சேகுவெராவின் பைக் தோழர் மறைவு
First Published : 07 Mar 2011 01:14:47 AM IST
லண்டன், மார்ச் 6: கியூபாவில் சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அடக்குமுறை ஆட்சியைத் தூக்கி எறிய புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக இருந்த எர்னஸ்டோ சே குவெராவின் மோட்டார் சைக்கிள் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ (88) மரணம் அடைந்தார். முதுமையால் ஏற்பட்ட இயற்கை மரணம் இது என்று அவருடைய குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். சே குவெராவின் குழந்தைப்பருவ நண்பரான ஆல்பர்டோ அவருடன் மருத்துவக் கல்லூரியில் படித்தார். இரு தோழர்களும் 1951-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளிலேயே 8 மாதங்கள் சுற்றிப்பார்த்தனர். ஒரு நேர சோற்றுக்கு வழி இல்லாமல் ஏழை மக்கள் பரிதவிக்க ஆட்சியாளர்களும் ஆதிக்க சக்திகளும் பட்டாடையும் பகட்டாடையும் உடுத்தி செல்வச் செழிப்பிலே சீமான்களாக வலம்வந்த காட்சியைக் கண்டு மனம் பதைத்தார்கள். சர்வாதிகாரியின் ஆட்சியை அகற்ற புரட்சிப் படையிலே சேர்ந்தார்கள். பிறகு சமதர்ம ஆட்சியை நிறுவியதும் மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். ஆர்ஜென்டீனாவின் கார்டோபா என்ற ஊரில் 1922-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்த ஆல்பர்டோ, சே குவெராவின் அழைப்பை ஏற்று 1961 முதல் ஹவானா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பாடம் கற்றுத்தந்தார். இவ்விரு நண்பர்களின் டயரிகளையும் படித்து அவற்றிலிருந்து தொகுத்த காட்சிகளை வைத்துத்தான் ""தி மோட்டார்சைக்கிள் டயரீஸ்'' என்ற திரைப்படம் 2004-ல் தயாரிக்கப்பட்டது. உள்ளத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்டிருந்த இந்தத் தோழர்களில் சே குவெரா, பொலீவியாவில் புரட்சியை வழிநடத்திச் செல்ல சென்றபோது 1967-ல் வீர மரணம் அடைந்தார். நண்பரைப் பிரிந்தாலும் அவருடைய நினைவுகளையும் அவர் தனக்கு அளித்த அன்புக் கட்டளையையும் பிரிய மனம் இல்லாமல் ஆசிரியப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் ஆல்பர்டோ. கடைசி விருப்பம்: தான் இறந்த பிறகு தன்னுடைய உடலை எரியூட்டி அந்த அஸ்தியை கியூபா, ஆர்ஜென்டீனா, வெனிசூலா நாடுகளின் வயல்களில் தூவ வேண்டும் என்று ஆல்பர்டோ விருப்பம் தெரிவித்திருந்தார். ஏழை மக்களுக்காகத் தங்களுடைய சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்த புரட்சியாளர்கள் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை, உலகமே அவர்களுக்கு தலைதாழ்த்தி சிரத்தாஞ்சலி செலுத்துகிறது.
கருத்துகள்
Condolesences.
By Saravanan
3/8/2011 3:42:00 AM
3/8/2011 3:42:00 AM
உலகின் முதல் கொரில்லா வீரனின் நண்பன் மரணம்.
By Elango
3/8/2011 12:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/8/2011 12:56:00 AM