சனி, 12 மார்ச், 2011

cong. c.m. for thamizhnadu - a worst dream: தமிழ்நாட்டுக்கு காங்கிரசு முதலமைச்சர்!

தேர்தல் முடிவிற்குப் பின்னர், தி.மு.க.விற்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. இதனைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வரக் காங்கிரசு முயலும் என்னும் எண்ணத்தில் அருண்நேரு எழுதி உள்ளார். எவ்வாறு இருப்பினும் காங். ஆட்சிக்கு வரும் அவலமும் தலைக்குனிவும் தமிழ்நாட்டிற்கு வராது என்று நம்பலாம்.  காங்.கின் கனவுகள் நீர்மேல் எழுத்தாகும்.  அறமும் மனித நேயமும் இறுதியிலாவது வெற்றி பெறும் என்பது உண்மையானால்,தமிழினப்படுகொலைகளுக்கான தண்டனையைக் காங். பெற்றே தீரும். (தலைப்பு தினமணியின் சித்து வேலை. அவர்அறியார்.)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /
தமிழே விழி! தமிழா விழி! /   

தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் முதலமைச்சர்!

First Published : 12 Mar 2011 12:32:36 AM IST


பரபரப்புக்கு நம்முடைய நாட்டில் பஞ்சமே இல்லை; இப்போது நம்முடைய கவனத்தைக் கவர்வதில் முதலிடம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குத்தான். அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை அடுத்தடுத்து வெற்றி கொண்டிருந்தாலும் வரும் சனிக்கிழமை நாகபுரியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும்போதுதான் உண்மையான சவால் காத்திருக்கிறது.இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. கிறிஸ் கெயில் பேட்டிங்கில் மின்னல் வேகத்தில் ரன் எடுத்து செஞ்சுரி அடித்தால் அந்த அணி எந்த அணியையும் கவிழ்த்துவிடும்.இந்திய அணி விளையாடும்போதெல்லாம் பதற்றம் கூடுவது இயற்கை; லட்சக்கணக்கானவர்கள் இந்திய அணி விளையாடுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கின்றனர். இந்திய அணி எப்படி விளையாட வேண்டும், யாரெல்லாம் அணியில் இடம் பெற வேண்டும், டாஸில் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தோனிக்கு ஆலோசனை கூற ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர்.நம்முடைய அணிதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் அணி. நம்முடைய பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. ஆனால் பந்து வீச்சுதான் சந்தேகத்தைத் தரும் வகையில் இருக்கிறது. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி இது என்று உணர்த்தும்வகையில் இதுவரை ஒரு வெற்றியும் ஆழமாக, அழுத்தமாக அமையவில்லை.உலகக் கோப்பை முடிந்த பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதற்கிடையே நாம் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களைக் கவனிக்க வேண்டியிருக்கும்.2011-ம் ஆண்டு பிரச்னைகள் மிகுந்த ஆண்டாக இருக்கப் போகிறது. பருவநிலை எதிர்பார்த்தபடி இல்லாமல் அடிக்கடி மாறக்கூடும். உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்ந்துவிடும். அத்துடன் பெட்ரோல் உற்பத்தி, போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்படக்கூடும்.சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலைகோரி அப்பாவி மக்கள் நடத்தும் கிளர்ச்சியை ஒடுக்க அரசுகள் தயாராகிவருவது துரதிருஷ்டவசமானது. அதிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறை காரணமாக உயிரிழப்புகளும் கைதுகளும் அதிகரிப்பது வேதனையை ஏற்படுத்துகின்றன. டுனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் தோன்றிய சுதந்திரப் போராட்டக் கிளர்ச்சி அடுத்து ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. அப் பகுதிகளில் இப்போது எந்த நாடும் அமைதியாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவருகிறது.இந்த நெருக்கடி உலகின் எல்லா நாடுகளையுமே ஏதோ ஒரு வகையில் பாதித்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர் இந்த நாடுகளில்தான் இப்போது குடியிருந்து வருகின்றனர்.இந்த நாடுகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அது நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. அத்துடன் அவை நம்முடைய முதலீடுகளுக்கும் அச்சுறுத்தலாக முடியும்.நம் நாட்டில் உயிர்த்துடிப்புள்ள, வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய ஜனநாயகம் நிலவுகிறது. நம்முடைய அரசியல் மோதல்களும் அமைதியாகவே நடந்து முடிகின்றன. தற்செயலாக ஏற்படும் அரசியல் விபத்துகள்கூட அமைதியாகவே நடந்தேறுகின்றன.இந்த முறை அரசியல் திருவிழா திமுகவினரின் ஆக்ரோஷமான தாக்குதலுடன் தொடங்கியிருக்கிறது. தேவையே இல்லாமல் இப்படி ஆத்திரப்பட்டதால் அதன் பலனை இப்போது திமுக அனுபவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 63 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கேட்டதுமே கருணாநிதி கோபம் கொண்டு மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்து, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் நேரில் தில்லியில் அளிப்பார்கள் என்று அறிவித்தார். இறுதியில் அதே 63 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. திமுக தந்த நெருக்குதலுக்கு மசிந்துவிடாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடைய முடிவிலேயே உறுதியாக நின்று காரியத்தைச் சாதித்துவிட்டார். இவற்றையெல்லாம் திமுக தொண்டர்களால் புரிந்துகொள்ள முடியாது.அதிமுகவும் தேமுதிகவும் இணைந்திருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். மக்களுடைய ஆதரவு யாருக்கு என்பதைக் கணிப்பது எளிதாக இருக்காது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொருவிதமான உள்ளூர் காரணங்களால் மக்களுடைய ஆதரவு மாறக்கூடும்.திமுகவின் நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்குப் பல வழிகளிலும் உதவிகரமாகவே மாறக்கூடும். தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாது காங்கிரûஸச் சேர்ந்தவரும் முதலமைச்சராகும் வாய்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது.அடுத்த மாதத்தில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மேலும் பல திருப்பங்களையும் திடீர் முடிவுகளையும் நாம் பார்க்கப் போகிறோம். 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தாலும் ஆ. ராசா கைதாலும் செல்வாக்கு இழந்துள்ள திமுக, இப்போது தங்களுக்குள் கோஷ்டிச் சண்டை எதிலும் ஈடுபடாமல் ஒற்றுமையாகவே தேர்தலைச் சந்திக்கக்கூடும்.இந்தத் தேர்தலில் திமுகவுக்கு அதிக இடங்களைப் பெறவும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கே கிடைக்கவும் திமுக தலைவர் கையாண்ட அரசியல் தந்திரம் எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது. திமுக இன்னமும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா அல்லது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அதிகார மையங்கள் பொறுப்பைத் தங்கள்வசம் எடுத்துக்கொண்டுவிட்டனவா என்ற ஐயம் ஏற்படுகிறது.அதிகத் தொகுதிகளை விட்டுக்கொடுக்காவிட்டால் காங்கிரஸ் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று திமுக கூறியதற்கு தன்னுடைய பதில் என்ன என்று மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் சோனியா காந்தி. 2ஜி அலைக்கற்றை விவகாரம் பூதத்தைப் பிடித்த நிழல்போல திமுகவைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்த முறை தேர்தல் களத்தில் மிகவும் தீவிரமான அரசியல் போராட்டத்தைக் காணலாம். மம்தா பானர்ஜியும் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி வாகை சூடுவது நிச்சயம். காங்கிரஸ் கூட்டணிக்கும் இடதுசாரி முன்னணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம், தொகுதிகள் வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கிறேன்.தொகுதிப்பங்கீடு விஷயத்தில் காங்கிரஸýக்கும் திரிணமூலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சலசலப்பு ஏற்படுவது நிச்சயம். காங்கிரஸ் 98 கேட்கிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ அதற்கு 58 மட்டுமே தர முடியும் என்கிறது. இது ஒரு பெரிய விவகாரமாக மாறாது. இடதுசாரிகளை தன்னந்தனியராக எதிர்க்கும் மம்தா பானர்ஜி, அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை இந்தத் தருணத்தில் கோட்டைவிட மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனவே, இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுவிடும்.1984-85 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். பிரதமர் ராஜீவ் காந்தியும் நாங்களும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தீவிரமாக இருந்தோம். நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்த சுமார் 30 தொகுதிகளுக்கு தகுந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியாமல் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். மேற்கு வங்கம் எங்களுக்கு மிகவும் பலவீனமான மாநிலமாக இருந்தது. அப்போது மம்தா பானர்ஜி தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்ததால் ஏற்பட்ட ஆரவாரத்தில் நாங்கள் இருந்த நெம்பர் 1 அக்பர் ரோடு வீடே அதிர்ந்தது. உடனே ராஜீவ் காந்தி துள்ளி எழுந்து, இதுவரை தேர்தலில் தோல்வியையே சந்தித்திராத மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்க்க மம்தாதான் சரியான வேட்பாளர் என்று உற்சாகமாகக் கூவினார். மம்தாவாவது சோம்நாத்தைத் தோற்கடிப்பதாவது என்றே எங்களில் பலர் நினைத்தோம். ஆனால் அவர் சோம்நாத்தை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.1985 மக்களவை பொதுத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அந்த நேரத்தில்கூட மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 16 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸôல் வெற்றிபெற முடிந்தது.அதற்குப் பிறகு 2009 பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸýடன் காங்கிரஸ் கூட்டு வைத்ததால்தான் மொத்தம் 28 இடங்களை இரண்டு கட்சிகளாலும் சேர்ந்து பெற முடிந்தது.மேற்குவங்கத்தில் ஆங்காங்கே தேர்தல் மோதலை நிச்சயம் எதிர்பார்க்கலாம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற பொருளாதாரத்தை இடதுசாரி தொண்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனவே அவர்களுடைய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதும் தேர்தல் கமிஷனுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் பெருத்த சவாலாகவே இருக்கும்.மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் மீது நாம் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். லிபியாவில் இப்போது உள்நாட்டுப் போர் நடக்கிறது.மேற்கத்திய நாடுகளும் சர்வதேசச் சமூகமும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் போதனைகளாக நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீதே போர் விமானங்களையும் குண்டு வீச்சு விமானங்களையும் ஏவிவிட்டு ஆயிரக்கணக்கில் மனித உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்.சர்வதேச அரசியல் அரங்கில் கடாஃபி ஒன்றும் கத்துக்குட்டி தலைவர் அல்ல; பெட்ரோலிய எண்ணெயை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அரசியல் வித்தாரம் காட்ட முடியும் என்று நன்கு தெரிந்தவர். சர்வதேசத் தலைவர்களுக்கு உள்ள பணத்தாசை பற்றியும் இதர பலவீனங்கள் குறித்தும் அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே வல்லரசுகள் நிலையான அரசுக்காக கடாஃபியை ஆதரிப்பதற்கு முடிவு செய்யுமா அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குத் துணை போகுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.லிபியாவில் கடாஃபியால் மக்களை ஒடுக்க முடிந்தால் அது பிற நாடுகளுக்கும் பரவி, மக்களின் தன்னெழுச்சியான ஜனநாயகப் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்படும். கடாஃபி நல்லாட்சி தருகிறார் என்று ஒரு சிலரால்தான் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு பகிரங்கமாகக் கூற முடியும்.எந்தவகை அரசியலிலும் அந்தரங்கம் என்று ஏதும் இல்லாமல் தோல் உரிக்கவே 24 மணி நேர செய்திச் சேனல்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் போராடும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? இதுதான் இப்போதைய சோகம்.காலனியாதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அது வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலக அரசியல் அரங்கில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன என்று யாராவது நினைக்கிறீர்களா?


1 கருத்து:

  1. என் பதிவில் அருண் நேரு என்பதற்கு மாற்றாக அருண் சோரி என எழுதி விட்டேன். திருத்திப் படித்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /

    பதிலளிநீக்கு