இலங்கை வீரர்கள் பெங்களூருக்கு மாற்றம்: செயலலிதா கண்டனம்
First Published : 07 Jul 2012 12:56:07 AM IST
சென்னை, ஜூலை 6: சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி
அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும்
மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை
அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள
தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு
கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.
தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை
மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன.
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ் இனத்துக்கு எதிராக...: இலங்கையின் ஒன்பது வீரர்களையும் பெங்களூரில்
உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக விமானம் மூலம் மத்திய
அரசு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கும் தமிழ்
இனத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கு சாதகமாக திமுக அங்கம் வகிக்கும் மத்திய
அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள்
போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். இலங்கை விமானப் படை
வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி
அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக