் செயல்படும். இந்தத் தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் தெரிவித்தார்.தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற உள்ளது.தேர்தல் குறித்து தங்களுக்கு எழும் சந்தேகங்களை வாக்காளர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள சிறப்பு தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்து அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில் குரேஷி கூறியது:"தேர்தலை முன்னிட்டு நாட்டிலேயே முதல் முறையாக சிறப்புத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1965 என்ற எண்ணுக்கு வாக்காளர்கள் அழைத்து தேர்தல் தொடர்பான சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். மேலும் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களையும் இந்த எண்ணில் தெரிவிக்கலாம்.5 மாநிலங்களுக்கும் இந்த எண் பொதுவானது. இந்த எண்ணுக்கு 10 இணைப்புகள் உண்டு. வாக்காளர் இந்த எண்ணுக்கு அழைத்தால் அந்த அழைப்பு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும்.வாக்களர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கென்று பயிற்சி பெற்ற இளைஞர்களும் இளம் பெண்களும் தகவல் மையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். ஏற்கெனவே சோதனை அடிப்படையில் இது செயல்பட்டு வருகிறது. இந்த சேவை வியாழக்கிழமை (மார்ச் - 10) அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட உள்ளது.' என்றார் குரேஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக