குவியாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குவியாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

அகரமுதல

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை

திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !


 எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!
 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும்  என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.
  திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.
  இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது.  எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?
  அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.
  இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.
 பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!
11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி  சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.
ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.
இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
  அது மட்டுமல்ல.  தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
  நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார்.   கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.
  காங்கிரசுக் கட்சியின் செய்தித்  தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலாசெய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?
  2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன.  பாசக தலைவர்களும்  தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல்  தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?
  இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும்.  பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர்.  மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.
“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக,  தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.
– குவியாடி

புதன், 25 ஏப்ரல், 2018

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! – குவியாடி


அகரமுதல

வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே!
–      குவியாடி
ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால்  தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில்    ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை.
இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அப்பாவிகள் பழிவாங்கப்படுவதற்காகத் திருத்தம் தேவை என்றால், ஆழமாகச் சிந்திக்காமல் பெரும்பான்மையர் எதிர்க்கின்றனர்.               
அரசியல் யாப்பு , பிரிவு 17 இன்படி நம் நாட்டில்  தீண்டாமை ஒழிக்கப்பட்டது.ஆனால்,  நடைமுறையில் தீண்டாமைச் செயல்கள் இருந்தன; இருக்கின்றன, எனவே, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1955இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம்(Protection of Civil  Rights) என 1976 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  தாழ்த்தப்பட்டோருக்கான சட்டமாக இஃது இருந்ததே தவிரப் பழங்குடியினர் நலன் குறித்துப் பொருட்படுத்தவில்ல.,
  எனவே, 1989இல் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், 1995இல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருப்பினும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. குற்றங்களைப் பதிவு செய்யாமை, பதிந்தாலும் பிறழ்சான்றர்(hostile witness) மூலம் வழக்கை இலலாமல் ஆக்கல், கட்டைப்பஞ்சாயத்து, பாதிப்புற்றவர் மீதே எதிர் வழக்கு தொடுத்து வழக்கை   நீர்த்துப்போகச் செய்தல், பொய் வழக்குகள் மூலம் அச்சுறுத்தல், இச்சட்டத்தின் படிக் குற்றம் புரிந்தவர்களுக்குக்  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438வது பிரிவு பொருந்தாது எனச்சட்டம் இருப்பினும் இப்பிரிவில் பிணையில் விடுதல்.  ஆகியவற்றால் வன் கொடுமையாளர்கள் தப்பி விடுகின்றனர் என்கின்றனர். ஆனால், இத்தகைய செயல்பாடுகள் இவற்றிற்கு மட்டும் உரியன அல்ல. வரன் கொடை(வரதட்சணை) முதலான பல வழக்குகளிலும்இதுதான நிலை. காவல் துறையில் வழக்குஉசாவல் தொடர்பான உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது இவையும் மாறும்.
அதே நேரம்,  வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூறுவதற்கிணங்க மாநில அளவில்   தாழ்த்தப்பட்ட  பழங்குடி மக்கள் பாதுகாப்புக் குழு அமைக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு  விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கவும் வேண்டும்.  இவற்றை முறையாக அமைத்து நடவடிக்கைகள்எடுத்திருந்தாலே பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுக் குற்றங்களும் குறைந்திருக்கும்.
இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 10இல்  தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினரைப் பொது இடத்தில் இழிவுபடுத்தும் கருத்துடன் வேண்டுமென்றே அவமானப் படுத்துவது அல்லது அச்சுறுத்துவது தண்டைனக்குரிய குற்றமாகக் கூறப்பட்டுள்ளது.  இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.
இன்ன வகுப்பு என்று தெரியாமல் இடம் பெறும் வாதங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் சாதியைச் சொல்லித் திட்டி இழிவுபடுத்தியதாகக் கூறிப்பொய் வழக்கு தொடுத்து அலலலுக்கு உள்ளாக்கும்  போக்கு வளர்பிறையாக உள்ளது. இந்தப் போக்கிற்கான கண்டனமும் வளர்ந்து கொண்டேஉள்ளது.
பாபு செகசீவன்ராம் இந்தியத் துணத்தலைமையமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த பொழுது(1977–1979) இப்போக்கு வளர்ந்தது.  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிறரை அடித்து விட்டு உடனே செகசீவன்ராம் அலுவலகத்திற்குப் பிற வகுப்பாரால் அடிக்கப்பட்டதாகத் தொலைவரி கொடுத்துப் பிறரை இன்னலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள் உண்டு. இதன் தொடர்ச்சியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொய்வழக்கு போடுவது மிகுதியானது.
இத்தகைய பொய்வழக்குகளால் பாதிப்பறுவோர் வளர்ந்ததால் மதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்புகூட உருவாக்கப்பட்டது.  பாட்டாளி மக்கள் கட்சியினரும்  தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமையும் உள்ளது. அதற்குச் சான்றுதான் மகாராட்டிரத்தில் இத்தகைய பொய்வழக்குகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளில் இரு கோடி மக்களுக்கும் மேலாகக் கலந்து  கொண்டமை.
இந்திய அரசியல் யாப்புச் சட்டத்தின் பிரிவு 338இன் படி 1952இல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் சார்பு அமைப்புகளாக  நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் உள்ளன.  தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  உள்ளது. 89-ஆவது இந்திய அரசியல்யாப்புத் திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும்பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசியஆணையம் என இரண்டு ஆணையங்களாக அரசு அமைத்தது.
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பு காலங்கடந்து அமைப்புகளை உருவாக்கல், அமைப்புகள் உருவாக்கினாலும் காலந்தவறிச் செயல்படல் போன்றவற்றால் எதிர்பார்த்த பயன்கள் விளையவில்லை, 3 ஆ்ண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாணையங்கள் கூடுவதாலும் போலோ பாசுவான்சாத்திரி, விசய்சங்கர் சாத்திரி போன்ற முற்பட்ட வகுப்பினர் இவற்றின் தலைவர்களாக இருந்துள்ளமையாலும் இவற்றால் போதிய பயனிருந்திருக்காது என்பதைப் புரிந்திருக்கலாம்.
நீதிபதிகள்  இலலித்து, கோயல் ஆகியோர் கொண்ட  உச்சநீதி மன்ற அமர்வில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் குற்றச்சாட்டின் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே வழக்கு பதிய வேண்டும் என்று மார்ச்சு 20இல் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன்பு பிணை வழங்க இயலாக் கைதுகளை மேற்கொண்டு வந்தனர். பொய்வழக்குகள் பெருகுவதால், முறையீடு வந்த 7 நாளுக்குள் மெய்த்தன்மையை ஆராய்ந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிததுள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள், மேல் அலுவலர்களின்  எழுத்து மூலமான இசைவு  பெற்றபின்னரே கைது செய்யப்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவிற்கு அவர்கள் வந்தது திடீரென்று நடந்ததல்ல. நாடெங்கும் உள்ள நீதி மன்றங்களில் முன்னரே பல தீர்ப்புகளில் பொய் வழக்குகளுக்குஎதிரான கண்டனங்கள் வந்த பின்னரும்   பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையர்கள் இது குறித்து எச்சரித்த பின்னருமேதெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கூறுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும் என்றே இதன் ஆதரவாளர்கள் போராடுகின்றனர். நீதிபதிகள் கைது செய்யத் தடைவிதிக்கவில்லை. மெய்த்தன்மையைக் கண்டறிந்த பின்னரே நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளனர். சட்டத்தால் பாதிப்பு உறுபவர்களுக்காகவும் நீதிமன்றம் பேசுவதுதானே முறை .அந்தக் கடமையைத்தானே நீதிபதிகள் ஆற்றி உள்ளனர்.
வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் படியான நடவடிக்கைகளை விரைவு படுத்தவும் விழிப்புணர்வுக் குழுக்களைச் செயல்படச் செய்யவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்களுக்கு விரைவில் தீர்ப்பும் இழப்பீடும் கிடைக்கவும் போராட வேண்டும். மாறாகச் சட்டத்தால் பாதிப்படை வோர்களுக்கு எதிராகப் போராடுவது முறையல்ல.
இந்திய அரசும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறவர்கள் தீர்வு பெறுவதற்குரிய உரிய திருத்தங்களை உடனே மேற்கொள்ள வேண்டும். அவற்றுடன் சேர்த்துப் பொய் வழக்குகளைத் தடுக்கவும் அவற்றால் பாதிப்புறுவோர்க்குத் தீர்வு கிடைக்கவும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் பொழுது இத்தகைய எதிர்ப்புகள்அடங்கும்.
”பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறி பிறந்த நாட்டில் தீண்டாமைக் கொடுமை இருப்பது கொடுமையல்லவா? உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனைக் களைய  அரசுமுற்பட வேண்டும்.  பொய்வழக்குகளுக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதற்கு எதிராகப் போராடுவதைப் போராட்டக்காரர்களும் கைவிட வேண்டும்!
– குவியாடி

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – குவியாடி


அகரமுதல

எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?


விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை.
ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்வதால் சில ஐயங்கள் ஏற்படுகின்றன.
வரலாறு என்று சொல்லாமல் கதை என்று அவர்களே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிதான். ஆனால்  வால்மீகி இராமாயணம், துளசிதாசு இராமாயணம், பௌத்த இராமாயணம், சமண இராமாயணம், திபேத்து இராமாயணம், கம்பர் இராமாயணம் எனப் பல்வேறுமொழிகளிலும் 300 இராமாயணங்கள் உலகம் முழுமையும் உள்ளன. இராவணனின் மகள் சீதை, தசரதன் மனைவியர் வரிசை முறை கோசலை, சுமத்திரை, கைகேயி, என்பனபோன்று 80 வகையான இராமகாதைகள் உள்ளன. இவற்றுள் எந்தக் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்? தெரியவில்லையே!
 இராமன் முதலானவர்கள் பிறப்பும் வெவ்வேறு வகையாகச் சொல்லப் படுகின்றன. தசரதன் மனைவிகள் வேள்வியில் பாயாசம் குடித்ததால் பிறந்தவர்கள், பானம் பருகியதால் பிறந்தவர்கள், விந்து உண்டு பிறந்தவர்கள், குதிரைப் பிணத்தைக் கட்டிக் கொண்டமையால் பிறந்தவர்கள் எனப் பிறப்பு முறைகள் வெவ்வேறாக க் கூறப்படுகின்றன.
மற்றொரு கதையும் உள்ளது. இராமன், உத்காதா என்னும் பூசாரிக்கும் கோசலைக்கும் பிறந்தவன்; இலக்குமணனும் சத்துருக்கனனும் பரிவிருத்தி என்னும் பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவர்கள்; பரதன், மற்றொரு பூசாரிக்கும் சுமத்திரைக்கும் பிறந்தவன் என்பது ஒரு கதை.
இவற்றுள் எதனைப் பாடமாக வைப்பார்கள்? எல்லாக் கதைகளிலுமுள்ள ஒற்றுமை தசரதனுக்கும் மனைவியருக்குமான உறவில் இராமன் முதலானோர் பிறந்தமையாகத்   தெரிவிக்காத துதான்.
கடவுளுக்குப் பிறப்பு கிடையாது. தாய்க்கும் அவரின் கணவர் அல்லாத மற்றொருவருக்கும் பிறந்தவரைக் கடவுளாகச் சொல்ல முடியாது  அல்லவா? 
கடவுளுக்கு இறப்பும் கிடையாது. ஆனால், இராமன் சரயு ஆற்றில் இலக்குவனை(இலக்குமணனை)த் தள்ளிக் காென்றுவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். அப்படியானால் கடவுளாகவோ கடவுளின் பிறப்பாகவோ இராமன் இருக்க முடியாதே! 
இராமன் பட்டத்து அரசனானால் அவனுடைய மனைவிமார்களின்  ஏளனத்திற்கும் ஆளாவாள் எனக் கைகேயியைக் கூனி எச்சரிக்கிறாள். இராமனின்  ஒற்றை மனைவி – ஏகப்பத்தினி – உடையவன் என்னும் பிம்பம் உடைந்து ஏகப்பட்ட பத்தினி உடையவன் என மக்கள் தூற்றமாட்டார்களா?
அன்னைக்கும் மேலாக அண்ணனை மதிப்பவன் இலக்குவன். அண்ணி சீதையையும் அன்னையாகப் போற்றுபவன். உடன்பிறப்புப் பாசத்திற்கு இராமன் இலக்குவனைத்தான் மக்கள் கூறுவர். மூத்த பிள்ளைக்கு இராமன் பெயரை வைத்தால் இளையவனுக்கு இலக்குவன் பெயரை வைப்பது மக்கள் வழக்கம்.
இராமன் காட்டிற்குச் செல்ல நேரிட்டதும் தன் அன்பு மனைவியைப் பிரிந்து உடன் செல்கிறான் பாசமிகு தம்பி இலக்குவன். ஆனால் இலக்குவன் பாசத்தினால் வரவில்லை; தன்மீதுள்ள காமத்தினால் வந்ததாகச் சீதை கூறுகிறாள்.இலக்குவனின் பாசம் பற்றிய நம்பிக்கையைத் தவறு என்பதா? பாசப்பார்வையைக் காமப் பார்வையாக நோக்கும் சீதையின் ஒழுக்கத்தில் ஐயப்படுவதா?
இலங்கையுடனான போருக்கு அடிப்படை சூர்ப்பனகையின் மூக்கு, காதுகள், மார்புக்காம்புகள் ஆகியவற்றை இலக்குவன் அறுத்துத் துன்புறுத்தியதுதான். காரணம், சூர்ப்பனகை, இராமன் தனியாக இருப்பதாக எண்ணி அவனைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்ததுதான். ஒழுக்கமுடையவனாகப் போற்றப்படும் இராமன் தான் மணமானவன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தானும் உடன்படுவதுபோல் முதலில் பேசியிருக்கக் கூடாது. சீதை, குடிலில் இருந்து வெளியேவந்த பின், சூர்ப்பனகையும் சீதையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். அப்பொழுதுதான் தனக்கு மணமான உண்மையைத் தெரிவிக்கிறான். அதுவரை இராமன் விளையாட்டிற்குப் பேசினானாம். காதற்சொற்களைப் பேசிவிட்டு விளையாட்டாகப் பேசியதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லவா? பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பரிகாரம் தண்டனை வழங்குவது என்பது கொடுமை அல்லவா? இராமனையும் இலக்குவனையும் எப்படி அறவடிவங்களாகக் கூறுவார்கள்?
பிறரின் தம்பியர் தத்தம் தமையன்மாருக்கு எதிராகத் திரும்பினால் உடன்பிறப்புப் பாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் இராமன் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களிடையே ஒற்றுமை அல்லவா ஏற்படுத்தி யிருக்க வேண்டும். மாறாக அண்ணன்களைக் கொன்று ஆட்சியைப் பறித்து அரசாளத்தானே உதவி செய்துள்ளான். இதனைப் படிக்கும் மாணவர்கள், இராமனை எப்படி நல்ல அண்ணனாக எண்ணுவார்கள்?
இராமர் பாலம் கட்டுக்கதை என்பதை விரிவாகத் தனியாகப் பார்க்கலாம். ஆனால் புத்தத்துறவிகளையும் புத்த மடங்களையும் இராமாயணத்தில் படிக்கும் மாணவர்கள் பொய்யான இராமர் பாலத்தை வைத்து ஏய்ப்போரின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள் அல்லவா? 
இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அளவுள்ள உண்மைகளைப் படிப்பவர் உணர்ந்தால் இராமனின் புகழ் மங்கும். அப்படி யென்றால் நமக்கு ஒன்றும் இல்லை. மாறாக, மதவெறியைத்தூண்டுவதற்காக இராமனின் பாடம் என்றால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் அனைவரின் முதற்கடமை!

— குவியாடி

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா? – குவியாடி

பிற கருவூலம்


அனலும் புனலும் :

வழக்காடு மொழி

– இந்தியாதமிழர்களுக்கான நாடு இல்லையா?

 

பன்னாட்டு மன்றமான ஐ.நா. உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல உரிமைகளைத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு மன்றத்தின் பொது அவையால் பாரிசு நகரில் 1948 இல் ஏற்கப்பெற்ற இச்சாற்றுரை அடிப்படையில் உலகநாடுகள் பலவும் தம் மக்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன.
மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடத்தக்கன, கருத்து வெளிப்பாட்டு உரிமை, மொழி உரிமை, நேர்மையான உசாவலுக்கான உரிமை, சட்டத்தின் முன் சமநிலை உரிமை ஆகும்.
இவற்றின் அடிப்படையில் இந்திய அரசியல் யாப்பு இந்திய மக்களுக்குக் கருத்தை வெளிப்படுத்துவதற்கான பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் ஏட்டளவில் வழங்கியுள்ளது. இந்தியா, அரசியல் யாப்பில் சமவுடைமை நாடாகக் குறித்துக்கொண்டுள்ளது. சமவுடைமை என்றால் நாம் பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்க்கிறோம். மொழிசார் சம உடைமையையும் அது குறிக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தி, சமற்கிருதம் தவிரப் பிற மொழிகள் உள்ளன என மத்திய அரசு எப்பொழுதும் நினைப்பதில்லை. பாதிப்பிற்குள்ளாகும் தமிழ்மொழி, தமிழர்கள் கண்ணோட்டத்தில் நாம் கூறினாலும் பிற தேசிய மொழிகளுக்கும் இது பொருந்தும்.
தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தில் – தமிழர்கள் நீதி வேண்டும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் – தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் – தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.
அரசியல் யாப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும சமம் என்று குறிக்கிறதே, அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?
எந்தக் குடிமகனையும் இனம், பிறப்பிடம் முதலான எதையாவது காரணம் காட்டிப் பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்று பிரிவு 15 கூறுவது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?
மக்களாட்சிக் குடியரசாக இந்தியஅரசமைப்பு யாப்பு அறிவிக்கிறதே, நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையான நீதி மன்றங்களில் தாய்மொழியில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்காத பொழுது இவர்களெல்லாம் இந்தியரல்லர் என்று எடுத்துக் கொள்வதா?
அரசியல் நீதி வழங்குவதாகக் கூறுகிறதே! அறமன்றத்தில் தமிழுக்கான அறம் மறுக்கப்படுவதுதான் அரசியல் நீதியா?
தகுநிலையிலும் வாய்ப்பிலும் சமத்துவம் கொடுப்பதாக இந்திய அரசியலமைப்பு உறுதி கூறுகிறதே! நயன்மை கூறும் வழக்குமன்றங்களில் மொழிச்சமநிலை தர மறுப்பதுதான் அந்த உரிமையை நிலைநாட்டுவதா?
அலகாபாத்து, பாட்னா, மத்தியப் பிரதேசம், இராசத்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி இருக்கும்பொழுது தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றத்தில் தமிழ் இருக்கத் தடை ஏன்?
பாசக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு எனத் திணிப்பதற்கு வாய்ப்பாக நாட்டின் தேசிய மொழிகள் பெற வேண்டிய உரிமையை மறுத்து வருகிறது. தமிழ் முதலான மொழிகள் மறுக்கப்படும்பொழுது இந்திய மொழி என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் பணி எளிதாகும் எனக் கருதுகிறது. எனவேதான் தமிழர்கள் தங்கள் மொழிக்கான சமவாய்ப்பைத் தொடர்ந்து வேண்டியும் மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டு-புதுச்சேரி உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன் மதுரை அமர்வு நீதிமன்றத்திலும் வழக்காடுமொழியாகத் தமிழை ஏற்க 2006இல் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் இதனை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11.10.2012 இல் மறுத்துள்ளது. அதன் பின்னரும் இதற்கு எதிராகத் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடுமொழியாக ஏற்குமாறு தமிழன்பர்களும் வழக்குரைஞர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். மேலும், மதுரை வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆளுநர் உரையிலும் மத்திய அரசின் ஆட்சிமொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழையும் ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு பழையகுப்பையைக் காட்டி இதை மறுப்பதாக அறிவிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புட்பா இது குறித்து எழுப்பிய வினாவிற்கு மத்திய சட்டத்துறை இணைஅமைச்சர் பி.பி.சௌதரி(P.P.Choudhary), பழைய மறுப்புச் செய்தியைக் கூறித் தமிழை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக்க முடியாது என மறுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான கொந்தளிப்பை ஏற்படுத்தும் சிக்கலுக்கு இணையமைச்சர் எளிதாக எழுத்து மூலமான மறுப்புரையைத் தெரிவித்துள்ளார். இச்செயல், அவர்களின் முகவரான ஆளுநரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையே இழிவு படுத்துவதாகும். தமிழக அரசிற்கு உயர்நிலையில் இருந்து இந்த மறுப்பைத் தெரிவித்திருக்கலாம். தமிழக முதல்வரிடம் தெரிவித்திருக்கலாம். தமிழக நலனில் கருத்து செலுத்துவதுபோல் காட்டிக் கொள்ளுவதால், தமிழக மக்கள் நலனுக்காக அக்கருத்தை மறுத்து வழக்காடுமொழியாகத் தமிழை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கலாம்.
குடியரசுத்தலைவர், தீர்ப்புகள் தமிழில் வரவேண்டும் என்பனபோல் பேசி வருவதால் மக்கள் மொழிகளை மதிக்கும் அவரிடம் சிக்கலை எடுத்துரைத்து அவரது ஒப்புதலைப் பெற்றுத் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடுமொழியாக அறிவித்து இருக்கலாம்.
ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அடிப்படை உரிமைகளை ஒவ்வோர் இந்திய குடிமகனுக்கும் வழங்குவதாகக் கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அடிப்படைஉரிமைகளை வழங்க மறுக்கிறதே! அப்படியானால், இந்தியஅரசு தமிழர்களுக்கான அரசு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழ் மக்களுக்கான மொழி உரிமையை இந்திய அரசு வழங்க மறுக்கிறதே! இந்திய அரசுக்குத் தமிழர்கள் அயலவர்கள் எனக் கருதலாமா?
தமிழர்களுக்கான மொழிச்சமநிலை வழங்கப்படாததால் அதற்கான தகுதியற்றவர்கள என இந்திய அரசு கருதுவதாக நம்பலாமா? இதன் மூலம் தமிழர்களுக்கான அரசு இந்திய அரசு அல்ல என மத்திய அரசு சொல்லாமல் சொல்வதாக அறிவிக்கலாமா?
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளதா? இல்லையா? என மத்திய அரசு அறிவித்தால் நாம் முடிவெடுக்க எளிதாகும்! நாம், நமக்கான மொழி உரிமையைக் காக்க சரியான வழியை தேர்வு செய்து, அதனை நோக்கிச்செல்வோம்!
குவியாடி
 இஎதமிழ்