எழுவர் விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுவர் விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 அக்டோபர், 2020

எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

 






எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

இலக்குவனார் திருவள்ளுவன்


அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு தமிழக அரசை மனமாரப் பாராட்டுகிறோம்!

மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் முதலான மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் காலங்கடத்திக் கொண்டு உள்ளார். இதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினரும் சட்ட வரைவில் கையொப்பமிட ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால், அவர் இதனை பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியினரும் ஆளுநர் மாளிகை முன்னர் கண்டனப் பேரணி நடத்தினர்.

இச்சட்டவரைவில் ஒப்பமிட ஆளுநருக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் அனுப்பியிருந்தார். அதற்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 4 வாரக் காலம் தேவைப்படுவதாகக் காலத்தாழ்ச்சி செய்தார்.

அரசுப்பள்ளி மாணாக்கர் நலன் பாதிப்பு கூறுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களாட்சியைக் காப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிந்தது.

மருத்துவப் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையைச் சேர்ந்த இராமகிருட்டிணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் பின்வருமாறு தெரிவித்தனர்:

“7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்டவரைவில், ஆளுநர் மனச்சான்றின்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. பொதுத் (நீட்டு) தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், இன்றியமையாமை, அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டமன்றத்தில், இந்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாகப் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் காலவாய்ப்பு தேவையா?

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய சட்ட வரைவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் காலம் கேட்பது விந்தையாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது எனச் சட்டத்தில் உள்ளது.

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு நடுநிலையுடன் நன்காய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எனினும் ஆளுநர் மாணாக்கர் நலன் குறித்தோ மக்களாட்சி மாண்பு குறித்தோ கருதிப் பார்க்கவில்லை.

ஆனால், மாணாக்கர் நலனில் கருத்து செலுத்தித் தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்டவரைவு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு தொடங்கியதாலும் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நல்ல முடிவெடுத்துள்ள முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள்.

மரு.இராமதாசு தெரிவித்துள்ளதுபோல் இந்த ஆணைக்குச் சட்டப் பாதுகாப்பு பெறவும் ஆளுநர் முடிவிற்குக் காலவரையறை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் இராசீவுகாந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுப் பன்னெடுங்காலம் சிறையில் துன்புறும் எழுவரையும் விடுதலை செய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

சட்டமன்றத் தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

19.02.2014-இல் கூடிய அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

உள்ஒதுக்கீட்டு ஆணைபோல் எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதனால் எழுவரும் எழுவர் குடும்பத்தினரும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டுவர். நிறைந்த உள்ளத்துடன் குவியும் பாராட்டு வெற்றி மாலைகளை முதல்வர் எடப்பாடி க.பழனிசாமிக்குச் சூட்டும்.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(திருக்குறள் – 1022)

30.10.2020 12 : 34  பி.ப.

இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

அகரமுதல

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை

திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !


 எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!
 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும்  என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.
  திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.
  இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது.  எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?
  அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.
  இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.
 பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!
11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி  சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.
ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.
இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
  அது மட்டுமல்ல.  தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
  நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார்.   கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.
  காங்கிரசுக் கட்சியின் செய்தித்  தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலாசெய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?
  2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன.  பாசக தலைவர்களும்  தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல்  தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?
  இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும்.  பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர்.  மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.
“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக,  தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.
– குவியாடி

வியாழன், 6 செப்டம்பர், 2018

நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.

 

இராசீவு கொலை:

அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத்

தமிழக அரசிற்கு முழு அதிகாரம். 

உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு

  21.05.1991 இல் நடைபெற்ற இராசீவு கொலையில் உண்மைக் குற்றவாளிகளைவிட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டித்துள்ளனர். இவர்கள் விடுதலைக்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் மத்திய அரசுகளின் சதியால் பயனற்றுப் போயிற்று.
  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர். இதில் முடிவெடுக்கக் காலத்தாழ்ச்சி ஆனதை முன்னிட்டு இவர்கள் தண்டனையை வாணாள் தண்டனையாக மாற்றி 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்ளித்தது. இவர்கள் விடுதலை குறித்து அரசு கருதிப்பார்க்கவும் தீர்ப்பளித்தது.
  இம்மூவருடன் வாணாள் சிறைவாசிகளாக இருந்த நளினி, இராபர்ட்டு பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய நால்வரையும் சேர்த்து எழுவரையும்  விடுதலை செய்ய செயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்தது. மத்தியில் இருந்த பேராயக்கட்சியான காங்கிரசும் இப்போது இருக்கும் பா.ச.க.வும்  உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என அப்பாவிகள் விடுதலை ஆவதற்கு எதிர்ப்பாக இருந்தமையால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
 இவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு 2 மடல்கள் எழுதியது. ஆனால் மத்தியக் குளத்தில் வீசப்பட்ட கற்களாக இவை அமிழ்ந்தன.
அப்போதைய காங்.அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு விடுதலைக்கான இடைக்காலத் தடை பெற்றது. இவ்வாறான அரசியல் யாப்பு அமர்வின் தீர்ப்பிற்கு எதிராகத்  தமிழக அரசு மறுஆய்வு முறையீட்டை அளித்தது.
  நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுவரின் தொடர் முறையீடுகளாலும் தமிழக அரசின் மடல்கள், முறையீடுகளாலும் இதுவரை பயனில்லாமல் இருந்தது.முந்தைய சீராய்வு முறையீட்டு வழக்கில் மத்திய அரசு 3 மாதங்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 கடந்த ஏப்பிரல் 18 இல் எழுவரையும் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
 இருப்பினும் உச்சநீதிமன்ற அமர்வு நடுநிலையுடன் ஆராய்ந்து எழுவரையும விடுதலை செய்வதற்குத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளது.
 முன்பே தமிழக அரசு எழுவர் விடுதலைக்குப்பரிந்துரைத்து ஆளுநருக்குக் கோப்பு அனுப்பியதன் அடிப்படையிலேயே ஆளுநர் விடுதலைக்கு ஒப்பமிடலாம். அல்லது இன்றே ஆளுநருக்கு மற்றொரு தீர்மானம் அனுப்பி விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் இந்த எழுவருக்கும் ஆளுக்கு ஒரு  கோடி உரூபாய் உதவித் தொகையாக அளிக்க வேண்டும்.  விடுதலை பெற்ற சிறைவாசிகள் சங்கம் மூலம் இவர்கள் கேட்கும் உதவிகளை அளித்தல் வேண்டும்.
 இவ்விடுதலைக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
  20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இசுலாமியர் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
  இவர்களுக்கும் இவர்களுக்கு அளிப்பதுபோன்ற மறுவாழ்வு உதவிகள் அளிக்க வேண்டும்.
  இவர்களின் விடுதலைக்குக் காரணம் மேனாள் முதல்வர் செயலலிதா எடுத்த விடுதலை முடிவு என்பதால்  இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
  விடுதலைக்குப் பின்னர அமைதியான மகிழ்வான வாழ்வு பெற எழுவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
நல்ல தீர்ப்பு வழங்கிய உச்சநீதிபதிகளுக்குப் பாராட்டுகள்!
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (திருவள்ளுவர், குறள் 571)