பறவைகளுக்காக ப் பட்டாசு வெடிக்காத சிற்றூர்- எல்.முருகராசு
கோவை மாவட்டம் சூலூர் தாலூகவில் கருமத்தம்பட்டி-அன்னூர் ரோட்டில் ஒதுங்கிக்கிடக்கும் அருமையான சிறியகிராமம்.
இந்த
கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் உள்ளன,அனைவரும் இன்று எடுத்த
ஒரு அருமையான முடிவுதான் இந்த கட்டுரையை எழுத தூண்டியது.
அது என்ன முடிவு என்கிறீர்களா?
கிராமத்தில்
விருந்தினர் போல வந்து தங்கியிருக்கும் வவ்வால் மற்றும் நைட் ஹெராயின்,
புல்புல், இக்ரெட், மைனா உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களுக்கு தொந்திரவாக
இருக்கும் என்பதால் வரவிருக்கும் தீபாவளிக்கு யார் வீட்டிலும் பட்டாசு
வெடிப்பது இல்லை என்பதுதான் அந்த முடிவு,
இதற்கு முக்கியமான காரணமாக இருப்பவர் இங்குள்ள நொய்யல் பசுமை கழக தலைவர் பழனியாண்டிதான். அவர் தமது கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கன வவ்வால்கள் இருப்பதையும், அருகாமையில் உள்ள மரங்களில் மற்ற பறவைகள் தங்கிச் செல்வதையும் பார்த்திருக்கிறார்,
எப்போதும் வித,விதமான சத்தத்துடன் இருக்கும்
இந்த பறவைகளின் சுறு,சுறுப்பு காரணமாக இந்த மரங்கள் மட்டுமல்ல, தமது
கிராமமே உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தார்.
தனது உறுப்பினர்களுடன் இதே போல பக்கத்து ஊரிலும் பறவைகள் இருப்பதாக அறிந்து பார்க்க போனபோது,அங்குள்ளவர்கள், " இருந்ததுங்க, ஆனால் தீபாவளியன்னிக்கு பட்டாசு போட்ட போது பயந்து போய் எல்லாம் பறந்து போனதுதான் அப்புறம் திரும்ப வரவேயில்லீங்க'' என்றதும் அப்போதே தனது கிட்டாம்பாளையம் கிராமத்து பறவைகளை பாதுகாக்க ஊரில் பட்டாசு வெடிப்பதில்லை என்பதை முடிவு செய்தார்.
ஆனால்
தான் தனிப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை, ஊரார்
ஒத்துழைப்போடு நடத்த வேண்டிய விஷயமாயிற்றே என்று தனது நண்பர்களுடன்
சிலருடன் சேர்ந்து பறவைகள் கிராமத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
குறித்து ஒரு துண்டுபிரசுரம் அடித்து அதனை வீடு,வீடாக போய்
விநியோகித்ததுடன், போதுமான விளக்கமும் கொடுத்துவிட்டு கடைசியாக பட்டாசு
வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பட்டாசு வெடிக்கக்கூடாது அவ்வளவுதானே,நம்ம பறவைகளுக்காக செஞ்சுட்டாப் போச்சு என்று அனைவரும் சொன்னதுமே தீபாவளியின் ஆனந்தம் அப்போதே வந்துவிட்டதை உணர்ந்தார்.
இந்த
கிராமத்து பஞ்சாயத்து தலைவி ஜோதிமணி பேசும்பொழுது.,ஆயிரக்கணக்கான
வவ்வால்கள், ஊர் மத்தியில இருக்கிற ஆலமரத்துல இருக்கு,இதுனால ஒரு
தொந்திரவும் கிடையாது,மாலை ஐந்து மணிக்கு மேல் பறந்து சென்று இரை
தேடிவிட்டு அதிகாலை 4 மணி போல திரும்பவரும். இந்த பறவைகள் எவ்வளவு
பிரியமும்,நம்பிக்கையும் இருந்தால் எங்கள் கிராமத்தை தேர்வு செய்து
தங்கியிருக்கும்.,ஆகவே அதன் நம்பிக்கையை மட்டுமல்ல சந்தோஷத்தையும்
கெடுக்கவிரும்பவில்லை,ஆகவே இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை என்று
முடிவு செய்தோம் என்கிறார்.
வழக்கம் போல புத்தாடை உடுத்தி,இனிப்பு
சசாப்பிட்டு உறவுகளையும்,நட்புகளையும் பார்த்து மகிழ்ச்சியை
பகிர்ந்துகொள்ளப்போகிறோம்,பட்டாசு வெடிக்காதது ஒன்றும் பிரச்னை இல்லை என்று
சொன்ன கிராமத்து பெரியவர்கள் பறவைகள் மீது வைத்துள்ள நேசத்தை பார்த்து
நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போய் வாழ்த்து சொன்ன போது.,"உண்மையில் வாழ்த்து
சொல்லவேண்டியது நம் கிராமத்து பையன்களுக்குதான் ,ஏன்னா...நம்மூர்ல பட்டாசு
விடக்கூடாது,பறவை எல்லாம் பறந்து போய்விடும்,அதுனாலே பட்டாசு விடணும்னு
விரும்புற பயலுக பக்கத்து ஊர்ல இருக்க சொந்த,பந்தம் வீட்டுக்கு
போகலாமான்னு கேட்டபோது ,அதெல்லாம் வேண்டாம்,நம்ம ஊர் பறவைகளைவிட பட்டாசு
பெரிசுல்ல நாங்க தீபாவளிக்கு இங்கேயே இருக்கோம்..நம்ம பறவைகளோடயே
இருக்கோம்'' என்று சொல்லிவைத்தாற் போல சொன்ன இந்த ஊர் சிறுசுகள்தான்
உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றனர்.
அதுனால என்ன அவர்களையும் ஒகோன்னு வாழ்த்திடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக