ஞாயிறு, 4 நவம்பர், 2012

மும்பைப் பார்வை ... -எல்.முருகராசு

மும்பை ப் பார்வை ... -எல்.முருகராசு

எப்போதாவது மழை பெய்யும் சென்னையை விட்டு எப்போதும் மழை பெய்யும் மும்பைக்கு கடந்த வாரம் ஒரு அவசர பயணம். ஒரு வித்தியாசமான மாற்றம் யாதெனில் இந்த முறை சென்னையில் புயல் மழை, அதிசயமாக வானிலை அறிக்கை சொன்னபடியெல்லாம் பெய்தது, அந்த மழைக்கு நடுவிலும் பயணப்பட்டு மும்பை போனபோது அங்கே மழை இல்லை மாறாக 31 டிகிரியில் வெயில் வறுத்தெடுத்தது.
என்ஜினும் நாலு சக்கரமும் மட்டும் சரியாக இருக்கும் நிலையில் மும்பையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக ஒடிக்கொண்டிருந்த பிரிமியர் பத்மினி (பழைய பியட்) கார்களை எல்லாம் பெருமளவில் ஒழித்துகட்டிவிட்டு, சான்ட்ரோ கார்களை டாக்சியாக பயன்படுத்துகின்றனர். கதவுகளை சாத்திவிட்டு அதை இழுத்து பிடித்தபடி பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் சாண்ட்ரோவில் சந்தோஷமாக பயணிக்க முடிந்தது.
சமீபத்தில்தான் டாக்சி கட்டணங்களை எல்லாம் உயர்த்தியுள்ளதால் இறங்கியதும் மீட்டர் கட்டணத்துடன் இன்னொரு அட்டவனை அட்டையை காண்பித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனாலும் இந்த கட்டணமும் சென்னையின் கட்டணத்தைவிட குறைவுதான். கட்டணம் 193 ரூபாய் என்றால் இருநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு மீதம் ஏழு ரூபாயை கொடுத்துவிட்டே செல்கின்றனர்.

சென்னையின் மக்கள் தொகை இன்றைய தேதிக்கு 50 லட்சத்து 8 ஆயிரத்து 763 பேராகும். மும்பையில் இதைவிட நான்கு மடங்கு அதிகம் அதாவது 2 கோடியே5 லட்சமாகும். ஆனாலும் போக்குவரத்து நெரிசல், தண்ணீர், மின்சாரம் மற்றும் விநியோக நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகிக்கின்றனர்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பழைய ஆட்கள் எல்லாம் 16 மணி நேர மின்வெட்டிற்கு நடுவே எப்படி வாழ்கிறீர்கள் என்று நம்மை விசாரிக்கும் மற்றும் பார்க்கும் தொனியில் "அவதார்' பாணி தெரிகிறது.

சென்னையில் நெரிசலை தீர்க்க மெட்ரோ, மோனோ, புதிய பாலங்கள் என்று என்னவெல்லாம் கொண்டுவர உள்ளனர். ஆனால் இதைவிட நான்கு மடங்கு பெரிதான மும்பையில் இந்த மெட்ரோ, மோனோ என்று எதுவும் கிடையாது. மின்சார ரயிலை மட்டுமே வைத்து எப்படி சமாளிக்கிறார்கள் என்றால் கிரேட்டர் மும்பை, நியூ மும்பை என்று புறநகர் பகுதிகளை விரிவு படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டதால் நெரிசலை சமாளிக்கமுடிகிறது. உண்மையில் இது மாதிரியான காரியங்களை செய்தாலொழிய சென்னையின் நெரிசலை இந்த மெட்ரோவும், மோனோவும், புதிய பாலங்களும் குறைக்க போவதில்லை.
மின்சார ரயில் எல்லா இடங்களுக்கும் போகிறது, போகும் போதே அடுத்துவரும் நிலையம் எது என்று சொல்கிறது, ஆங்கிலம் பேசுவதைவிட இந்தி பேசினால் அழகாக வழி சொல்கிறார்கள், மராட்டி பேசினால் கையைபிடித்துக்கொண்டு போய் போகவேண்டிய இடத்திலே கொண்டு போய் விடுகின்றனர். அந்த அளவிற்கு தாய் மொழியான மராட்டி மொழி மீது பக்தியும், பாசமும் கொண்டுள்ளனர்.

மும்பையில் நிறைய இடங்கள் இருந்தாலும் கேட் வே ஆப் இந்தியா என்னோட பேவரிட் சாய்ஸ். காரணம் அங்குள்ள புறாக்களுக்கு இரை வாங்கிச் சென்றால் அது நம் தோளிலும், கையிலும் உட்கார்ந்து கொண்டு மிக அன்னியோன்யமாக இரை எடுத்துக் கொண்டு நம்மை மிகவும் சிநேகத்துடனும், நன்றியுடனும் பார்த்து செல்லும்.
ஆனால் இந்த முறை பறவைகள் பழைய சிநேகத்துடன் இல்லை, பக்கத்திலே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த தாஜ் ஒட்டல் இருக்கிறது, புறாக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லையோ என்னவோ.

சம்பவம் நடந்த பிறகு நம்ம ஊர் போலீஸ் காட்டும் வேகத்திற்கு இணையே இல்லை, அதற்கு மும்பை போலீசும் விதிவிலக்கில்லை, மும்பை கேட் வேயில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் திடீரென நடுக்கடலில் துப்பாக்கி சூடு நடத்தி தாங்கள் உஷார் நிலையில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக எலிபெண்டா தீவுகளுக்கு படகு போக்குவரத்து ‌சொன்னபடி நடப்பது இல்லை, காத்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 20 ரூபாய்க்கு போட்டோ என்று எடுத்து தரும் புகைப்படக்கலைஞர்கள் கூட்டம் மட்டுமே நூறு பேருக்கும் மேல் இருப்பார்கள், இந்தியா முழுவதும் இருந்து வேறு வழியின்றி அன்றாடம் வந்து சேரும் பலரை வாழவைக்கும் மும்பை இவர்களை மட்டும் கைவிட்டுவிடுமா என்ன?
-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக