airforce லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
airforce லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூலை, 2012

புலி போல் பாயாமல் சுண்டெலி போல் பணிவதா? முதல்வர் பாய்ச்சல்



தினமலர்



சென்னை:"இலங்கை அரசிடம், புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வது வருந்தத் தக்கது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பு; எனது கடும் கண்டனம் காரணமாக, இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து, பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று, நான் மத்திய அரசை வலியுறுத்தினேன்.

மீண்டும் நிரூபணம்:ஆனால், "தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை, இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில்,"2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், "இலங்கை ராணுவத்திற்கு, தமிழகத்திலேயே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால்...' என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,"அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால், அப்போது பார்ப்போம்' என்று நழுவலாகவும் பேசியிருக்கிறார்.

இதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து, மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான, போராட்டமாக மாற்றி, கடைசியில், அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது. தன் நடவடிக்கைகள் அனைத்தும், கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.

வியப்பை ஏற்படுத்தாது:இவரின் இந்த நடவடிக்கைகள், "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழ் இனத்தின் மீது, கருணாநிதிக்கு, உண்மையிலேயே அக்கறை இருந்தால், தான் தாங்கிப் பிடித்திருக்கும், மத்திய அரசை, வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும், இலங்கை விமானப் படை வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும்.ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும், பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், மத்திய அரசை மிரட்டி, சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கை தமிழர் நலனுக்காக, அவ்வாறு செயல்படாதது, அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது."புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது, வருந்தத் தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.





சனி, 7 ஜூலை, 2012

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

தினமணி First Published : 07 Jul 2012 01:50:47 PM IST

Last Updated : 07 Jul 2012 01:51:57 PM IST

சென்னை, ஜூலை 7 : இந்தியாவில், பயிற்சி பெற வந்துள்ள சிங்கள விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிங்கள விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  தமிழ்நாட்டில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அறிந்து, தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.  இந்தப் போராட்டம், சிங்களவர்களைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக மட்டும் அல்ல; இந்தியாவில் வேறு எங்கும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிங்கள விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில், இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. சிங்கள விமானப்படையை வலுவுடையதாக ஆக்கி, விடுதலைப்புலிகளை மட்டும் அல்லாத, போரில் ஈடுபடாத தமிழ் ஈழ மக்களை, பள்ளிக்குழந்தைகளை, வான்வெளித் தாக்குதலில் குண்டுவீசி அழிக்கின்ற விதத்தில், பயிற்சியையும், தொழில்நுட்பத்தையும், சக்தி வாய்ந்த ரடார் கருவிகளையும், இந்திய அரசு கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் பலாலி விமான தளத்தை, இந்தியா தனது சொந்த செலவில் பழுது பார்த்துக் கொடுத்துள்ளது.ஈழத்தமிழ் இனத்தையே அடியோடு கரு அறுக்க, சிங்கள அரசு நடத்தி வந்த, இன்னமும் தொடர்கின்ற இன அழிப்புத் தாக்குதலுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முழு அளவில் உதவி வருகிறது. எனவே, தாம்பரத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியை, சாதாரண சிறிய நிகழ்வாக தமிழக மக்கள் எண்ணிவிடக் கூடாது. ஈவு இரக்கம் இன்றித் தமிழ் மக்களை, இலங்கைத் தீவில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், விமானப்படையினர், இந்தியாவில் பயிற்சி பெறுவது என்பது,  தமிழ் மக்களின் தலையில் மிதிக்கின்ற அராஜகம்; மன்னிக்க முடியாத துரோகம். சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படைத் தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது. அண்மையில், இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது.  இதன்மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது. சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்குப் பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை மத்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப்படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தோடு, இரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை, இரத்துச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள்

கோவாலு ..கோவாலு ..இந்த தமாஷா எல்லாம் எடுபடாது ...டெல்லி இந்திய தமிழ் அடிமைகளை மதிப்பது இல்லை ..இலங்கையில் இன்று ஹிந்தி பேசும் இந்தியர்கள் இருந்திருந்தால் நடப்பது வேறு ..ஒரு 5அல்லது 10ஆயிரம் பேர்களுடன் டெல்லி போய்..பாதுகாப்பு ...பிரதமர் அலுவலகம் முன் ஒரு வாரம் நின்று செயல் படுவதை நிறுத்து ..முடியுமா ...சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தும் ...முடவன் கருணாநிதி ஸ்டைல் மாதிரி அறிக்கை..கடிதம் எல்லாம் வெறும் புஸ்வானம்
By KOOPU
7/7/2012 5:24:00 PM
இந்தியாவை பொறுத்தவரை எட்டு கோடி தமிழர்களைவிட ஒரு கோடி சிங்களவர்களே மேலானவர்கள்.இந்தியாவை ஆளுகின்றவர்கள் தமிழர்களை இந்தியாவின் குடிமக்களாகவே கருதவில்லை.அனால் தமிழக அரசியல்வாதிகள் தங்களது சுய நலத்திற்காக இந்தியாவை ஆளுகின்றவர்களிடம் காவடி தூக்குகின்றர்கள். என்னதான் நீங்கள் காவடி எடுத்தாலும் உங்களை இந்தியாவை ஆளுகின்றவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் மாறுபட்ட நிலையை பற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
By தமிழ்ச்செல்வன்.K
7/7/2012 5:15:00 PM
" நூற்றிக்கு ..தொன்நோற்று ..ஒன்பது நாடுகளின் ஒப்புரவோகளின் " உதவியோடு நடந்து முடிந்த விடயம் !!.. குழப்புவர்கள் வெறும் குழப்ப வாதிகளே ,,, !
By ruthy
7/7/2012 2:51:00 PM
காங்கிரசும்,கருணாநிதியும் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கெதிரான துரோகம் தொடரும் வைகோ அவர்களே
By தஞ்சை ராஜு
7/7/2012 2:51:00 PM


இலங்கை வீரர்கள் பெங்களூருக்கு மாற்றம்: செயலலிதா கண்டனம்

இலங்கை வீரர்கள் பெங்களூருக்கு மாற்றம்: செயலலிதா கண்டனம்

First Published : 07 Jul 2012 12:56:07 AM IST


சென்னை, ஜூலை 6: சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.  தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழ் இனத்துக்கு எதிராக...: இலங்கையின் ஒன்பது வீரர்களையும் பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக விமானம் மூலம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கு சாதகமாக திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா. 

வெள்ளி, 6 ஜூலை, 2012

கே டு கெட்ட இந்தியத்தின் நாடு தூற்றும் செ யல்

PollachiNasan Thamizam pollachinasan@gmail.com
8:52 PM (1 hour ago)


சிங்களவிமானப்படை வீரர்களுக்குச் சென்னையில் 
பயிற்சி கொடுத்து வந்த மத்திய அரசு தமிழகத்தின்
ஒட்டு மொத்த எதிர்ப்பிற்குப்பிறகு பெங்களூருக்கு 
மாற்றி உள்ளது. 
மத்திய அரசுக்கு மனமாற்றம் ஏற்படவில்லை.
பயிற்சி கொடுப்பதிலேயே குறியாக உள்ளது.
ஏனிந்த கொடுஞ்செயல். இதுவா மக்களாட்சி ?
இன்னும் எத்தனை பேரை கொல்ல வேண்டும் ? 

புதிய தலைமுறையின் செய்தி பாருங்கள்


தமிழ்க்கனல் - தமிழம் வலை (www.thamizham.net)
YouTube - Videos from this email
10:25 PM (0 minutes ago)


வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு த் தமிழகத்தில் பயிற்சி: செயலலிதா எதிர்ப்பு

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு த் தமிழகத்தில் பயிற்சி: செயலலிதா எதிர்ப்பு

First Published : 05 Jul 2012 10:48:34 AM IST

Last Updated : 05 Jul 2012 10:49:16 AM IST

சென்னை, ஜூலை.5: இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, வாய் மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.இலங்கை இனப் போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.