திங்கள், 18 ஜூன், 2012

சிறையில் தமிழ் வகுப்பு எடுக்கும் சா.இராசேந்திரன்

10 ஆம் வகுப்பு படித்த 12 ஆம் வகுப்பு ஆசிரியர்!



பிளஸ் டூ தேர்வு முடிவு. தேர்வு எழுதிய தமிழகச் சிறைக் கைதிகள் 35 பேரும் வெற்றி. படிக்கும் நேரத்தில் படிக்க முடியாமல், பல்வேறு சூழ்நிலைகளால் சிறைக்கு வந்தவர்கள், இப்போது வெளியில் உள்ள மாணவர்களைப் போல நன்றாகப் படிக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புழல் சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தேவராஜ் 365 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். வெளியில் பள்ளியில் படிக்கும் அவர் மகள் வனிதாவோ 294 மதிப்பெண்கள்தாம் எடுத்திருந்தார். இப்படி மூக்கில் விரலை வைத்து வியக்கும் படியான செய்திகள்.சிறையில் உள்ள கைதிகள் எப்படிப் படிக்கிறார்கள்? அவர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள்? சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லித் தரும் சா.ராசேந்திரனைச் சந்தித்தோம்:""நான் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் சொல்லிக் கொடுக்கிறேன். 2007 இல் நான் எங்கள் ஊரில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் ஒன்றில் தன்னம்பிக்கையை வளர்ப்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். அந்தக் கூட்டத்துக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமாரும் வந்திருந்தார். என் பேச்சைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ""இவ்வளவு நன்றாகத் தமிழ் பேசும் நீங்கள் ஏன் சிறைக் கைதிகளுக்கு தமிழ்ப் பாடம் நடத்தக் கூடாது?'' என்று கேட்டார். நானும் ஒத்துக் கொண்டேன். அன்றைய சிறைத் துறைத் தலைவர் ஆர்.நடராஜ் அவர்களின் அனுமதியுடன் நான், அறிவொளி இயக்க வளர்கல்வி திட்ட ஆசிரியராகச் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்குப் பாடம் நடத்தத் தொடங்கினேன்.எழுதப் படிக்கத் தெரியாத கைதிகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவுடன் 8 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதினார்கள். அப்படியே 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் கைதிகளுக்கும் தமிழ்ப் பாடம் நடத்தினேன்.நன்கு படித்தவர்கள் சூழ்நிலை காரணமாக சிறைக்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து தமிழ் தவிர பிற பாடங்களுக்கு வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். இப்படி நாங்கள் கைதிகளுக்குக் கற்றுக் கொடுத்தது வீண் போகவில்லை. 2007 -2008 ஆண் ஆண்டில் 8 - 10 மற்றும் 12 வகுப்புகளில் மொத்தம் 29 பேர் தேர்ச்சி பெற்றனர். 2008 - 2009 இல் 46 மாணவர்களும், 2009 -2010 இல் 82 மாணவர்களும், 2010 -11இல் 75 பேரும் தேர்ச்சி பெற்றனர்.இப்போது 25 வயதுக்கு மேல் உள்ள பல கைதிகள் படிக்கிறார்கள். இப்படிப் படிக்கும் மாணவர்களின் வாழ்நாள் சிறைத்தண்டனை அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சிறையை விட்டு வெளியே சென்றதும் அவர்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்தி நேர்மையான வழியில் பிழைக்கவும் முடியும். கைதிகளுக்கு நான் முதலில் திருக்குறளைத்தான் கற்றுக் கொடுப்பேன். திருக்குறளைக் கற்று அதைச் சரியானபடி பயன்படுத்தாததுதான் நமது இன்றைய எல்லாத் துயர்களுக்கும் காரணம் என்பது என் கருத்து.சொன்னால் வியப்படைவீர்கள். நான் படித்தது வெறும் 10 ஆம் வகுப்புதான். சொந்த ஊர் செந்துறை. மாணவப் பருவத்தில் கல்வியில் ஆர்வமின்றி சுற்றித் திரிந்த நான், ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் திருந்தி படிக்க ஆரம்பித்தேன். காரணம், என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் பலர், நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது, கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆசிரியராக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். இது என்னை மாற்றியது.சங்க இலக்கியங்களைக் கசடறக் கற்றேன். பெருஞ்சித்திரனார், பொற்கோ போன்ற அறிஞர்களின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. அது என்னை வளர்த்தெடுத்தது. அதனால் இப்போது நான் பிளஸ் டூ பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். சிறைக் கைதிகளுக்குப் பாடம் நடத்தும்போது கிடைத்த அனுபவங்கள் பல. கைதிகளின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது என்பதால் நிகழ்வுகளை மட்டும் இங்கே நான் சொல்கிறேன். நான் தமிழ்ப் பாடம் நடத்தி முடித்தவுடன் என் வகுப்பில் இருந்த கைதி ஒருவர் என்னிடம் வந்து கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார். அவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 3 ஆசிரியர்கள் ஏதோ பிரச்னை காரணமாக சிறைக்குள் இருக்கிறார்கள். என் வகுப்பில் அவர்கள் பாடம் கேட்பார்கள். திருக்குறளின் பெருமையை விளக்கி பாடம் நடத்தி முடித்தவுடன், அவர்கள் என்னிடம் சொன்னார்கள்: ""திருக்குறளை இப்படி நன்றாகப் புரிந்து கொண்டிருந்தால் சிறைக்கே வந்திருக்கமாட்டோம்''இதில் என்ன வேடிக்கை என்றால், அவர்களிடம் மாணவனாகப் பயின்ற 45 வயதுடைய கைதியும் அவர்களுடன் சேர்ந்து என் வகுப்பில் பயின்று வருகிறார். மாணவர் ஆசிரியரை அடையாளம் கண்டு கொண்டு தன்னை அறிமுகப்படுத்தியபோது ஆசிரியருக்கு அந்த சிறுவயதில் பார்த்த மாணவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.ஒரு கைதி. அவர் மீது 13 க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருந்தன. அதில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். இப்போது முற்றிலும் மாறிவிட்டார். வயது 48 இருக்கும். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வில் 617 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். சிறையில் அவரை ஓய்வறை, தியான மண்டபம், நூலகம், பள்ளிக்கூடம் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. பிற மாநிலக் கைதிகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறேன். தமிழைத் தவிர பிற மொழிகள் எவையும் எனக்குத் தெரியாது. கைதிகளுக்கும் அவர்களுடைய தாய்மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இருந்தாலும் கொல்கத்தாவைச் சேர்ந்த கைதி ஒருவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தேன். அவர் 10 வகுப்பில் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். இந்த நான்கைந்து ஆண்டுகளில் 400 பேருக்கும் மேல் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். சிறையில் ஆசிரியராக வருவதற்கு முன்பு கைதிகளைக் கொடூரமானவர்கள் என நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த கருத்தை அடியோடு மாற்றிக் கொண்டிருக்கிறேன். கைதிகளை இல்லவாசி என்றும், சிறைக் கண்காணிப்பாளரை இல்லத் தந்தை என்றும் அழைக்கும் பழக்கம் இப்போது உள்ளது. கைதிகளுக்குத் தண்டனை கொடுக்க அல்ல சிறைச்சாலை, அவர்களைப் பண்படுத்தவே என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக