அரசு உதவியின்றி100 கி.மீ., சாலை:சாதித்த இளம் ஐ.ஏ.எஸ்.,
அரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து, தங்களது துணிச்சலான
நடவடிக்கைகள் மூலம்,ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களின் கவனத்தை
கவர்கின்றனர்.இந்த வகையில், கிரானைட் சுரங்கங்கள் கொள்ளை போவதை,
வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மதுரை கலெக்டர் சகாயம்; காங்கிரஸ் கட்சி
தலைவர், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நடத்திய சட்ட விரோத நில
பரிமாற்றத்தை தடுத்து நிறுத்திய அசோக் கெம்கா என, சாதிக்கும் ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள் பட்டியல் நீளுகிறது.
பிரமிக்க வைத்துள்ளார்
இந்த வரிசையில், அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல், மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 100 கி.மீ., தூரத்துக்கு, சாலை அமைக்க ஏற்பாடு செய்து, பிரமிக்க வைத்துள்ளார் ஆம்ஸ்ட்ராங் பமே.
இவர், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில், நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களின், பல நாள் கனவை நனவாக்கியுள்ளார்.மணிப்பூர் மாநிலம், டமீங்லாங் மாவட்டத்தில்,நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை வசதி இல்லை . இங்கு சாலைகள் அமைக்க,1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை. கடந்தாண்டு, டிசம்பர் மாதம், மணிப்பூருக்கு வந்த அமைச்சர் சிதம்பரம், சாலைகள் அமைக்காதது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்தார்.உடனடியாக, துவங்கிவிடும் என மாநில அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகும், சாலைகள் அமைக்கப்படவில்லை.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால், டமீங்லாங் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
மலைப்பாங்கான பிரதேசம் என்பதால், பக்கத்து ஊரில் இருந்து டாக்டர்கள் கிராமங்களுக்கு வர மறுத்தனர். டமீங்லாங் மாவட்ட துணை கலெக்டராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தன் டாக்டர்கள் நண்பர்களின் உதவியை நாடினார்.
உயிர் பிழைத்தனர்
இதில், தோழி ஒருவர் உதவ முன்வந்தார். அவர் டமீங்லாங்கில் தங்கி சிகிச்சை அளிக்க வசதிகளை செய்து கொடுத்தார். அவர் உதவியால், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். பலரும் உயிர் பிழைத்தனர்.
மக்கள் பட்ட அவதியை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங், சாலைகள் அமைத்தால்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என உணர்ந்தார். கிராம மக்களின் துணையுடன் செயலில் இறங்கினார். டில்லி பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ள, தன் சகோதரர் உதவியுடன் ஆம்ஸ்ட்ராங் சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டார்.வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் நிதியுதவி செய்தனர். மேலும், அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல உள்ளம் படைத்த, சக அதிகாரிகளின் உதவியுடன், 100 கி.மீ., தூரத்திறகு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் கிறிஸ்துமசுக்குள் பணிகள் முடிந்துவிடும் என, ஆம்ஸ்ட்ராங் பமே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சொந்த மாவட்டம்
மணிப்பூரின் தொலைதூர கிராம் ஒன்றில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற்று வரும், முதியவர் ஒருவர், தன் ஒரு மாத பென்ஷனை வாரிக் கொடுத்துவிட்டு, சாலை வசதியை பார்க்க ஆவலாக உள்ளார். "என் ஆயுளுக்குள் எப்படியாவது, ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிடவேண்டும்' என்கிறார் அந்த முதியவர்.
ஆம்ஸ்ட்ராங் பமே, 2005ம் ஆண்டுதான், டில்லி, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜெமி பழங்குடியினத்தை சேர்ந்த, முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமையுடன், தன் சொந்த மாவட்டமான டமீங்லாங்கிற்கு , துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது கவுகாத்தி செய்தியாளர், தினமலர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக