வியாழன், 10 மார்ச், 2011

M.D.M.K. for third front? -மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் மனித நேயர்களையும் ஊழலை ஒழிக்க எண்ணுபவர்களையும் முனைப்புடன்ஒன்று படுத்தி, காங். -ஐத் தோற்கடிக்கும் முயற்சியிலும் தங்கள் அணிக்கு வெற்றி தரக்கூடிய தொகுதிகளிலும் கருத்து செலுத்தினால் மாபெரும வெற்றி பெறலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். 
/தமிழே விழி! தமிழா விழி! /

மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

சென்னை, மார்ச் 9: அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி - அதிமுக அணி என இரு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.ஆனால், பேச்சுவார்த்தையை முதலில் நடத்தி சிறிய கட்சிகளான புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக அணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை.மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையின் அழைப்புக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.முன்னதாகவே இடதுசாரிக் கட்சிகள், மதிமுக ஆகியவற்றுடன் அதிமுக பேச்சு நடத்தியது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அதிமுக தலைமை, விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் கடந்த வாரம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. காங்கிரஸýடன் தேமுதிக இணைந்து மூன்றாவது அணி அமைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேமுதிகவுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை உடனடியாகச் செய்து கொண்டது என்றும், இதையடுத்து தங்களுக்கும் திருப்தியான முறையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் இடதுசாரிகளும், மதிமுகவும் நினைத்தன.மூன்று கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவியது. ஆனால், எந்தக் கட்சியையும் அதிமுக தலைமை அழைக்கவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகளும் மதிமுக தலைவர்களும் எரிச்சலுக்கு உள்ளாயினர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு திங்கள்கிழமை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாள்களில் சுமுக முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதிமுக அணியில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாததே இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையின் நீண்ட கால நண்பராக இருக்கும் வைகோ, கூட்டணியில் தனது கட்சிக்கு "கௌரவமான அளவில்' இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார்.முதலில் 25 தொகுதிகளை வலியுறுத்திய அவர், இப்போது அதிலிருந்து இறங்கி வந்து 21 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால், "அதிமுக தலைமையோ 10 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவுக்கு ஒதுக்குவதாக இல்லை' என்று கூறப்படுகிறது.கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு, அதிமுக அணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக 4 தொகுதிகளைக் கேட்டுப்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது.""வீம்புக்கு அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டு பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது மதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது. வைகோ-வைத் தவிர அந்தக் கட்சியில் பெயர் சொல்லக்கூட ஒரு முக்கியமான தலைவர் கிடையாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மதிமுகவிலிருந்து விலகிவிட்டனர். தொகுதிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டும் போதுமா? அதில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் மதிமுகவில் இருக்கிறார்களா'' என்று கேள்வி எழுப்பும் அதிமுக தலைமை, வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்ததாகக் கூறப்படுகிறது.உறுதியாக வெற்றி பெறக்கூடிய 20 தொகுதிகளின் பட்டியலை வைகோ தந்தால் அதில் 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த 10 தொகுதிகளிலும் மதிமுக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே நேரடியாக வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் மதிமுக தரப்பு கொதித்து விடுகிறது.""184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மட்டும் அத்தனை தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட்டது? வெறும் 61 தொகுதிகளில்தானே ஜெயிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது எங்களை மட்டும் குறைகூறுவது என்ன நியாயம்?'' என்பது மதிமுக தரப்புவாதம்.இடதுசாரிக் கட்சிகளிடையேயும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளைக் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தங்களுக்குக் குறைந்தது 11 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மார்க்சிஸ்ட்டுக்கு 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகளைத் தர முடியும் என அதிமுக தெரிவித்துள்ளது. தொகுதிகளை அளிப்பதில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என நினைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக. இந்த அதிர்ச்சியால் மதிமுக தலைமை உறைந்து போயுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னணித் தலைவர்களும் அதிமுக அணியை விட்டு வெளியேறித் தனியாக களத்தைச் சந்திக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மதிமுகவுக்கு தென் மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் அழைப்புக்காகக் காத்திருப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளில் தனியாக களமிறங்கினால் ஓரளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அதிமுகவின் கனவைத் தகர்த்துவிட முடியும் என்று மதிமுக கருதுகிறது. மதிமுக, இடதுசாரிக் கட்சிகளைக் காத்திருக்க வைப்பது அவர்களது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. "கடைசி வரை காத்திருக்க வைத்து, இருக்கின்ற தொகுதிகளை கொடுத்தாலே போதுமானது' என்ற நிலைக்கு தங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிடுகிறதோ என்று மதிமுக, இடதுசாரிக் கட்சித் தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.என்ன "விலை' கொடுத்தாவது மதிமுகவையும் இடதுசாரிகளையும் அதிமுக அணியிலிருந்து பிரித்து மூன்றாவது அணி அமைக்க வைப்பதில் திமுக தலைமையும், காங்கிரஸ் மேலிடமும் சுறுசுறுப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி வாக்குகளில் ஏற்படும் பிளவு, ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறது திமுக தலைமை.அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களும் ஏனைய உதிரிக் கட்சிகளுக்கு 8 இடங்களையும் ஒதுக்கி இருக்கும் நிலையில், மீதமிருப்பது 185 இடங்கள் மட்டுமே. அதில் மதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 இடங்களை ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 155 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.கடைசியில், மதிமுகவுக்கு 15 தொகுதிகளும் மார்க்சிஸ்ட்டுக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் தந்து அவர்களைத் தங்களது அணியில் அதிமுக தக்கவைத்துக் கொள்ளக்கூடும். கடைசிநேரத்தில் அணி மாறுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற வழக்கத்தை மதிமுக 1996, 2001, 2006 தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக